ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது ‘மைக்கேல்’. மேலும் மூன்று மொழிகளில் இப்படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிட உள்ளனர்.
சந்தீப் கிஷன் நாயகனாகவும் திவ்யன்ஷா கௌஷிக் நாயகியாகவும் நடித்துள்ளனர். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார்.
‘புரியாத புதிர்’, ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ரஞ்சித். இப்போது மேலும் ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களைச் சந்திப்பதாகக் கூறுகிறார்.
‘மைக்கேல்’ என்பது கதைநாயகனின் பெயராம். இதைத் தேர்வு செய்ததற்கான காரணத்தையும் விளக்குகிறார்.
“பொதுவாகவே மைக்கேல் என்ற பெயர் மீது பலருக்கும் ஒருவித ஈர்ப்பு இருக்கும். தமிழ்த் திரையுலகத்தில் மைக்கேல் என்ற பெயருக்கு ஒரு தனித்துவம் உண்டு.
“மைக்கேல் மதன காமராஜன்’ ஆகட்டும், ‘ஆயுத எழுத்து’ மைக்கேல் வசந்த் கதாபாத்திரம் ஆகட்டும், இன்றளவும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கின்றன. மேலும் இந்தப் படம் ஐந்து மொழிகளில் வெளியிடப்படுவதால், அனைத்து மொழிகளுக்கும் பொதுவான பெயராக ‘மைக்கேல்’ இருக்கும்
“ஒரு மனிதனுக்குள் தேவதை, சாத்தான் என இரண்டு விதமான குணாதிசயங்கள் இருக்கும். சிலருக்கு தேவதையாக தோன்றும் மனிதன், மற்றவர்களுக்கு சாத்தானாக காட்சியளிக்கக் கூடும்.
“எல்லாரும் எல்லாருக்கும் எப்போதுமே நல்லவர்களாக இருக்க முடியாது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இதை அதை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது ‘மைக்கேல்’ படம்,” என்கிறார் ரஞ்சித் ஜெயக்கொடி.
நாயகன் சந்தீப் கிஷன் இவரது நெருக்கமான நண்பர்களில் ஒருவராம். இந்தப் படத்துக்காக கடும் உடற்பயிற்சி செய்து, கடுமையாக உழைத்ததாக சந்தீப்பை பாராட்டுகிறார் ரஞ்சித்.
“நான் விவரித்த கதையைக் கேட்டதும் மிகவும் பிடித்துப் போனதாகச் சொன்னார் சந்தீப். புரூஸ்லீ உயிரோடு இருந்திருந்தால், அவரைத்தான் நாயகனாக ஒப்பந்தம் செய்திருப்பேன் என்றேன்.
“உடனே, மூன்று மாதங்கள் தமக்கு அவகாசம் தருமாறு கேட்டுக்கொண்டார். அதன் பிறகு என்னை அவர் சந்தித்தபோது, அவரது உறுதியான உடல்வாகைக் கண்டு அசந்து போனேன்.
“மூன்று மாதங்கள் அவர் எந்தளவுக்கு உழைத்திருப்பார் என்பதை என்னால் உணர முடிந்தது. இப்படிப்பட்ட அர்ப்பணிப்புடன் கூடிய இளம் நாயகர்களை ரசிகர்கள் ஆதரிக்க வேண்டும்,” என்கிறார் ரஞ்சித்.
இப்படத்தில் சண்டைக் காட்சிகள் அதிகமாம். எனினும் இதர பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாக உத்தரவாதம் அளிக்கிறார்.
விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் இருப்பது முக்கிய தகவல். முதலில் சிறிய கதாபாத்திரத்துக்காக அவரை அணுகினாராம் ரஞ்சித். ஆனால் கதையைக் கேட்டு அதில் நடிக்க ஒப்புக்கொண்ட விஜய் சேதுபதி, நாளடைவில் அதிக ஈடுபாடு காட்டி உள்ளார். ஒரு கட்டத்தில் தனது கதாபாத்திரத்தை படம் முழுவதும் வரும்படி கதையை மாற்றுமாறு கேட்டுக் கொண்டாராம்.
“இது அசத்தலான கூட்டணி. முன்னணி கதாநாயகன் ஒருவர் மற்றொரு இளம் நாயகனின் படத்துக்காக இந்த அளவுக்கு ஆர்வத்துடன் நடிப்பதும் ஈடுபாடு காட்டுவதும் அரிது. அந்த வகையில் விஜய் சேதுபதிக்கு ஒட்டுமொத்த படக்குழுவும் நன்றிக்கடன் பட்டுள்ளது.
“கதாநாயகி திவ்யன்ஷாவுக்கு தமிழ் ரசிகர்களை ரொம்பப் பிடிக்கும். அவர்களிடம் நல்ல பெயர் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் தனது முதன்மைக் குறிக்கோள் என்று என்னிடம் கூறினார். நன்றாக நடித்தால் தமிழ் ரசிகர்கள் தாமாகப் பாராட்டி வரவேற்பார்கள் என்றேன். அதைப் புரிந்துகொண்டு நன்றாக நடித்தார்.
“காதல், நகைச்சுவை காட்சிகளில் அவரது நடிப்பு மிக இயல்பாக இருந்தது. மேலும், இவரது கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒரு மர்ம முடிச்சும் உள்ளது. கதையின் சுவாரசியமான பகுதிகளில் அதுவும் அடங்கும்.
“என்னுடைய படங்களில் கதாநாயகிக்கு நிச்சயம் முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான். அதற்கு தகுதி உடைய நடிகை என்பதை திவ்யன்ஷா நிரூபித்துள்ளார்
திவ்யன்ஷாவுக்கு தமிழ் ரசிகர்கள் மனதில் நிச்சயம் தனி இடம் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்,” என்கிறார் ரஞ்சித்.
‘மைக்கேல்’ படம் மிக விரைவில் திரை காண உள்ளது.
, :
தமிழகத்