'செக்கச் சிவந்த வானம்' படத்தில் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்குவது நிறைவுபெற்றுள்ளது. மணிரத்னம் இயக்கத் தில் உருவாகும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இதில் சிம்புவுடன் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா என பலரும் நடித்துள்ளனர். முதலில் அரவிந்த்சாமி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.
அதன்பின்னர் மற்றவர்களின் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் கடைசியாக இரு தினங்களுக்கு முன்பு சிம்பு சம்பந்தப்பட்ட பகுதியைப் படமாக்கி முடித்துள்ளனர். இவற்றுள் சில காட்சிகள் செர்பியாவில் படமாக்கப்பட்டதாகத் தகவல். பின்னணிப் பணிகள் முடிவடைந்து இப்படம் விரைவில் திரை காண உள்ளது. சிம்பு குறித்து பல புகார்கள் எழுந்துள்ள நிலையில், தனது படத்தில் நடித்தபோது நூறு விழுக்காடு சிறப்பாகச் செயல்பட்டதாக அவரைப் பாராட்டி உள்ளார் மணிரத்னம்.