வில்லனாக விரும்பும் பிரசன்னா

தாம் கதாநாயகனாகவும் குணசித்திர வேடங்களிலும் பெயரெடுக்க தூண்டுகோலாக இருந்தது நடிகர் அஜித்தான் என்கிறார் பிரசன்னா.

அண்மைய சமூக வலைத்தளப் பதிவில் அவர் அஜித்தை வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.

“நடிகனாக வேண்டும் என்ற எனது கனவுக்கு வலு சேர்த்து, என்னை நானே செதுக்கிக்கொள்ள கற்றுக்கொடுத்து தோல்விகளைக் கடந்து கஷ்ட காலத்தில் என்னைத் தாங்கிப் பிடித்து பின்வாங்காத போராளியாக மாற்றியது நடிகர் அஜித்,” என்று தமது பதிவில் பிரசன்னா குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அஜித்தின் 28 ஆண்டுகால திரையுலகப் பயணத்தை கௌரவிக்கும் வகையில் உருவான சுவரொட்டியை வெளியிட்ட திரைக்கலைஞர்களில் பிரசன்னாவும் ஒருவர்.

மேலும், ஒரு படத்திலாவது அஜித்துக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என விரும்புகிறாராம். அவரது இந்த விருப்பம் மிக விரைவில் நிறைவேறும் என அஜித் ரசிகர்கள் பலரும் வாழ்த்தி உள்ளனர்.