பிறர்க்கு உதவவேண்டும் - கார்த்தி

கடந்த 38 ஆண்டுகளாக நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்களுக்குத் கல்வி உபகார நிதி அளித்து வருகிறார் நடிகர் சிவகுமார். இந்த நல்ல காரியத்தில் தனது மகன்களையும் ஈடுபட வைத்துள்ளார். நேற்று முன்தினம் படிக்க வசதியில்லாத ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த 22 மாணவர்களுக்குத் தலா 10,000 ரூபாய் வழங்கியுள்ளது சிவகுமார் பெய ரில் இயங்கும் அறக்கட்டளை. இந்த நிகழ்வில் சூர்யா, கார்த்தி இருவருமே பங்கேற்றனர். இந்த 22 பேரைத் தவிர இந்தாண்டு மேலும் ஐநூறு மாணவர்களுக்கு இதே அறக்கட்டகளை உதவி செய்திருக்கிறது என் பது கூடுதல் சிறப்பு. இந்நிகழ்வில் பேசிய கார்த்தி, வாழ்க்கையில் கீழ் நிலையில் இருப்பவர்கள் மேலே வருவதற்குப் பெரும் பலம் தேவை என்றார்.

அந்தப் பலம் நம்மிடமே உள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றும் அவர் கூறினார். “மேலே இருப்பவர்கள் கீழே சென்றால் மறுபடியும் மேலே வருவதற்கு பலம் வேண்டும். ஆனால், கீழே இருப்பவர்கள் மேலே வருவதற்கு பெரும் பலம் தேவை. அந்த பலம் உங்களிடமே தான் இருக்கிறது. “நான் இதில் சாதிப்பேன் என நினைத்தால் கண்டிப்பாக முடியும். சாதிக்கவேண்டும் என்று நம்புங்கள். நமக்கு அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது, செல்வம் இருக்கிறது என்றால் அது அடுத்தவர்களுக்கு கொடுப்பதற்காகத்தான். அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்,” என்று நல்ல கருத்துகளைக் கூறியவர், தன் தந்தை சிறு வயதில் சிரமப்பட்டு முன்னேறியதையும் விவரித்தார்.2017-07-18 06:15:00 +0800