சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய 'டாக்டர்' படம் வெளியீடு கண்டுள்ளது.
திரையரங்குகளில் மீண்டும் ரசிகர் கூட்டம் அதிகரித்திருப்பது ஒட்டுமொத்த திரையுலகத்துக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.
படம் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரசிக்கத்தக்க வகையில் இருப்பதாகப் பெரும்பாலான விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, 'டாக்டர்' படத்தை வெளியிடுவதற்காக சிவகார்த்திகேயன் எதிர்கொண்ட பிரச்சினைகள் யாருக்கும் தெரியாது என்றும் இந்தப் படம் அவருக்கு பல கோடி ரூபாய் கடனை ஏற்படுத்தி உள்ளது என்றும் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள் கூறுகின்றனர்.
ஆனால் ஒருசிலரைக் காப்பாற்றுவதற்காக அவர் அந்தக் கடனை மனமுவந்து ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து 'தமிழ் முரசு'க்காக மூத்த செய்தியாளர் ஆர்.எஸ்.அந்தணனிடம் பேசியபோது, இந்தத் தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்றார். மேலும், சிவகார்த்திகேயனுக்கு இப்போது புதிதாக ரூ.27 கோடி கடன் சுமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"தமிழ் சினிமா உலகைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு படத்தின் வெளியீடும் பிரசவம்தான். அந்த வகையில் 'டாக்டர்' படத்தின் வெளியீடும் சிவாவுக்குப் பிரசவ வேதனையைக் கொடுத்துள்ளது.
"சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் சுமார் 80 அல்லது 90 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரமாகின்றன. அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. 'டாக்டர்' படத்தின் தயாரிப்புத் தரப்புக்கு, அதாவது ராஜேஷுக்கு அவர் தயாரித்த முந்தைய படமான 'ஹீரோ' மூலம் சுமார் ரூ.18 கோடியை அவர் சிலருக்குத் திருப்பித் தர வேண்டியிருந்தது. எப்படியோ அதைjg கொடுத்துவிட்டார்.
"ஆனால் படத்தின் 'நெகட்டிவ்' உரிமை என்று ஒரு விஷயம் உள்ளது. அந்த உரிமையின் பேரிலும் கடன் வாங்க முடியும். இதைப் பயன்படுத்தி ராஜேஷ் சுமார் 27 கோடி ரூபாய் கடன் பெற்று இருந்தார்.
"கடன் கொடுத்தவர், 'டாக்டர்' படத்தின் வெளியீட்டு சமயத்தில் நெருக்கடி தர, பல இடங்களில் முயற்சி செய்தும், ராஜேஷால் பணம் புரட்ட முடியவில்லை.
"இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த சிவா, வேறு வழியின்றி தாமே களமிறங்க வேண்டியதாயிற்று. ஆனால் அவரது இந்த நகர்்வுதான் அவரை 27 கோடி ரூபாய் கடன் வாங்க வைத்தது," என்கிறார் ஆர்.எஸ்.அந்தணன்.
பிறகு என்ன நடந்தது? என்பது சினிமா பாணியிலான அதிரடி திருப்பங்கள்.
இரவோடு இரவாக பணம் புரட்ட வேண்டும் என்பதால், தீவிரமாக யோசித்த சிவகார்த்திகேயன், ஒரு நண்பர் மூலம் நடிகர் உதயநிதி ஸ்டாலினை தொடர்பு கொண்டுள்ளார்.
'டாக்டர்' படத்துக்கு ஏற்பட்டுள்ள சிக்கலைப் புரிந்துகொண்ட உதயநிதி, உடனடியாக மதுரையைச் சேர்ந்த, திரையுலகத்துடன் நெருங்கிய தொடர்புள்ள பிரமுகரிடம் பேசியுள்ளார். அதன் பிறகு அந்தப் பிரமுகர், 'டாக்டர்' தயாரிப்புத் தரப்புக்கு ரூ.27 கோடி கடன் கொடுத்தவரிடம் பணத்துக்கு உத்தரவாதம் அளிக்க, பிரச்சினை முடிவுக்கு வந்தது.
"இதன் பிறகு அந்த மதுரை பிரமுகர் அளித்த தொகையை தனது கடனாக ஏற்றுக்கொண்டுள்ளார் சிவா. அவர் மீது எந்தத் தவறும் இல்லை. ஆனால் அவருக்கு தொடர்ந்து இப்படி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இனி ஒவ்வோர் அடியையும் அவர் மிகக் கவனமாக எடுத்து வைப்பது நல்லது," என்கிறார் ஆர்.எஸ்.அந்தணன்.
இதற்கிடையே, தனக்குக் கொடுக்க வேண்டிய கடன் தொகைக்குப் பதிலாக மாற்று ஏற்பாடு ஒன்றை செய்ய முடியும் என சிவாவிடம் கூறியுள்ளாராம் அந்த மதுரைப் பிரமுகர். அதாவது லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு கால்ஷீட் தந்தால், ரூ.27 கோடியை முன்பணமாக வைத்துக்கொள்ளலாம் என்பதுதான் அந்த மாற்று ஏற்பாடு. இனி முடிவு சிவா கையில் உள்ளது.