ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் 'ஜெய் பீம்' பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தள பக்கத்தில் தங்களது கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், 1993ல் நடந்த ஒரு குறிப்பிட்ட வழக்கும் அதைச் சார்ந்த நீதியும்தான் இந்தப் படம் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
'ஜெய் பீம்' தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் பெண்களுக்கு ஆதரவான கருத்துகளை அள்ளித் தெளித்துள்ளார். நடிக்கிறது மட்டும் என் வாழ்க்கை இல்ல. அதனாலதான் கடந்த 18 - 20 வருடங்களா 'அகரம்' ஃபவுண்டேஷன் மூலமா நிறைய ஏழை எளிய மக்களுக்கு உதவறோம். பாதிக்கப்பட்ட மக்கள் பலரையும் நேரடியாக சந்திக்கக்கூடிய வாய்ப்பு 'அகரம்' வழியா கிடைச்சிருக்கு. என்னுடைய கருத்துக்கு நிறைய பேருடைய ஆதரவும் கிடைக்கிறப்ப படத்துலயும் சில கருத்துகளை எடுத்துச் சொன்னா நிச்சயம் மக்கள்கிட்ட சேரும்னு ஒரு நம்பிக்கை. அதன் வெளிப்பாடுதான் 'ஜெய் பீம்'.
இன்னமும் பெண்கள் நிறைய இடங்களில் அடக்குமுறையை சந்திச்சிட்டுதான் இருக்காங்க. உங்க மனைவிக்கு ஆத்மார்த்தமா சப்போர்ட் செய்கிற ஒரு ஆணா அந்த சில ஆண்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?
"இந்த உலகத்தில் மனுஷனா பிறந்த அத்தனை பேருக்கும் கனவுகளும் ஒருசில குறிக்கோள்களும் இருக்கு. இதை நிறைவேற்ற யாரும் யாருக்கும் அனுமதி கொடுக்கணும்னு அவசியம் கிடையாது.
நடிப்பு, ஷூட்டிங் இதெல்லாம் ஜாலியான ஒரு விஷயம். ஆனா, ஒருநாள் வீட்ல குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும்போதுதான் அதில் எவ்வளவு பொறுப்புகள், சவால்கள் இருக்குன்னு தெரியும். ஒரு நாளைக்கே அப்படீன்னா தினமும் குழந்தைகளைப் பார்த்துகிட்டே, குடும்பத்தையும் கட்டுக்கோப்பா நடத்திட்டு, வேலையும் செய்கிற என் மனைவி ஜோதிகா மட்டுமல்ல, அத்தனை பெண் களுமே கிரேட்தான். அவர்களைப் போற்ற வேண்டும். சப்போர்ட் செய்யலைன்னாகூட பரவாயில்லை பெண்களை அடக்க நினைக்க வேண்டாம். குறிப்பா 'அனுமதி' என்னும் வார்த்தையே வேண்டாம்.
நீதிபதி சந்துருவிடம் இருந்து நீங்க கத்துக்கிட்ட நல்ல விஷயங்கள் என்னென்ன?
"ஒரு தனிநபர் 25 பெண்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்கமுடியுமா? ஒரு சமூகத்தினுடைய வாழ்க்கை நிலையை மாற்றமுடியுமா? இப்படி பல கேள்விகள் சந்துரு சாரை பார்த்து எனக்கு தோணுச்சு. நமக்குக் கிடைச்ச அத்தனை விஷயங்களுக்கும் பின்னால யாரோ ஒருவருடைய அல்லது எத்தனையோ பேருடைய போராட்டம் இருக்கு. இது நமக்கே தெரியாது.
"அப்படித்தான் இன்னைக்கு நாம அனுபவிக்கிற பல விஷயங்களுக்குப் பின்னாடி சந்துரு சாரும் ஒரு காரணமா இருக்கார். ஆர்டிஐ ஆக்ட் ஆரம்பிச்சு, சத்துணவுக்கூடத்தில் பெண்களுக்கு வேலை துவங்கி... பல மாற்றங்களுக்கு காரணம் சந்துரு சார்தான்.
"அவருடைய வாழ்க்கை வரலாற்றை படமா எடுக்கறதும் அவர் கேரக்டரில் கோட்டு போட்டு நடிக்கறதும் எனக்கு கிடைச்ச மிகப்பெரிய ஆசீர்வாதம். அவர் இந்த கதைக்கு ஓகே சொன்னதே எங்களுக்கு கிடைச்ச மிகப்பெரிய அங்கீகாரம். அவர்கிட்ட இருந்து தினம் தினம் கத்துக்க அவ்வளவு விஷயங்கள் இருக்கு," என்றார் சூர்யா.
இதற்கிடையே, 'ஜெய் பீம்' படத்தின் தலைப்பை கொடுத்த இயக்குநர் பா.ரஞ்சித், படத்தைப் புகழ்ந்ததுடன் இந்தக் கதை போல பலகதைகள் இனி வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.