நித்யா: பின்னணிக் குரல் மிக முக்கியம்

கோடம்பாக்கத்தில் தற்போது ‘சைக்கோ’ படம் குறித்துத்தான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதில் நித்யா மேனனின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக விமர்சகர்கள் பலரும் பாராட்டி உள்ளனர்.

“இயக்குநர் மிஷ்கின் என்னிடம் ‘சைக்கோ’ கதையைச் சொன்னபோது இரு கதாபாத்திரங்களைக் குறிப்பிட்டு, அவற்றுள் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கூறினார். பிறகு அவரே எனக்கான வேடத்தைத் தேர்வு செய்தார்.

“பொதுவாகவே நான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவேன். அந்த வகையில், மிஷ்கின் எனக்கு அளித்த கதாபாத்திரத்தில் ரசித்து நடித்தேன். படப்பிடிப்புக்கு வந்த கையோடு சக்கர நாற்காலியில் அமர்ந்துவிட்டால் கடைசி வரை அதில் இருந்து எழுந்திருக்கவே மாட்டேன். படப்பிடிப்பு முடியும் வரை இப்படித்தான் செய்தேன்,” என்று சிரிக்கிறார் நித்யா மேனன்.

படப்பிடிப்பு அரங்கில் சக்கர நாற்காலியுடன் தான் சுற்றி வந்தாராம். படத்தில் இடம்பெற்ற சில வசனங்களைப் பேசுவதற்குத் தயங்கினாராம். 

“உண்மையில் அந்த வசனங்களை முதலில் உச்சரித்த போது சிரிப்பு வந்துவிட்டது. கண்டிப்பாக அவற்றைப் பேசித்தான் ஆக வேண்டுமா என்று மிஷ்கினிடம் கேட்டேன். பிறகு அவர் மீதான நம்பிக்கையில் அவற்றைப் பேசினேன்.

“மொழி என்பது எனக்கு எப்போதுமே பிரச்சினையாக இருந்ததில்லை. என் வீட்டில் பல மொழிகளில் பேசுவோம். அப்பாவுக்கு தமிழ் சரளமாக வரும். நான் கன்னடப் பள்ளியில் படித்தவள். அதனால் அவ்விரு மொழிகளும் நன்றாகத் தெரியும்.

“அதனால்தான் எனது கதாபாத்திரங்களுக்கு நானே பின்னணிக் குரல் கொடுக்க முடிகிறது. என்னைப் பொறுத்தவரை ஒரு நடிகை நிச்சயம் பின்னணி பேசவேண்டும். இல்லையெனில் அந்த நடிகை தனது  பணியைப் பாதியில் கைவிட்டதாக அர்த்தம்,” என்கிறார் நித்யா.

‘தலைவி’ படம் எந்த அளவில் உள்ளது?

“படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜெயலலிதா போன்ற ஒருவரது வாழ்க்கையைத் திரையில் விவரிப்பது சாதாரண செயலல்ல. அதற்கு நிறைய மெனக்கெடல் தேவை.

“இயக்குநர் பிரியதர்ஷினிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை தனிப்பட்ட வகையில் தெரியும். எனவே அவரது இயக்கத்தில் இந்தப் படம் மிக நேர்த்தியான படைப்பாக உருவாகும் என நம்புகிறேன்.

“அவர் எனது திறமை மீது  நம்பிக்கை வைத்துள்ளார். அதனால் தான் இப்படியொரு வாய்ப்பை அளித்துள்ளார்,” என்கிறார் நித்யா.

தற்போது இவர் இணையத் தொடர்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். ‘பிரெத்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள அந்த இணையத் தொடர் 12 பாகங்களைக் கொண்டது. 

“12 பாகங்களும் அற்புதமான உள்ளடக்கத்தைக் கொண்டவை. ஒவ்வொன்றும் நிறைய விஷயங்களைப் பேசும். அதனால் மிகவும் ரசித்து நடித்தேன்.

“குறிப்பாக எனது கதாபாத்திரம் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது. 12 பாகங்களும் வித்தியாசமாக இருக்கும் என்பதால் ரசிகர்களை நிச்சயம் கவரும். அனைத்தையும் விட, எனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக இந்த இணையத் தொடர் அமைந்துள்ளது.

“திரைப்படங்களுக்கு இணையாக இனி இது போன்ற இணையத் தொடர்களும் வளர்ச்சி காணும். வெளிநாடுகளில் இப்போதே இத்தகைய தொடர்கள் திரைப்படங்களுக்கு இணையாக வசூலாகின்றன.

“முன்னணிக் கலைஞர்களும் கூட இத்தொடர்களில் பணியாற்றுகின்றனர். இந்தியா போன்ற மிகப் பெரிய சந்தையில் இணையத் தொடர்களால் நிச்சயம் சாதிக்க முடியும்,” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் நித்யா.