‘இது பெரிய உதவி அல்ல’

கோடம்பாக்கத்தில் பலரும் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு பல்வேறு வகையிலும் உதவி வருகின்றனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக தனது சம்பளத்தை 25 விழுக்காடு குறைத்துக்கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.

இதையடுத்து மற்ற முன்னணி நடிகர்களும் இந்த நல்ல செயலைப் பின்பற்ற வேண்டும் எனத் தயாரிப்பாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

தயாரிப்பாளர்களில் பெரும்பாலானோர் பெரிய தொகையை வட்டிக்குக் கடனாகப் பெற்றுதான் படத்தைத் தயாரிக்கிறார்கள். தற்போது ஊரடங்கால் படத்தயாரிப்புப் பணிகள் முடங்கியுள்ளன.

இதனால் நான்கைந்து மாதங்களுக்கு தயாரிப்பாளர்கள் கூடுதலாக வட்டி கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, விஜய் ஆண்டனியின் வழியை மற்ற நாயகர்களும் பின்பற்ற வேண்டும் எனத் தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் தாம் இவ்வாறு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டதை விளம்பரப்படுத்தும் எண்ணம் தமக்கு அறவே இல்லை என்கிறார் விஜய் ஆண்டனி.

தனது இந்த முடிவு குறித்து, தன்னை வைத்துப் படம் எடுக்கும் தயாரிப்புத் தரப்பிடம் மட்டும்தான் தெரிவித்தாராம். ஆனால், அவர்கள் மூலமாக விஷயம் வெளியே கசிந்துவிட்டது என்கிறார்.

“இது திடீரென்று மனதில் தோன்றிய எண்ணம். ஒருவர் கீழே விழுவது போல் இருந்தால் நாம் கைதூக்கிவிடப் பெரிதாக யோசிக்க மாட்டோம் அல்லவா? அதுதான் இப்போது நடந்திருக்கிறது.

“கொரோனா கிருமித் தொற்று விவகாரம் இந்தளவு பெரிதாவதற்கு முன்பே இவ்வாறு முடிவெடுத்து விட்டேன்.

“தற்போது என்னை வைத்துப் படமெடுக்கும் தயாரிப்பாளர்களிடம் சம்பளத்தைக் குறைத்துக்கொள்வதாக தெரிவித்தபோது அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். உடனடியாகத் தயாரிப்பாளர் சங்கத்துடன் இந்த விஷயத்தைப் பகிர்ந்துகொண்டனர். அதனால் பெரிய செய்தியாகி விட்டது,” என்கிறார் விஜய் ஆண்டனி.

தம்மை வைத்து படம் எடுக்கும் நிறுவனங்களுக்கு தன்னுடைய இந்த முடிவு சிறிதளவு உதவும் என்று குறிப்பிடுபவர், இதை மிகப் பெரிய உதவியாக சித்திரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறார்.

“அவர்கள் கஷ்டத்தின் ஒரு பகுதியைப் போக்க நினைத்தேன். அவ்வளவுதான். கொரோனா இப்பொழுது எல்லோரையும் பலவிதத்தில் யோசிக்க வைத்திருக்கிறது. நான் ஒன்றும் கையில் இருந்து பணம் கொடுக்கவில்லையே? எனக்கு கொடுக்க வேண்டியதிலிருந்து ஒரு பகுதியை வேண்டாம் என்கிறேன்.

“பத்து படங்கள் தயாரித்துப் பார்த்ததில் தயாரிப்பாளர்களின் கஷ்டம் புரிந்துவிட்டது. சினிமாவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தன் பங்கினை செலுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்,” என்கிறார் விஜய் ஆண்டனி.

இவரது இந்தச் செயல் தமிழ்ச் சினிமாவுக்கு பெரும் நன்மையை விளைவிக்கும் என்கிறார் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன்.

கதாநாயகர்கள் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர்ந்து முறையீடு செய்து தங்களுக்கு அலுத்துப் போய்விட்டதாக அவர் கூறுகிறார்.

“எங்களுடைய இந்த கோரிக்கைக்கு எந்தப் பதிலும் கிடைப்பதில்லை. ஆனாலும் அதை தொடர்ந்து வெளிப்படுத்த தவறுவதில்லை.

“விஜய் ஆண்டனி இத்தகைய நிவாரணத்தை அளித்திருப்பது மிகவும் பக்குவமான செயல். தயாரிப்பாளர்களின் சிரமத்தை உணர்ந்து செய்த ஆக்கபூர்வமான நடவடிக்கை.

“இதை தயவுசெய்து மற்ற கதா நாயகர்களும் பின்பற்ற வேண்டும். இந்த பொருளாதார நெருக்கடி மிகுந்த காலத்தில் இது பெரிய உதவியாக இருக்கும்.

“விஜய் ஆண்டனி மட்டும் இப்படி விட்டுக்கொடுத்தால் போதாது. ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும். அப்படி இழுக்க விஜய் ஆண்டனி முதல் ஆளாய் வந்து சேர்ந்திருக்கிறார். அவருக்கு நன்றி,” என்கிறார் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன்.

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தை தயாரித்து வரும் ஃபெப்சி சிவா இந்த முடிவு குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

“இது மனிதாபிமானம் நிரம்பிய அரிதான செயல். இதை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும்,” என்கிறார் சிவா.

“எல்லாப் பாதைகளும் ஒருவர் எடுத்து வைக்கும் முதல் அடியில் இருந்தே தொடங்குகின்றன என்று கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!