தணிக்கைக் குழுவினர் பாராட்டிய ‘மகளிர் மட்டும்’

‘மகளிர் மட்டும்’ படத்திற்குத் தணிக்கைத் துறை ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளது. ‘குற்றம் கடிதல்’ இயக்குநர் பிரம்மா கைவண்ணத்தில் உருவாகியுள்ள படம் இது. ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவரது கணவரும் நடிகருமான சூர்யாதான் இதன் தயாரிப்பாளர். ஜோதிகாவுடன் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா, நாசர், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அண்மையில் முடிவடைந்த நிலையில் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக எடுத்ததற்காக தணிக்கைக் குழுவினர் பாராட்டியதாகவும் ‘மகளிர் மட்டும்’ குழுவினர் தெரிவித்துள்ளனர்.