சுடச் சுடச் செய்திகள்

‘களிமண்ணை சிலையாக்குவது இயக்குநரே’

ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறியதால் ஸ்ரீமன் முகத்தில் மகிழ்ச்சியைக் காணமுடிகிறது. 

இவர் திரையுலகுக்கு வந்து 27 ஆண்டுகளாகி விட்டதாம். அண்மையில் வெளியான ‘தர்பார்’ படத்தில் நயன்தாராவின் அண்ணனாக நடித்துள்ளார்.

“ரஜினி சாருடன் நடித்த அனுபவம் இனிமையானது. படத்தில் எனக்கும் அவருக்குமான முதல் காட்சியில், அவர் தன் வீட்டுக் கதவைத் திறந்து என்னை, ‘உள்ளே வாங்க’ என்பார். படப்பிடிப்பின்போது என் நடிப்பை அவர் பாராட்டியது இரட்டிப்பு உற்சாகத்தை அளித்தது. இந்தப் படத்தின் மூலம் திரையுலகில் இரண்டாவது சுற்றைத் தொடங்கியிருப்பதாகத் தோன்கிறது,” என்கிறார் ஸ்ரீமன்.

‘தர்பா’ரில் இவரது நடிப்பு நன்றாக இருந்ததாக பலரும் பாராட்டியதாகக் குறிப்பிடுபவர், அந்தப் பாராட்டுகள் அனைத்தும் இயக்குநர் முருகதாசைத்தான் போய்ச் சேர வேண்டும் என்கிறார்.

“முருகதாஸ் சாரின் முதல் படமான ‘தீனா’விலும் நான் இருந்தேன். இப்போது அவர் இமாலய அளவுக்கு உயர்ந்துள்ளார். மீண்டும் அவர் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. 

“முருகதாசை முழுமையான சிறந்த மனிதர் என்று சொல்லலாம். அன்று பார்த்த அதே மனிதநேயம், ஆர்வம், உத்வேகம், பழகும் விதம் என அவரிடம் எதுவுமே எள்ளளவும் மாறவில்லை,” என்று பாராட்டும் ஸ்ரீமன், தற்போது விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். இவரது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்.

“விஜய் எனது நல்ல நண்பர். இந்தப் படம் வெளியாகும் சமயத்தில் அவருடனான எனது நட்பு குறித்து ஊடகங்களிடம் விரிவாகப் பேசுவேன். தமிழ் தவிர இரண்டு தெலுங்குப் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

“இந்த வேடம்தான் வேண்டும் என்று எதிர்பார்ப்பது கிடையாது. குயவன் கையில் இருக்கும் களிமண் போன்றுதான் என்னை இயக்குநர்களிடம் ஒப்படைக்கிறேன். என்னை எப்படி சித்திரித்தாலும் உடன்படுகிறேன்,” என்கிறார் ஸ்ரீமன்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon