தமிழ்த் திரையுலக உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்துக்கு (படம்) இந்திய சினிமா உலகின் மிக உயரிய ‘தாதா சாகேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி, எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமக்கு விருது வழங்கிய இந்திய அரசிற்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி கூறிக் கொண்ட ரஜினி, தமிழ் மக்களுக்கும் உலகெங்கும் உள்ள தம் ரசிகர்களுக்கும் அவ்விருதைச் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.
2016 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்கள் முன்பாக ரஜினிக்கு ‘பத்ம விபூஷண்’ விருது அறிவிக்கப் பட்ட நிலையில், இப்போதும் இன்னும் நான்கு நாள்களில் தமிழகத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிக் கேட்டதற்கு, “தமிழகத் தேர்தலுக்கும் ரஜினிக்கு விருது அறிவிக்கப் பட்டிருப்பதற்கும் எந்தத் தொடர்புமில்லை,” என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெளிவுபடுத்தினார்.
இதற்குமுன் தமிழ்த் திரையுலகில் இருந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இயக்குநர் சிகரம் கே.பாலச் சந்தரும் இவ்விருதினைப் பெற்றுள்ளார்கள்.