சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘ஹீரோ’. இந்தப் படத்தில் அவருடன் அர்ஜூன், அபய் தியோல், கல்யாணி பிரியதர்ஷன், இவானா ஆகியோர் நடிக்கிறார்கள். சிவகார்த்திகேயனுடன் நடிக்கும்போது அவரிடம் ஏகப்பட்ட திறமைகள் மறைந்திருப்பதைக் காண முடிந்ததாகவும் அவருடைய இயக்கத்தில் நடிக்க விரும்புவதாகவும் பிரியதர்ஷன் கூறியிருக்கிறார்.
தமிழ்த் திரைக்கு ‘ஹீரோ’ மூலம் அறிமுகமானதில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் வெகு சிலருக்கே இதுபோன்ற பொன்னான வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார்
கல்யாணி பிரியதர்ஷன். முன்னோட்டக் காட்சியில் ஒரு சில காட்சியிலே அவர் காட்டப்பட்டிருந்தாலும் அவரது அழகும் துள்ளல் உடல் மொழியும் பலரையும் கவர்ந்திழுத்துள்ளது.
‘ஹீரோ’ படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து அவர் கூறும்போது, “நான் ‘மீரா’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ‘மீரா’ மிகவும் முதிர்ச்சியான மனநிலைகொண்ட பெண். எதையும் யோசித்த பின்னர்தான் காரியத்தில் இறங்குவார். நிஜ வாழ்வில் அதற்கு நேர் எதிரானவள் நான். துடுக்குத்தனத்துடன் நினைத்ததை அப்படியே உளறிவிடுவேன்.
“இயக்குநர் பிஎஸ் மித்ரன் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்துவதில் பெரும் திறமைக்காரராக இருக்கிறார். ஒவ்வொரு சிறு காதாபாத்திரத்தையும் கச்சிதமாக படைத்திருக்கிறார். நான் சொல்வதைவிட படத்தைப் பார்த்த பிறகு ரசிகர்கள் அவரை பெரிய அளவில் கொண்டாடுவார்கள்.
“சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனம் கொண்ட மனிதர். படப்பிடிப்பில் உள்ள ஒவ்வொருவரையும் அன்பாக பார்த்துக்கொள்வார். “ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் அவரிடம் ஒரு திறமையான இயக்குநரும் மறைந்திருக்கிறார். ஒரு நாள் அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்,” என்று பெருமையாகப் பேசினார் நாயகி கல்யாணி பிரியதர்ஷன்.
“இந்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ்தான் கிடைக்கும் என்பது எங்களுக்கு ஏற்கெனவே தெரியும். படப்பிடிப்பின் இடையே எந்த ஒரு சர்ச்சைக்குரிய காட்சிகளும் படமாக்கப்படவில்லை என்பதால் குடும்பத்தோடு திரை அரங்கத்திற்குச் சென்று ரசிக்கும் அளவுக்கு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நான் உட்பட படக்குழுவினர் அனைவரும் உறுதி அளிக்கிறோம்,” என்று கூறினார் நாயகி கல்யாணி பிரியதர்ஷன்.
சென்னையில் ரோகிணி திரையரங்கத்தில் நேற்று முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்கிய சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
படம் பார்க்க படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனும் வந்திருந்தார். அவரை நேரில் பார்த்ததும் அவரின் ரசிகர்கள் அவரைக் கட்டித் தழுவி அவருடன் படம் எடுத்துக் கொண்டனர்.