ஒரு திரைப்படத்துக்கான விமர்சனம் என்பது திரையரங்குக்குச் செல்லும் யாரையும் தடுப்பதாக இருக்கக்கூடாது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
அவரும் ஆர்யாவும் இணைந்து நடித்துள்ள 'எனிமி' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இதையடுத்து, அப்படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய விஷால், தனது படங்கள் குறித்த தேவையற்ற விமர்சனங்கள் குறித்து தாம் கவலைப்படுவது இல்லை என்றார்.
"அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக உள்ளது. படம் சரியில்லை, வழக்கமான படம்தான் என்பன உள்ளிட்ட தேவையற்ற விமர்சனங்களைப் பற்றிக் கவலையில்லை.
"நிறைய பேர் 'டைட்டானிக்' படத்தில் மனோரமா சரியாக நடிக்கவில்லை என்று சொல்வார்கள். அதில் அவர் நடித்திருக்கவே மாட்டார். அதுபோன்று சிலர் உள்ளனர்.
"விமர்சகர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஒரு படத்தின் விமர்சனத்துக்குக் கொஞ்சம் நேரம் கொடுங்கள். ஏனென்றால் ஒரு படத்தில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன.
"விமர்சனத்துக்காகவே படம் பார்க்கச் செல்பவர்களும் இருக்கிறார்கள். கொரோனா அச்சுறுத்தலுக்குப் பின் மீண்டும் திரையரங்கிற்கு மக்கள் வரத் தொடங்கி உள்ளனர். அவர்களைத் தடுக்க வேண்டாம்," என்றார் விஷால்.