விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'வீரம் வாகை சூடும்' படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். எனினும், இதில் யோகியின் வழக்கமான சேட்டைகள் இடம்பெறாதாம்.
படத்தின் கதையை விஷாலிடம் விவரித்தபோதே, இதில் யோகி பாபுவின் நகைச்சுவைக்குப் பதிலாக, அவரது குணச்சித்திர நடிப்புதான் வெளிப்படும் என்று தெளிவாக கூறிவிட்டதாகச் சொல்கிறார் இயக்குநர் து.ப.சரவணன்.
"யோகி பாபுவின் குணச்சித்திர நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். 'பரியேறும் பெருமாள்', 'மண்டேலா' போன்ற படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் முத்திரை பதித்துள்ளார்.
"இது கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம். நாம் திரையில் கையாளும் கதைக்கருவை திசை திருப்பும் மாதிரியான அம்சங்களை பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
"நான் நேர்த்தியான படங்களைப் பார்த்து வளர்ந்தவன். ஒரு படத்தின் முதல் காட்சியில் எந்தவிதமான பாதிப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்துகிறோமோ, அதே மனநிலையில்தான் முழுப் படத்தையும் பார்ப்பார்கள். என்னுடைய கருத்தை தெரிவித்த பிறகு விஷாலும் யோகி பாபுவும் எந்தவித கேள்வியும் எழுப்பவில்லை. நடிப்பதற்கு தயாராகிவிட்டனர்.
"விஷால் நடிப்புக்காக எந்த நிலைக்கும் உருமாறக்கூடியவர். கற்பனைக்கு அப்பாற்பட்டவைகளைக் கண்முன் நிறுத்துபவர்தான் நல்ல படைப்பாளி. அதற்கு வடிவம் தருபவர்கள் நடிகர்கள். விஷால் அந்தப் பணியை சிறப்பாகச் செய்கிறார்," என்கிறார் து.ப.சரவணன்.