யாஷிகா ஆனந்த் நடித்துள்ள இணையத் தொடர் வரும் புத்தாண்டு துவக்கத்தில் வெளியாகிறது. மேலும் இவர் தமிழில் நடித்துள்ள 3 புதுப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இதனால் இரட்டிப்பு உற்சாகத்தில் வலம் வருகிறார் இந்த ‘பிக்பாஸ்’ பிரபலம்.
“நடப்பாண்டில் எனக்குப் பல நல்ல விஷயங்கள் நடந்தன. 2019ஆம் ஆண்டின் முதல் நாளே அமர்க்களமாக இருந்தது. எனக்கு ரொம்பப் பிடித்த கோவை நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றேன். என் குடும்பத்தாரும் வந்திருந்தனர்.
“ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாகப் புத்தாண்டு மலர்ந்தது. அடுத்து இந்தாண்டு நான் நடித்த ‘ஜாம்பி’ படம் வசூல் ரீதியில் அசத்தியது. என் நடிப்புக்கும் நிறைய பாராட்டுகள் கிடைத்தன. பல புதிய வாய்ப்புகள் தேடி வந்த இந்த ஆண்டை என்னால் மறக்க முடியாது,” என்று சொல்லும் யாஷிகா, முதல் முறையாக கன்னடப் படம் ஒன்றில் நடிக்கிறார்.
மகத்துடன் இவர் நடித்த ‘இவன் உத்தமனா’ தமிழ்ப் படம் கன்னடத்திலும் வெளியாகிறதாம். மற்றொரு ‘பிக்பாஸ்’ பிரபலமான ஆரவ்வுடன் ‘ராஜபீமா’வில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
“இந்தப் படத்தில் எனக்கு சண்டைக் காட்சிகளும் உள்ளன. அடுத்து உமாபதியுடன் சிறுத்தை சிவா படத்தில் எனக்கேற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். எதிர்வரும் புத்தாண்டும் எனக்குச் சிறப்பானதாக அமையும்,” என்று சொல்லும் யாஷிகா, இனி ஒரு பாடலுக்கு நடனமாடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம்.
நடிகர் கிருஷ்ணா தனக்கு நல்ல நண்பர் என்பதால்தான் ‘கழுகு-2’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதாகச் சொல்கிறார். எல்லாம் நல்லவிதமாக நடந்து வரும் நிலையில் அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார் யாஷிகா.
நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராத வகையில் கீழே விழுந்ததில் காலில் அடிபட்டதாம். எனினும் உடனுக்குடன் காயம் ஆறியதால் படப்பிடிப்புகளுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை.
“நான் தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்றது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சண்டைக்காட்சிகளில் நடித்தபோது கூட எனக்குக் கால் இடறியதில்லை.
“இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக இப்படி ஆகிவிட்டது,” என்று சொல்லும் யாஷிகா, கதாநாயகியாக மட்டுமே நடிக்க முடியும் என்றெல்லாம் பிடிவாதம் பிடிப்பதில்லையாம். குணசித்திர வேடங்கள் என்றாலும் சம்மதம் என்கிறார்.
நீங்கள் தொடர்ந்து கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள். கவர்ச்சிதான் ரொம்பப் பிடிக்குமா?
“அப்படியல்ல. கவர்ச்சி என்பது பார்ப்பவரின் மனதைப் பொறுத்தது. இந்தித் திரையுலகில் இப்படிப்பட்ட புகைப்படங்களைத் தொடர்ந்து வெளியிடுவார்கள்.
“கவர்ச்சி என்பதை உள்ளூர உணர வேண்டும். அதைப் பிறரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதில் தவறேதும் இல்லை.
“என்னைப் பொறுத்தவரை ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே முதன்மை விருப்பமாக உள்ளது.
“இத்தகைய வேடங்கள் கிடைக்கும் என நம்புகிறேன்,” என்கிறார் யாஷிகா.