‘அண்ணன் ஆன சேதுபதி’

ஒரு கதாநாயகனும் இயக்குநரும் ஒருவர் மீது மற்றொருவர் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாக  ‘சங்கத்தமிழன்’ படம் உருவாகிறது என்கிறார் இயக்குநர் விஜய் சந்தர்.

இவரைத் தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. சிம்புவின் ‘வாலு’, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களை இயக்கியவர்.

இம்முறை விஜய் சேதுபதியுடன் கூட்டணி சேர்ந்து ‘சங்கத்தமிழன்’ படத்தைக் களம் இறக்குகிறார். திட்டமிட்டதைவிட படம் பெரிய செலவை ஏற்படுத்திவிட்டதாம். 

எனினும் தயாரிப்பாளர் பாரதி கதை மற்றும் படக்குழு மீதான நம்பிக்கை காரணமாக ஏதும் கேட்காமல் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தி ருக்கிறார்.

“செலவிட்ட காசுக்கும் அனைவரது உழைப்புக்கும் பலனாக நல்லதொரு படைப்பை உருவாக்கி இருக்கிறோம். 

“ஒரு வணிகப் படத்துக்குத் தேவையான அனைத்து அம்சங்களுடன் சமூ­கத்துக்குத் தேவையான நல்ல விஷயத்தையும் கடமை உணர்ச்சியுடன் விவரித்திருக்கிறோம். 

“பொதுவாகவே, ஒரு கருத்தைச் சொல்லும் போது பல்வேறு விஷயங்களைக் கவனத்தில் கொள்வேன். அந்த விஷயத்தை அழகாகச் சொல்ல வேண்டும். அது மக்களுக்கும் புரிய வேண்டும். 

“நாம் ஒரு கோணத்தில் சொல்லக்கூடிய கருத்தை மற்றவர்கள் தவறாக நினைத்துக் கொள்ளும் வாய்ப்புண்டு. எனவே, மிகக் கவனமாகத்தான் கருத்துகளைச் சொல்ல வேண்டும். 

“விஜய் சேதுபதியிடம் படத்துக்கான கதையையும் சொல்ல நினைக்கும் கருத்தையும் தெரிவித்தபோது, மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். அவர் என் மீதும், நான் அவர் மீதும் வைத்துள்ள நம்பிக்கைதான் ‘சங்கத்தமிழன்’,” என்கிறார் விஜய் சந்தர்.

‘சங்கத்தமிழன்’ படத்தில் படுகூர்மையான வசனங்கள் இடம்பெற்றிருக்குமாம். மேலும் புரட்சிகரமான பாடலும் உள்ளதாம். தன்னம்பிக்கையையும் ஒற்றுமையையும் வலியுறுத்தும் அந்தப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். சங்கர் மகாதேவன் பாடியுள்ளார். 

இதனால் படத்தில் அரசியல் தூக்கலாக இருக்கும் என்றும், கதையோட்டம் படு சூடாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது உண்மைதானா?

“ஒரேயடியாக அப்படிச் சொல்வதற்கில்லை. தாத்தா, பாட்டி, சித்தப்பா என்று கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவன் நான். உறவுகள் சூழ்ந்து எங்கள் வீடு எப்பொழுதுமே கலகலப்பாக இருக்கும். 

அப்படியொரு கூட்டுக் குடும்பத்துப் பின்னணியில்தான் இந்தக் கதையைச் சொல்லப் போகிறேன். இது குடும்பச் சித்திரமாகவே உருவாகி இருக்கிறது,” என்கிறார் விஜய் சந்தர். 

படத்தில் ராஷி கன்னா, நிவேதா பெத்துராஜ் என இரு நாயகிகள் உள்ளனர். விஜய் சேதுபதியும் சூரியும் போட்டி போட்டுக்கொண்டு நகைச்சுவையில் அசத்தி உள்ளனராம்.

“இன்றைய சூழலில் இப்படியொரு படத்தை எடுப்பதற்கும் நடிப்பதற்கும் தைரியம் தேவை. அந்த வகையில் விஜய் சேதுபதி சார் தைரியத்துக்கும் அவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல், மிகவும் வித்தியாசமான பாணியில் நடித்துள்ளார். அவர் எப்போதுமே இயக்குநர்களின் கதாநாயகன்தான். 

“சேதுபதி சாரை நீண்ட காலமாகவே எனக்குத் தெரியும். என்னைப் பார்க்கும் போதெல்லாம் நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். 

“எப்படியோ ‘சங்கத்தமிழன்’ மூலம் அந்த வாய்ப்பு கைகூடி வந்துள்ளது. படத்திற்காகத் தயாரிப்பாளர் கிடைக்கவும் அவர்தான் காரணம். மற்றவர்களுக்கு அவர் நாயகன் எனில் எனக்கு அண்ணன்,” என்று நெகிழ்கிறார் இயக்குநர் விஜய் சந்தர்.