தந்தை எழு­திய கதை­யை இயக்கப்போகிறார் மஞ்சிமா

எதிர்­பா­ராத விபத்து, சில வாய்ப்­பு­கள் கைந­ழு­விப் போனது என ஒன்­றி­ரண்டு மாதங்­கள் சில தவிப்­பு­க­ளுக்கு ஆளா­கி­யி­ருந்த மஞ்­சிமா மோகன், மீண்­டும் பழைய தெம்­பு­ட­னும் உற்­சா­கத்­து­ட­னும் கள­மி­றங்கி உள்­ளார்.

விஜய் சேது­ப­தி­யு­டன் ‘துக்­ளக் தர்­பார்’, ஜீவா-அருள்­நி­தி­யு­டன் ‘களத்­தில் சந்­திப்­போம்’, விஷ்ணு விஷா­லு­டன் ‘எஃப்.ஐ.ஆர்’ என வரி­சை­யாக படங்­களில் நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.

இந்­நி­லை­யில் தனது தந்­தை­யு­டன் கூட்­டணி அமைத்து மஞ்­சிமா ஒரு படத்தை இயக்­கப் போவ­தாக வெளி­யான தக­வல் ரசி­கர்­களை ஆச்­ச­ரி­யப்­பட வைத்­துள்­ளது. இவ­ரது தந்தை மோகன் கேர­ளா­வில் பிர­பல ஒளிப்­ப­தி­வா­ளர். பல முன்­னணி நடி­கர்­க­ளின் படங்­களில் பணி­யாற்­றிய அனு­ப­வம் உள்­ள­வர்.

இயக்­கு­ந­ரா­கப் போகி­றீர்­களா என்று கேட்­டால், “ஏன் ஆகக்­கூ­டாதா?” என மஞ்­சி­மா­வி­டம் இருந்து எதிர்­கேள்வி வரு­கிறது. அது மட்­டு­மல்ல, தந்தை எழு­திய கதை­யைத் தான் இயக்­கப் போவ­தாகவும் விவ­ரம் தெரி­விக்­கி­றார்.

“இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பே அப்பா ஒரு அழ­கான கதையை எழு­தி­யி­ருந்­தார். அதை என்­னி­ட­மும் விவ­ரித்­தி­ருந்­தார். ஆனால் கதை­யின் முடிவை மட்­டும் எழு­த­வில்லை. எனக்கு ஏதா­வது தோன்­றி­னால் தெரி­விக்­கு­மாறு சொல்லி பல மாதங்­க­ளா­கி­விட்­டன. எனக்­கும் அந்­தக் கதையை எப்­படி முடிப்­பது என்று தெரி­ய­வில்லை. யோசித்­துக்­கொண்டே இருக்­கி­றேன்.

“ஒரு­வேளை நல்ல முடிவு தோன்­றி­னால் அப்பா அந்­தக் கதையை நிச்­ச­யம் இயக்­கு­வார். ஒரு­வேளை அவர் இந்த முயற்­சி­யைக் கைவிட்­டால் நிச்­ச­ய­மாக நான் இயக்­கு­வேன்,” என்­கி­றார் மஞ்­சிமா.

எந்­த­வித முன் அனு­ப­வ­மும் இல்­லா­மல் மஞ்­சிமா இந்த முடிவை எடுக்­க­வில்லை. சில படங்­களில் நடித்­தி­ருப்­ப­வர், உதவி இயக்­கு­ந­ரா­க­வும் பணி­யாற்றி உள்­ளார் என்­பது பல­ருக்­குத் தெரி­யாது.

மலை­யா­ளத்­தில் ‘ஒரு வடக்­கன் செல்ஃபி’யிலும் தமி­ழில் ‘அச்­சம் என்­பது மட­மை­யடா’விலும் பணி­யாற்­றிய உதவி இயக்­கு­நர்­களில் இவ­ரும் ஒரு­வர்.

