சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூர் சூழலில் எடுக்கப்பட்ட உள்ளூர் திரைப்படம் ‘டான்-கீ’

வைதேகி ஆறுமுகம்

கடன்பட்டிருக்கும் குடும்பம். தம்மை விட்டுச் சென்ற காதலி. இவற்றுக்கிடையே வேலையில்லாத் திண்டாட்டத்தினால் உறவினரை நம்பி சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குக் கிளம்பி வருகிறார் ஜேக்.

அதிலும் ஏமாற்றத்தைக் காணும் அவர், இங்கும் ஒரு பெரும் பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறார். அது என்ன பிரச்சினை, அதில் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை நகைச்சுவையுடன் அள்ளித் தருகிறது ‘டான்-கீ’ தமிழ்த் திரைப்படம்.

சிங்கப்பூரில் முழுவதுமாக இயக்கப்பட்டு வெளிவந்துள்ள இத்திரைப்படத்தில் வெளிநாட்டுப் பிரபலங்களுடன் உள்ளூர் கலைஞர்களையும் ஊக்குவிக்க பல புது முகங்கள்  அறிமுகமாகியுள்ளன.

‘ஸ்டிரீட் லைட்ஸ் பிக்சர்ஸ் புரடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரான திரு ஜோ ஜியோவானி சர்ஜித் சிங் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். 

மேலும் இயக்கம், வசனம் எனப் பல்வேறு பொறுப்புகளை ஏற்றிருப்பதுடன்  வில்லனாகவும் நடித்துள்ளார்.

முயல், தொப்பி போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ள திரு முரளி ராம் இக்கதையின் கதாநாயகராவார்.

தமிழர் அல்லாத திரு ஜோவின் இக்கதையை தமிழில் எடுப்பதற்கு உதவியுள்ளார் இப்படத்தின் கதாநாயகியான குமாரி நபிசா பேகம். 

இக்கதையில் மற்றொரு கதாநாயகியாக நடித்துள்ளார் குமாரி ஷிரின் காஞ்சுவாலா.

கதாநாயகனின் காதலியாக ரோசி என்ற பெயரில் தோற்றமளித்துள்ள குமாரி நபிசா பேகம் இத்திரைப்படத்தின் வசனங்களை மொழிபெயர்த்ததுடன் ஆடை, ஒப்பனை போன்றவற்றிலும் அதிகமாக ஈடுபட்டுள்ளார்.

அத்துடன் நான்கு பாடல்களைக் கொண்டுள்ள இத்திரைப்படத்தின் இரண்டு பாடல்களையும் இவர் பாடியுள்ளார். ஏற்கெனவே உள்ளூர் வசந்தம் நிகழ்ச்சிகளில் பாடியுள்ள இவர் முதல்முறையாக ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பது சவால்மிக்க ஒன்றாக இருந்ததெனக் கூறுகிறார்.

“முதன்முறையாக நடிப்பது சற்று சவால்மிக்கதாக இருந்தது. குறிப்பிட்ட நேரத்திற்குள் கொடுக்கப்பட்ட வசனங்களை மனப்பாடம் செய்து உணர்ச்சிபூர்வமாக நடிப்பது என்பது சிரமம்தான். 

“ஆனால், நடிப்பின் மீது இருந்த பற்றும், சக நடிகர்களின் ஊக்குவிப்பும் என்னை உற்சாகப்படுத்தியது. இத்திரைப்படத்தில் பல விதங்களில் பங்களித்துள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார் 38 வயதான குமாரி நபிசா. இப்படத்திற்கு பிரவின் பி.டி.எம். இசையமைத்துள்ளார். கிரிஷ், ஹரிச்சரன், அருண் ராஜா காமராஜ்  இப்படத்தில் பாடியுள்ளனர்.

“32 பேர் கொண்ட ஒரு குழு இத்திரைப்படம் முழுவதுமாக எடுத்து முடிப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் ஆயின. இதற்கு கிட்டதட்ட $1.2 மில்லியன்  தொகையை முதலீடு் செய்துள்ளேன்.

“சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் உள்ள நகைச்சுவை மக்களை கவலை மறந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை. 

“வித்தியாசமான கதையைக் கொண்டுள்ள இத்திரைப்படத்தை குடும்பத்தினருடன் கண்டு மகிழலாம்,” என்றார் இப்படத்தின் இயக்குநரான திரு ஜோ, 55.

சிங்கப்பூர் திரையரங்குகளில் நேற்று முதல் திரையிடப்பட்டு வரும்  இந்த உள்ளூர்த் திரைப்படம்   ‘கேத்தே காஸ்வே பாய்ன்ட்’, ‘கேத்தே அங் மோ கியோ ஹப்’, ‘கேத்தே பார்க்வே பரேட்’, ‘கார்னிவல் கோல்டன் மைல் டவர்’ ‘கார்னிவல் ஷா டவர்’, ‘கார்னிவல்  S11 டாமட்டிரி பொங்கோல்’ ஆகிய திரையரங்குகளில் காண்பிக்கப்படுகிறது. 

படம்: பி கே விருமாண்டி