‘மரகதக்காடு’ படம் இன்னும் வெளியாகவில்லை. எனினும் அதன் நாயகி ரக்ஷனாவுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
தற்போது ‘டக்குமுக்கு டிக்கு தாளம்’, ‘கால்டாக்ஸி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருபவர் திடீரென தன் பெயரை அஸ்வினி சந்திரசேகர் என்று மாற்றியுள்ளார்.
பெயரை மாற்றிக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பதில் இவருக்கு நம்பிக்கை இல்லையாம். எனினும் நெருக்கமான தோழிகள் சிலர் பெயரை மாற்றிக்கொண்டு நடித்தால் அதிர்ஷடம் உண்டாகும் எனக் கூறியுள்ளனர்.
அவர்களுடைய வற்புறுத்தல் காரணமாகவே அஸ்வினி என்ற இயற்பெயரை ரக்ஷனா என்று மாற்றிக்கொண்டு சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.
ஆனால், இவர் பணியாற்றிய படங்களின் இயக்குநர்கள் இயற்பெயரே நன்றாக இருப்பதால் அதுவே நீடிக்கட்டும் என்று அறிவுறுத்தினராம். அஸ்வினி கட்டட வரை கலைத் துறையில் பட்டப் படிப்பை முடித்தவர்.
ஆனால் அந்தத் துறையில் வேலை பார்ப்பதற்குப் பதிலாக விளம்பரத் துறையில் சாதிக்க வேண்டும் என விரும்பியிருக்கிறார். இதுவரை 700க்கும் மேற்பட்ட மாடலிங் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்.
“கல்லூரியில் படிக்கும் போது பெங்களூரு, கொச்சி, சென்னை என பல்வேறு நகரங்களில் நடக்கும் அழகிப் போட்டி, விளம்பர நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்பேன்.
“‘மிஸ் கர்நாடகா 2012’, ‘மிஸ் தென்னிந்தியா 2013’ அழகிப் பட்டங்களை வாங்கியுள்ளேன். அந்தச் சமயத்தில்தான் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது.
“ஒருமுறை சென்னையில் நடந்த ஃபேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது நண்பர் ஒருவர் ‘கயல்’ படத்துக்கான நடிகர், நடிகையர் தேர்வு நடப்பதாக தகவல் தெரிவித்து, அதில் பங்கேற்குமாறு கூறினார். அதிகாலை 5 மணிக்கு காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் என்னை வைத்து ஒரு காட்சியைப் படமாக்கினர்.
“என்மீது நம்பிக்கை ஏற்பட்டதால் ‘கயல்’ படத்துக்காக நீச்சல் பயிற்சி பெறவேண்டும், இரண்டாண்டுகள் ஒப்பந்தத்தில் இருக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
“ஆனால், அப்போதுதான் கல்லூரியில் சேர்ந்திருந்தேன். அதனால் இரண்டு ஆண்டு கால ஒப்பந்தம் என்பதை என் வீட்டில் உள்ளவர்கள் ஏற்கவில்லை. முதலில் படிப்பு, பிறகு நடிப்பு என்று திட்டவட்ட
மாகக் கூறிவிட்டனர். அதனால் ‘கயல்’ பட வாய்ப்பைக் கைவிட நேர்ந்தது,” என்று சொல்லும் அஸ்வினி தற்போது ‘கால் டாக்ஸி’க்காக ரொம்பவும் மெனக்கெட்டிருப்பதாகச் சொல்கிறார்.
கதைப்படி இதில் வழக்கறிஞராக வருகிறாராம். நீதிமன்றக் காட்சிகள் அதிகம் இடம்பெறாவிட்டாலும் இவரது கதாபாத்திரத்துக்கு உரிய முக்கியத்
துவம் அளிக்கப்பட்டுள்ளதாம். படம் தொடர்பாக ஏற்கெனவே வெளியான புகைப்படங்களில் சற்று கவர்ச்சியாகக் காட்சியளிக்கிறார் அஸ்வினி.
“பாடல் காட்சிகளில் மட்டுமே கவர்ச்சி சற்றே தூக்கலாக இருக்கும். மற்றபடி இதர காட்சிகளில் கவர்ச்சி இருக்காது. கதையின் தன்மைக்கேற்பவே காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குநர்.
“என்னைப் பொறுத்தவரை கவர்ச்சியாக நடிப்பதில் தயக்கமில்லை. அதேசமயம் கதையின் தேவையைப் பொறுத்து கவர்ச்சியின் அளவும் மாறும். கவர்ச்சி என்பது எல்லோருக்கும் ஒத்துவராது.
“சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பதுபோல் சுண்டி இழுக்குமளவுக்கு உடல்வாகு உள்ளவர்கள் கவர்ச்சியாக நடித்தால்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள். தேவையின்றி கவர்ச்சியாக நடித்தால் அது ரசிகர்கள் மனதில் வெறுப்பையே ஏற்படுத்தும்.
“எனவே கதைக்கேற்ப அளவோடு கவர்ச்சி காட்டுவதுதான் நல்லது. இதுதான் எனது கொள்கை என்பதை படக்குழுவினரிடம் ஒப்பந்தம் போடுவதற்கு முன்பே எடுத்துச் சொல்லிவிடுகிறேன்,” என்று தெளிவாகவும் கறாராகவும் பேசுகிறார் அஸ்வினி சந்திரசேகர்.