தமிழக நிகழ்ச்சியில் வாகை சூடிய மலேசியர் முகென் ராவ்

 ‘பிக் பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியின் மூன்றாம் பருவத்தின் வெற்றியாளராக முகென் ராவ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். மலேசியாவைச் சேர்ந்த முகென்னுக்கு வெற்றியாளர் விருதுடன் 50 லட்ச ரூபாய் (97,246 வெள்ளி) பணமும் கொடுக்கப்பட்டது. சேண்டியும் லோஸ்லியாவும் முறையே இரண்டாம் இடத்தையும் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மக்களின் வாக்குகள் அடிப்படையில், வாரந்தோறும் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேற்றப்படுவதால், பிரபலமான போட்டியாளர்களின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அணிகளை உருவாக்கி  அவர்களுக்காக ஆதரவு திரட்ட முயல்வர். நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்கு இடையே அவ்வப்போது நிகழும் மோதல்களுக்கு நிகராக இந்த ரசிகர் பட்டாளங்களும் சமூக ஊடகங்களின் வாயிலாக மோதுவர்.

24 வயது இசைக்கலைஞராகவும் ஆணழகனாகவும் இருக்கும் முகென், வேறு சில போட்டியாளர்களைப் போல வம்பு தும்பில் சிக்கிக்கொள்ளாமல் பவ்யமாகவும் இனிமையாகவும் நடந்துகொண்டது அவருக்கான மதிப்பைப் படிப்படியாக உயர்த்தியது. பல்வேறு சவால்களுக்குப் பிறகு இறுதிச் சுற்றுக்கு நேரடியாகச் செல்வதற்கான தங்க டிக்கெட்டை முகென் பெற்றுக்கொண்டபோது அவரது ஆதரவாளர்கள் பெரிதும் மகிழ்ந்தனர்.

மாபெரும் இறுதிச் சுற்றுக்கான மேடையில் முகென்னும் சேண்டியும் தங்கத் தேரில் வந்து இறங்கினர். நிகழ்ச்சி நெறியாளர் கமலஹாசன் அவர்களுடன் சற்று கலகலப்பாக உரையாடிய பிறகு, முகெனை போட்டியின் வெற்றியாளராக அறிவித்தார்.

வெளிநாட்டுத் தமிழ்ச் சமூகத்தினரில் பலரைப் போல் முகென் பிறந்தது வசதி குறைந்த குடும்பத்தில். அவர் சைபர்ஜெயாவிலுள்ள லிம் குவொக் விங் பல்கலைக்கழகத்தில் மேடைக்கலையில்  பட்டயம் பெற்றார். மேடைப் பாடகராக இருந்த முகென்னின் தந்தை அவருக்கு ஊக்கமளித்ததாகக் கூறப்படுகிறது.

முகெனின் வெற்றியைத் தொடர்ந்து #mugenrao #mugen என்ற ‘ஹேஷ் டேக்’ தொடர்கள் தற்போது சமூக ஊடகங்களில் பிரபலமாகியுள்ளன.

 

Loading...
Load next