நடன இயக்குநர் 'கூல்' ஜெயந்த் நேற்று முன்தினம் காலமானார்.
அண்மைக்காலமாக அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சையைப் பெற்று வந்தார்.
தமிழ் சினிமாவில் குழு நடனங்களில் பங்கேற்று வந்த 'கூல்' ஜெயந்த், 'காதல் தேசம்' படத்தின் மூலம் நடன இயக்குநராக உயர்ந்தார்.
அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அவர் காலமானார். கூல் ஜெயந்த் மறைவுக்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் 'இந்தியன்' படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தாய்மை அடைந்திருப்பதால் தம்மால் தொடர்ந்து நடிக்க இயலாது என்று காஜல் தரப்பில் காரணம் தெரிவிக்கப் பட்டதாகத் தகவல்.
ஏற்கெனவே பல்வேறு பிரச்சினைகளால் இப்படம் அவ்வப்போது முடங்கியது. இப்போது காஜலுக்குப் பதிலாக வேறு ஒரு நாயகியை ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு லட்சுமி மேனனுக்கு மீண்டும் பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில், கொச்சி நகரில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை நிறைவேறியதாகக் குறிப்பிட்டு காணொளிப் பதிவு ஒன்றை தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் லட்சுமி.
அதில் அவர் மெட்ரோ ரயிலில் நடனமாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவர் மட்டுமல்லாமல், அவரது நடனமும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.