நீதித்துறை எனும் அமைப்பின் அடிநாதமாக இயங்கி எந்தவொரு நபரும் எளிமையாக அதை அணுகிட தங்கள் கடமைக்கும் அப்பால் சென்று உழைக்கின்றனர் இந்த வழக்கறிஞர்கள்.
நீதி தேடுவோரின் முகவரியாகச் சத்தமின்றி சேவையாற்றி வரும் நீதிமன்றத் தொண்டூழியர்களின் அர்ப்பணிப்பை சிங்கப்பூர் நீதிமன்றங்கள் அண்மையில் கொண்டாடின.
அவ்வகையில் ‘நீதி வழங்குதல் மாற்றத்தை ஏற்படுத்துதல்‘ எனும் அற உணர்வுடன் பிறர் வாழ்வில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்திய நீதிமன்றத் தொண்டூழியர்களுக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டினார் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன்.
அவ்விருது பட்டியலில் இடம்பெற்ற நான்கு தொண்டூழியர்களின் நற்சேவைப் பயணம்குறித்த பதிவு இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.
நிழற்படத்தில் பார்த்ததை நிஜத்தில் செய்து காட்டியவர்
மரணத் தண்டனைக்கான சட்ட உதவித் திட்டம் (லாஸ்கோ) தொடர்பில் 25 ஆண்டுகள் அல்லது அதற்குமேல் சேவையாற்றிய வழக்கறிஞர்களின் தொண்டூழியத்திற்காக வழங்கப்பட்ட ‘நீண்டகாலச் சேவை‘ விருதுக்குச் சொந்தக்காரர் திரு அழகர்சாமி பழனியப்பன், 74.
‘பெர்ரி மேசன்‘ எனும் தொலைக்காட்சித் தொடரில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வழக்கறிஞரின் அபாரத் திறமையால் காப்பாற்றப்பட்டதை கண்டபோது நீதித்துறை மீதான ஆர்வம் விளைந்திட்டதாகக் கூறினார் திரு அழகர்சாமி.
‘‘சவாலான பல வழக்குகளிலும் அந்த வழக்கறிஞர் கதாபாத்திரம் சாதுர்யமாகச் செயல்பட்டு பலரின் வாழ்க்கையை காப்பாற்றியது என்னுள் தாக்கத்தை ஏற்படுத்த, பிறர் நலன் காக்கும் இந்த அமைப்பில் நானும் ஓர் அங்கமாக இருக்க வேண்டும் என்று விழைந்தேன்,’’ என்றார் திரு அழகர்சாமி.
பிறகு சிங்கப்பூர் நீதித்துறையில் வழக்கறிஞராக இணைந்தபோது, ‘லாஸ்கோ‘ திட்டம்குறித்து அறிந்துகொண்டதாக குறிப்பிட்ட அவர், ‘‘இத்திட்டம் மரணத் தண்டனையை எதிர்கொள்வோரை பிரதிநிதிப்பது என்பதால், நான் கொண்டிருந்த துறை சார்ந்த குறிக்கோள்கள், விருப்பங்களை நிறைவேற்ற இது உற்ற வாய்ப்பை அளித்தது,’’ என்றார்.
தொடர்புடைய செய்திகள்
தொண்டூழிய நீதிச்சேவையால் பலருக்கு உதவ முடிந்தது நிறைவாக இருப்பதாகக் கூறிய திரு அழகர்சாமி, ‘‘குறிப்பிட்ட ஓர் வழக்கு விசாரணையின்போது, குற்றவாளிக்கு மரணத் தண்டனை அல்லாமல் குறைந்த தண்டனையை விதிக்கும்படி செய்வதற்கு தமது பணி வழிவகுத்தது.
‘‘இது போன்ற உறுதியான மாற்றங்களைப் பிறர் வாழ்வில் நிகழ்த்த முடிந்த பல தருணங்களை நீதிமன்ற தொண்டூழியராகப் பெருமையுடன் நினைவுகூர்கிறேன்,’’ என்றார் திரு அழகர்சாமி.
தேவையுள்ளோருக்கு வாதாடுவது இவரின் வாழ்நாள் கனவு
நீதித்துறையில் தொண்டுள்ளத்துடன் நீண்டகாலம் சேவையாற்றியதற்காக வழங்கப்பட்ட ‘லாஸ்கோ‘ உச்ச விருதைப் பெற்ற மற்றுமொரு மூத்த வழக்கறிஞர் திரு மஹாதேவன் இலச்சுமாயா, 67.
சட்டப் பிரச்சினைகளைச் சந்திப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும் என்பதே இவரின் நோக்கமாக இருந்தது.
