நடிக்கத் தயாராகும் சவுந்தர்யா

படத் தயாரிப்பு, இயக்கம் ஆகிய வற்றைச் செவ்வனே செய்து முடித்துவிட்ட சவுந்தர்யாவுக்கு அடுத்து நடிப்பின் மீதும் ஆர்வம் பிறந்திருக்கிறது. நல்ல கதையும் கதாபாத்திரமும் அமைந்தால் நடிப்பதற்குத் தயங்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். ரஜினியின் மகள் என்பதால் மட்டுமே சவுந்தர்யா வுக்கு கோடம்பாக்கம் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்துவிட வில்லை. உலகளவில் பிரசித்தி பெற்ற நிறுவனத்தின் செயலதிகாரியாகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர், படத் தயாரிப்பில் நன்கு தேர்ச்சி கண்டார். இதையடுத்து பட இயக்கத்தில் கவனம் செலுத்தினார். இந்நேரம் பார்த்து ‘வேலையில்லா பட்டதாரி- 2’ஐ இயக்கும் வாய்ப்பு தனுஷ் மூலம் தேடி வந்தது. தற்போது அப்படம் வெளியீடு காண உள்ள நிலையில், சவுந்தர்யாவின் திறமையை மெச்சுகிறார் தனுஷ். இந்நிலையில் திரையுலகில் தனது அடுத்த கட்ட நகர்வு குறித்து மனம் திறந்துள்ளார் சவுந்தர்யா.

“அதிரடி கலந்த குடும்பப் பாங்கான படமாகத் தயாராகி உள்ளது ‘வேலையில்லா பட்டதாரி 2’. இசைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாக்கி உள்ளோம். எனது இயக்கத்தில் இது முக்கிய படமாக இருக்கும். இதன் மூன்றாம் பாகமும் உரு வாக வாய்ப்பு உள்ளது,” என்று சொல்லும் சவுந்தர்யாவுக்கு அஜித் நடிக்கும் படத்தை இயக்க வேண்டும் என ரொம்ப ஆசையாம். தெலுங்குப் படம் என்றால் அதில் சிரஞ்சீவியை நாயகனாக ஒப்பந்தம் செய்து இயக்க விரும்புவதாகச் சொல்பவர், தற்போது திரையுலகுக்கு வரும் புதிய பெண் இயக்குநர்கள் மிகுந்த திறமைசாலிகளாக இருப்பதாகப் பாராட்டுகிறார். “எனக்கும் நடிக்க வாய்ப்புகள் வந்தன. கதைகள் பிடிக்காததால் நடிக்கவில்லை. நல்ல கதையும் கதாபாத்திரமும் அமைந்தால் சினிமாவில் நிச்சயம் நடிப்பேன்,” என்கிறார் சவுந்தர்யா.