தீபாவளிக்கு திரையரங்குகளில் 'அண்ணாத்த', 'எனிமி', படங்களும் 'ஓடிடி' தளங்களில் 'ஜெய் பீம்', 'எம்ஜிஆர் மகன்' ஆகிய படங்களும் வெளிவந்துள்ளன.
சூர்யா நடித்த 'ஜெய் பீம்' படம் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே 'ஓடிடி' தளத்தில் வெளியானது. உண்மைச் சம்பவத்தைத் திரையில் சிறப்பாகக் கொண்டு வந்ததற்காக இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்துள்ளன. அதேசமயம் சில குறியீடுகள் பற்றியும் ஒரு குறிப்பிட்ட சாதி பற்றியும் தவறான சித்திரிப்புகள் படத்தில் இடம்பெற்றதாக அந்த சாதியினர் கடும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் தீபாவளிப் படங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு படமாக இந்தப் படம் அமைந்து, தரமான படம் என்ற பெருமையைத் தட்டிச் சென்றுள்ளது.
ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படம் வழக்கம்போல அதிகாலைக் காட்சியிலிருந்தே பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இரண்டு காட்சிகள் கடந்த பிறகு படத்தைப் பற்றி எதிர்
மறையான கருத்துகள்தான்
அதிகம் பரவின. தான் எடுத்த
முந்தைய படங்களின் காட்சிகள், வேறு சில படங்களின் காட்சிகள் என கலந்து எடுத்துவிட்டார் சிவா என்ற விமர்சனங்கள் அதிகம் எழுந்தன. இருந்தாலும் ரஜினிகாந்த் தன்னுடைய நடிப்பால் படத்தைக்
காப்பாற்றிக்கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. படம் பற்றி எதிர்மறை விமர்சனங்கள் எவ்வளவு வந்தாலும் வசூலில் 'அண்ணாத்த' அள்ளுவார் என்றே கோலிவுட் வட்டாரங்கள் கொடுக்கும் தகவலாக உள்ளது.
விஷால், ஆர்யா நடித்த 'எனிமி' படம் இளம் சினிமா ரசிகர்களை ஓரளவிற்குக் கவர்ந்துள்ளது. ஆனாலும் படத்தில் எதிர்மறையான விஷயங்கள் நிறையவே உள்ளன என்பது விமர்
சகர்களின் கருத்து. நீளமான பழைய நினைவுகள், அழுத்தமில்லாத பல காட்சிகள், லிட்டில் இந்தியா ஒரே செட்டில் அதிகக் காட்சிகள், விஷால் - ஆர்யாவிடம் காணப்படாத ஏட்டிக்குப் போட்டியான நடிப்பு என பல குறைகள் இருப்பதாகக் கூறப்
படுகிறது.
சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி நடித்த 'எம்ஜிஆர் மகன்' படம் 'ஓடிடி' தளத்தில் வெளியானது. இன்னும் சில பல
ஆண்டுகளுக்கு சசிகுமார், சமுத்திரக்கனி கூட்டணி
சேராமல் இருப்பதே நல்லது என ரசிகர்கள் வேண்டுகோள் வைக்கும் அளவிற்குப் படம் உள்ளது.
இருவரும் இணைந்து நடித்த 'உடன்பிறப்பே' படம் கடந்த மாதம்தான் வந்து சோதித்தது. ஒரு மாதத்திற்குள்ளாக மீண்டும் 'எம்ஜிஆர் மகன்' படத்தில் இப்படியா சோதிப்பது என ரசிகர்கள் புலம்பித் தள்ளுகிறார்கள். சிவகார்த்திகேயனுக்கு தான் இயக்கிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' படங்களில் நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்திக்கொடுத்த பொன்ராம் பின்னர் 'சீம ராஜா' படத்தில் சிவகார்த்திகேயனை சறுக்க வைத்தார். அந்த சறுக்கு மரத்தில் இப்போது சசிகுமாரை இறக்கிவிட்டார் என்கின்றனர்
சசிகுமாரின் அபிமான ரசிகர்கள்.