சுடச் சுடச் செய்திகள்

‘எனக்கு சவாலான படமாக இருந்தது’

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழில் வெளியான படம் ‘96’. கோவிந்த் வசந்தா இசையமைத்த இந்தப் படத்திற்கும் இதில் இடம்பெற்ற பாடல்களுக்கும் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இந்தப் படம் கன்னடத்தில் மறுபதிப்பு செய்யப்பட்டது. அங்கும் நல்ல வரவேற்பு பெற்றது.

அதனால் இதன் தெலுங்கு மறுபதிப்பை கடும் போட்டிக்கு இடையே தில் ராஜு கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து பிரேம்குமாரே தெலுங்கு மறுபதிப்பை இயக்க, விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்தும் த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடிக்கப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. தெலுங்கு மறுபதிப்பிலும் கோவிந்த் வசந்தாதான் இசையமைக்கிறார். 

தற்போது ‘96’ தெலுங்கு படப்பிடிப்பு முழுமையடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சமந்தா தனது ‘இன்ஸ்டகிராம்’ பதிவில் “படப்பிடிப்பு முடிந்தது. கடந்த காலங்களைவிட இன்னும் சிறப்பாகச் செயல்பட எனக்குச் சவால்விடும் மற்றொரு முக்கியமான படம் இது. இந்தப் படத்தின் கதாபாத்திரமும் எனக்கு சவாலாகவே இருந்தது. 

“அன்றாடம் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டக்கூடிய ஒரு குழுவுடன் பணிபுரிவது பாக்கியம். எனக்கு மிகவும் பிடித்த குழுவினரான பிரேம்குமார், சர்வானந்துக்கு நன்றி. ஜானுவாக சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எப்போதும் நன்றியுடையவளாக இருப்பேன்,” என்று தெரிவித்துள்ளார் சமந்தா.

இந்தப் படம் 90 கால கட்டத்தில் பள்ளிப்பருவ காதல் மற்றும் நட்பை நினைவுபடுத்தும் விதமாக அமைந்திருந்ததால் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ‘96’ படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமின்றி பல விருதுகளையும் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.