மனச்சிதைவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதையை அலசும் படமாக உருவாகி உள்ளது 'ஏஜிபி'. அறிமுக இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியன் இயக்கி உள்ளார்.
லட்சுமி மேனன் நாயகியாக நடிக்க, ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைத்துள்ளார் ரமேஷ்.
இயக்குநர் சக்தி செளந்தரராஜனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கைகொடுப்பதால், தன் குருநாதரைப் போலவே வித்தியாசமான கதைக்களத்துடன் தாமும் களமிறங்கி உள்ளதாகச் சொல்கிறார்.
"மனச்சிதைவு என்ற நோயின் பாதிப்பு உலகெங்கும் இருக்கிறது. சராசரியாக 125 பேரில் ஒருவருக்கு இந்த நோயின் பாதிப்பு இருக்கிறது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
"இந்த நோயின் தன்மையைப் பற்றி நிறைய தகவல்களைக் கூற முடியும். முக்கியமானது என்றால், இப்படியொரு பிரச்சினை இருப்பது சம்பந்தப்பட்டவருக்கே தெரியாது. இதனால் பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.
"தமிழில் இதற்கு முன்பு 'ஆளவந்தான்' படத்தில் கமல், '3' படத்தில் தனுஷ் ஆகியோர் கிட்டத்தட்ட இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில்தான் நடித்துள்ளனர். இந்த நோயைக் குணப்படுத்த சென்னையில் ஒரு சிகிச்சை மையம் இயங்கி வருகிறது," என்கிறார் ரமேஷ்.
தனிமை, உறவுகளைப் பிரிதல், காதல் தோல்வி போன்ற பிரச்சினைகளால் 'டோபாமைன்', 'குளுடோமேட்' போன்ற சுரப்பிகள் அதிகம் சுரக்கும் என்றும் இதன் காரணமாக மூளை சீராக இயங்காது என்றும் சுட்டிக்காட்டுபவர், படத்தை திரையில் காணும்போது தமக்கு இத்தகைய பிரச்சினை இருப்பதாக சிலருக்கு தோன்றும் வாய்ப்புண்டு என்கிறார்.
குறைந்தபட்சம் இந்தப் பாதிப்பு குறித்து நான்கு பேரிடமாவது விவரம் தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணம் மனதில் வலுக்கும் என்றும் சொல்கிறார்.
இந்தப் படத்துக்கான கதையை எழுதி முடித்ததும் நாயகியாக நடிக்க நயன்தாரா அல்லது ஆண்ட்ரியா ஆகிய இருவரும்தான் பொருத்தமாக இருப்பார்கள் எனக் கருதினாராம்.
ஆனால் இருவருமே பல படங்களில் நடித்து வருவதால் இரண்டு ஆண்டுகளுக்கு கால்ஷீட் இல்லை என்று கூறியுள்ளனர். அதன்பிறகே லட்சுமி மேனனை நடிக்கக் கேட்டு அணுகியதாக உண்மையை ஒப்புக்கொள்கிறார் இயக்குநர் ரமேஷ்.
லட்சுமி மேனனோ கதையைக் கேட்ட அடுத்த நிமிடமே, "எப்போது படப்பிடிப்பு?" என்று கேட்டாராம். இந்தப் படத்துக்குப் பிறகு லட்சுமி, கோடம்பாக்கத்தில் மீண்டும் ஒரு வெற்றி வலம் வருவார் என்பது ரமேஷின் நம்பிக்கை.
"கடந்த சில மாதங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ளார் லட்சுமி. ஆனால் எந்தக் கதையும் அவரது மனதைக் கவரவில்லை. இந்நிலையில், நான் சொன்ன கதை வித்தியாசமாக இருப்பதாகப் பாராட்டினார்.
"கதைப்படி அவரது பெயர் பூஜா. மும்பையில் இருந்து சென்னைக்கு வரும் பூஜாவுக்கு மனச்சிதைவு பாதிப்பு இருப்பது அவருக்கே தெரியாது. சென்னையில் நடக்கும் ஒரு சம்பவம் அவரை வெகுவாகப் பாதிக்கிறது.
"அதை எப்படி எதிர்கொள்கிறார், மனச்சிதைவும் ஒருபக்கம் நெருக்கடி கொடுக்க, கடும் போராட்டத்தை எதிர்கொள்கிறார். அவர் எப்படி பாதிப்பில் இருந்து மீள்கிறார் என்பதுதான் கதை.
"பியூட்டிஃபுல் மைண்ட்' என்ற ஆங்கிலப் படத்தில் ரசல் குரோவ் நடித்திருப்பார். கணித நிபுணத்துவத்துக்காக நோபல் பரிசு வாங்கியவர் பற்றிய கதையை விவரிக்கும் படம் அது.
"அந்தச் சாதனை மனிதர் மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர். தனக்குள்ள பிரச்சினையை வைத்துக்கொண்டு அவர் எப்படி வாழ்க்கையில் சாதித்துக் காட்டுகிறார் என்பதுதான் சிறப்பம்சம். அதுபோன்றதொரு கதாபாத்திரத்தில்தான் லட்சுமி மேனன் நடிக்கிறார்," என்கிறார் ரமேஷ்.
'நீ நான் நிலா', 'பாக்கணும் போல' உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ள பரதன் இந்தப் படத்தில் வித்தியாசமான வேடத்தை ஏற்றுள்ளார்.
மனச்சிதைவு பாதிப்புள்ள சிலர் பெரும்பாலும் அமைதியாக இருப்பார்கள். பின்னர் திடீரென்று ஆவேசமடைவார்கள். இத்தகைய மோசமான பாதிப்பு கொண்டவராக பரதன் நடிப்பில் அசத்தி உள்ளாராம்.
அதென்ன 'ஏஜிபி'. வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என்று கேட்காதவர்களே இல்லையாம்.
"படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களில் உள்ள முதல் எழுத்தை கோர்த்தால் தலைப்பு வரும். கதை கொரோனா காலகட்டத்தில் நடப்பதுபோல் இருக்கும்.
"வழக்கமான நாட்களில் நாம் எங்கும் போகலாம். ஆனால், கொரோனா சமயத்தில் வீட்டில் இருந்தவர்களே தனித்தனி அறையில் இருந்தோம். அந்த மாதிரி சூழ்நிலையில் மனச்சிதைவு உள்ளவர்கள் எப்படி பாதிக்கப்படுவர் என்பதைச் சொல்லி இருக்கிறோம்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். யாருடனாவது பேசுவது, யோகா செய்வது, படிப்பது, உடற்பயிற்சி செய்வது என்று எதையாவது செய்வது நல்லது.
"சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால், மூளை அமைதி அடைய வேண்டும்," என்கிறார் ரமேஷ்.