குத்தாட்டம் போடத் தயாரான ஓவியா

எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கா விட்டால் என்னதான் செய்யமுடியும்? கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. தற்போது நடிகை ஓவியாவின் நிலைமையும் இதுதான். ‘களவாணி’யில் நாயகியாக அறிமுகமாகி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அவர், பிறகு தெலுங்கு திரையுலகிலும் கால்பதித்தார். தற்போது அருள்நிதி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இரு நாயகிகளில் ஓவியாவும் ஒருவர். இந்நிலையில் தொடர்ந்து நாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் அமையவில்லையாம். இதனால் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறாராம். இப்படத்தில் நாயகியாக நடிப்பவர் ரெஜினா. “ஒரு பாடலுக்கு நடனமாடுவதால் என் மதிப்பு குறைந்துவிடாது. நடிகை என்பவர் எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் தன் திறமையை நிரூபிக்கவேண்டும். அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்,” என்கிறார் ஓவியா.