சுடச் சுடச் செய்திகள்

‘என்னை வாழவைத்த ஐவர்’

தன் வாழ்க்கையில் 5 பேரை மறக்கவே இயலாது என்கிறார் இளம் நாயகி மேகா ஆகாஷ். ஐந்து பேரையும் அவரே பட்டியலிடுகிறார்.

சிறு வயது முதலே இவரைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தி ஊக்கமளித்தது பாட்டி கோமளா தானாம். தன் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கும்போது மனதில் தோன்றும் முதல் ஆள் பாட்டிதான் என்கிறார்.

“சிறு வயது முதலே எனக்குத் தேவையான அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்வார். என்னை யாரேனும் செல்லமாக ஏசினாலும், லேசாகத் தட்டினாலும் கூட அவரால் தாங்க முடியாது. உடனே சண்டைக்குப் போய்விடுவார். 

“எல்லோருமே பெற்ற தாய்க்குத்தான் முதலிடம் கொடுப்பார்கள். ஆனால், நான் கோமளா பாட்டியை நேசிப்பதை நினைத்து, நான் வாழ்க்கையில் மிகவும் மதிக்கும் இரண்டாவது ஆளான என் அம்மா சந்தோஷம்தான் பட்டிருக்கிறார். 

“அம்மா பிந்துவைப் பொறுத்தவரை என் மீது அளவுக்கதிகமான பாசம் வைத்துள்ளார். எனக்காக அவர் எதையும் விட்டுக் கொடுப்பார். 

“எந்த விஷயமாக இருந்தாலும் அவரிடம் ஒரு வார்த்தைச் சொல்லிவிட்டுத்தான் முடிவெடுப்பேன். எனக்காகப் பல தியாகங்களைச் செய்தவர் அவர். 

“படப்பிடிப்புக்குச் சென்றால், திரும்பி வரும்வரை எனக்காகவே மணிக்கணக்கில் காத்துக் கிடப்பார். 

“அவர் எனக்காக செய்த தியாகங்களை என்னால் எதைக்கொண்டும் இந்த வாழ்நாளில் ஈடுகட்ட இயலாது,” என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் மேகா ஆகாஷ்.

இவரது தந்தை சிறு வயதில் மிகவும் சிரமப்பட்டிருக்கிறாராம். 

பல்வேறு கஷ்ட நஷ்டங்களுக்கு மத்தியில் போராடி வாழ்க்கையில் முன்னேறியவர் தன் தந்தை என்கிறார்.  

தனது சினிமா கனவு நிறைவேற தந்தை பட்ட கஷ்டங்களே காரணம் என்று பாசத்தோடு குறிப்பிடும் மேகா, வலிகளைக் கடந்து எப்படி முன்னேற வேண்டும் என்பதைத் தன் தந்தையிடமிருந்துதான் கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார்.

“என் கனவு இன்று நனவாகி உள்ளது. சிறு வயதிலேயே நான் நினைத்ததை இவ்வளவு எளிதில் சாதிக்க முடிந்தது என்றால் அதற்கான முழுப் பாராட்டும் அப்பாவுக்குத்தான் போய்ச் சேரவேண்டும். 

“அப்பா எப்போதுமே அதிகம் பேசமாட்டார். ஆனால், அவரது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தாலே ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அவரது அனுபவங்கள் நிச்சயம் எனக்கு வழிகாட்டுவதாக இருக்கும்.” 

தந்தையைப் போலவே இயக்குநர் கௌதம் மேனனும் தன் வாழ்க்கையில் முக்கியமானவர் என்று குறிப்பிடும் அவர், ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தில் தன்னை நாயகியாகத் தேர்ந்தெடுத்ததற்காக கௌதமுக்கு என்றும் நன்றிக்கடன் படுவதாகச் சொல்கிறார். 

திரையுலகில் இன்று தம்மால் தைரியமாக கால் ஊன்றி நிற்க முடிகிறது என்றால் அதற்கு கௌதம் மேனன்தான் காரணம் என்று குறிப்பிடுபவர், கௌதம் தனக்குப் பல நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்ததாகச் சொல்கிறார். 

“அவ்வளவு பெரிய இயக்குநர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நினைக்கும்போது பெருமையாக உணர்கிறேன். அவர் என்னிடமுள்ள திறமையை முழு மனதுடன் நம்புகிறார். எனது கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாகச் செதுக்கி என்னைத் திரையில் அழகாகக் காண்பித்து என் சினிமா பாதையை வகுத்துக் கொடுத்தவர் அவர்தான்.

“அவரது இயக்கத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எதுகுறித்தும் யோசிக்காமல் ஒப்புக் கொள்வேன்,” என்று சொல்லும் மேகா, தன் வாழ்க்கையில் முக்கியமானவர் என அடுத்துக் குறிப்பிடும் ஆள் இந்தியக் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி. 

சிறு வயது முதலே தோனி மீது பெரும் மரியாதை ஏற்பட்டு விட்டதாம். அவரிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்.

“விடாமுயற்சி, தன்னம்பிக்கை, உழைப்பு, உறுதி என தோனியிடம் எல்லாவற்றையும் பார்க்கமுடியும். நான் அவருடைய தீவிர ரசிகை. ஒருமுறை அவரைச் சந்தித்திருக்கிறேன். புகைப்படமும் எடுத்துக் கொண்டேன். எதையும் எதிர்த்து ஜெயிக்கக் கூடிய நல்ல வீரராக என் மனதில் பதிந்திருக்கிறார் தோனி,” என்கிறார் மேகா ஆகாஷ்.

இந்த ஐந்து பேரும் வாழ்க்கையில் தான் பல உயர்வுகளை அடைய இனிமேலும் துணை நிற்பார்கள் என உறுதியாக நம்புவதாகக் குறிப்பிடுபவர், இவர்கள் அனைவருக்குமே தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாகச் சொல்கிறார்.

“எனது வாழ்க்கையில் நான் பெறக்கூடிய ஒவ்வொரு வெற்றியும் இவர்களுக்குத்தான் சொந்தம். இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் என் வாழ்க்கையில் இடம்பெற்றதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்,” என நெகிழ்வுடன் குறிப்பிடுகிறார் மேகா ஆகாஷ்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon