சுடச் சுடச் செய்திகள்

நயன்தாராவைப் பாராட்டும் இளம் நாயகி

பொதுவாக நடிகைகளுக்குள் நேரடியாகவோ மறைமுகமாகவோ போட்டி நிலவும் என்பார்கள். ஆனால், நயன்தாராவை மட்டும் சக நடிகைகள் எந்த வகையிலும் தங்களுக்குப் போட்டியாகக்  கருதாமல் ஏகத்துக்கும் பாராட்டுகிறார்கள். 

அந்த வகையில் நடிகைகளில் உச்ச நட்சத்திரம் என்று  அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாயகியாகிவிட்டார்.  இந்நிலையில் தாம் நயன்தாராவின் தீவிர ரசிகை என்கிறார் ரகுல் பிரீத்சிங். இதை நயன்தாராவிடமே நேரடியாகச்  சொல்லி இருக்கிறாராம்.

“இத்தனை ஆண்டுகாலமாக திரையுலகில் நாயகியாக  நீடிப்பது சாதாரண விஷயமல்ல. அற்புதமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார். 

“பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் மட்டுமல்லாமல், வணிக ரீதியிலான படங்களிலும் அவ்வப்போது நடித்து அசத்துகிறார். 

“நயன்தாரா எதைச் செய்தாலும் அதை ரசிக்க லட்சக்கணக்கான ரசிகர்கள் தயாராக உள்ளனர். அதனால்தான் அவர் படங்கள் வெளியாகும்போது முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க ரசிகர்கள் முண்டியடிக்கின்றனர். இப்படியொரு வரவேற்பு எல்லோருக்கும் வாய்த்து விடாது,” என்று மனம் திறந்து புகழ்கிறார்  ரகுல் பிரீத்சிங்.