‘ஒரு வடக்­கன் செல்ஃபி’ யில் நடித்­த­போது மிக­வும் தயங்­கி­னா­ராம். இதைக் கவ­னித்த இயக்­கு­நர், இரண்டு வாரங்­க­ளுக்கு தனது உத­வி­யா­ள­ராக படப்­பி­டிப்­பில் பங்­கேற்­கு­மாறு அறி­வு­றுத்தி இருக்­கி­றார்.

“இத­னால் மன­தில் இருந்த தயக்­கம் ஓடிப்­போ­னது. பிற­கு­தான் எனக்­கான முதல் காட்­சி­யில் நடித்­தேன்,” என்று சொல்­லும் மஞ்­சிமா, ‘துக்­ளக் தர்­பார்’ படத்­தில் விஜய் சேது­ப­தி­யின் தங்­கை­யாக நடிக்­கி­றார் என்­ப­தும் ரசி­கர்­களை வியக்க வைத்­துள்­ளது.

நாய­கி­யாக நடித்­துக் கொண்­டி­ருக்­கும்­போது தங்கை வேடம் ஏற்­பது சரிப்­பட்டு வருமா? என சமூக வலைத்­த­ளங்­களில் பலர் கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர்.

தங்கை வேடத்­துக்­காக தம்மை அணு­கி­ய­போது மஞ்­சி­மா­வும் ஆச்­ச­ரி­யப்­பட்­டா­ராம்.

இவ­ரது மேலா­ளர்­தான், ‘ஒரு­முறை கதை கேட்­போம். பிறகு முடிவு செய்­ய­லாம்’ என்று கூறி­யுள்­ளார்.

“ஆனால் கதை கேட்­ட­தும் எனக்கு முழு திருப்தி. உடனே கால்­ஷீட் ஒதுக்­கி­விட்­டேன். இது வழக்­க­மான தங்கை வேடம் அல்ல. என் நடிப்பை முழு­மை­யாக வெளிப்­ப­டுத்த முடி­யும். அது மட்­டு­மல்ல, சற்றே கடி­ன­மான கதா­பாத்­தி­ரம் என்­றும் சொல்­ல­லாம்.

“பொது­வாக வச­னம் பேசி நடிப்­பது ஓர­ளவு சுல­ப­மா­னது. ஆனால் குறை­வான வச­னங்­கள் பேசி, முக­பா­வ­னை­கள், உடல்­மொழி மூலம் உணர்­வு­களை வெளிப்­ப­டுத்­து­வது கடி­னம். தங்­கை­யாக நடிப்­ப­தில் தவறு இல்லை,” என்­கி­றார் மஞ்­சிமா.

விஷ்ணு விஷா­லு­டன் நடிக்­கும் ‘எஃப்.ஐ.ஆர்.’ படத்­தில் வழக்­க­றி­ஞ­ராக நடிப்­ப­வர், இது­வும் ஒரு வகை­யில் சவா­லான வேடம்­தான் என்­கி­றார்.

‘களத்­தில் சந்­திப்­போம்’ படத்­துக்­காக ஜீவா, அருள்­நிதி, ப்ரியா பவானி சங்­க­ரு­டன் இணைந்து நடித்­தது ஜாலி­யான அனு­ப­வ­மாக இருந்­த­தாம்.

“ஜீவா எல்­லோ­ரை­யும் கிண்­டல் செய்து கொண்­டி­ருப்­பார்.

“திடீ­ரென நம்மை பய­மு­றுத்­து­வது போல் ஏதா­வது செய்­வார். அதற்கு நேர்­மா­றாக அருள்­நிதி ரொம்ப அமை­தி­யா­ன­வர்.

“பிரியா பவானி சங்­கர் நல்ல தோழி. அவ­ரு­டன் குறை­வான காட்­சி­க­ளில்­தான் நடித்­தேன். அதற்­குள் நெருக்­க­மாகி விட்­டோம்,” என்று உற்­சா­க­மா­கப் பேசும் மஞ்­சிமா, தமி­ழில் மேலும் இரண்டு படங்­களில் ஒப்­பந்­த­மாகி உள்­ள­தாக தக­வல்.