‘‘அக்கனவை மெய்ப்பிப்பதற்கான திறவுகோல் வழக்கறிஞர் பணி என்பதால் சிறுவயதிலிருந்தே வழக்கறிஞராக வேண்டும் என்று கனவு கண்டேன்,” என்று கூறினார் திரு இலச்சுமாயா.
இந்த சேவைப் பயணத்தில் ஒவ்வொரு வழக்குகளுமே மறக்கமுடியாத நினைவுதான் என்று குறிப்பிட்ட இவர், தொடர்ந்து பேசினார்.
‘‘ஒரு சமயம் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்காக வாதாட நேர்ந்தது. அப்போது அவருக்குத் தண்டனை கிடைத்தபோதும் மரணத் தண்டனையிலிருந்து அந்த நபர் தப்பினார். அந்த வழக்கில் தொடர்புடைய அந்த நபர் அவரைத் தற்காத்து முன்வைக்கப்பட்ட வாதம் ஏற்றுக்கொள்ளபடவில்லை என்று வருத்தமுற்றாலும், அவரது வழக்கிற்காக மேற்கொண்ட சேவையைப் பாராட்டினார்,’’ என்று பணி சார்ந்த சூழலை விளக்கினார் திரு இலச்சுமாயா.
மேலும், அவருக்குக் கிடைத்த அந்த உதவிக்காகத் தமக்கு நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல், பிற கைதிகளிடமும் நீதித்துறை தொண்டூழியர்கள் குறித்த சான்றைப் பகிர்ந்து கொண்டது இச்சேவையில் நிலைக்க மேலும் ஊக்கமளிப்பதாக உள்ளது,’’ என்றார் அவர்.
தொண்டூழியம் என்பது கடமை
நீதித்துறையில் தொண்டு செய்வது ஒரு வழக்கறிஞராகத் தனது கடமை என்று கருதுகிறார் திரு ராஜன் செட்டியார், 59. இவரது 15 ஆண்டுகால தொண்டூழியப் பணிக்காக ‘‘நீண்டக் கால சேவை’’ விருது வழங்கப்பட்டுள்ளது.
நீதி சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு அளிக்கும் பொறுப்பு வழக்கறிஞர்களுக்கு உள்ளது என்று தாம் கருதுவதாகக் கூறினார், 28 ஆண்டுகளாக இதனை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டிருக்கும் திரு ராஜன்.
குறிப்பாகக் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பில் ஏற்படும் சச்சரவுகளில் பலகட்ட சமரச அமர்வுகளுக்குப் பிறகு அந்தத் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவதும், நீதியை நாடுவோரின் வாழ்க்கையில் தம்மால் ஏற்படுத்தக்கூடிய ஆக்ககரமான தாக்கத்தை நேரடியாகக் காணும்போதும் மனம் நிறைவாக இருக்கும் என்றார் அவர்.
பலன் எதிர்பாராமல் சமூகத்திற்குச் சேவை
தம்மை பொறுத்தவரையில் எந்தவொரு பலனையும் கருத்தில் கொள்ளாமல் சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணமே தொண்டூழிய நற்பணிக்கான ஆதாரம் என்று கூறினார் திரு பி ரெங்கராஜு ரெங்கசாமி, 81.
15 ஆண்டுகாலம் அர்ப்பணிப்புடன் நீதித்துறையில் தொண்டாற்றியதற்காக வழங்கப்பட்ட ‘நீண்டகாலச் சேவை விருது‘ இந்த ஆண்டு இவரின் கரம் சேர்ந்தது.
‘‘நீதியை நாடும் எவருக்கும் அதை அவர்கள் பெற்றுக்கொள்ளத் தக்க வகையில் அளித்து, வழக்குதாரர்கள் அகமகிழ்ந்து செல்வதை காண்பதே இந்தப் பணியில் கிடைக்கும் அளப்பற்கரிய மனநிறைவு,’’ என்றார் திரு ரெங்கராஜு.
‘‘நீதிக்கான வாசல், அதைப் பெற்றுகொள்ளும் முறை என்பது பல்வேறு பங்காளிகளை உள்ளடக்கியது. வழக்கறிஞருக்கு வழக்குச் செலவினங்களைக் கட்ட இயலாத காரணத்தால், எந்தவொரு முடிவையும் எட்டாமல் கடந்து சென்ற பலரை பார்த்துள்ளேன்.
ஆனால் இத்துறையில் நீதிமன்ற தொண்டூழியராக இருக்கையில், எந்தவொரு கட்டணமுமின்றி அவர்களுக்கான சேவை வழங்க இயல்வது சிறப்பு,’’ என்றார் அவர்.
நீதி அனைவருக்கும் எப்போதும் தவறாமல் கிடைக்கச் செய்வதை உறுதி செய்வதற்காக அயராது உழைக்கும் நீதிமன்ற தொண்டூழிய அணியின் இன்றியமையா இதயத் துடிப்புகள் இந்தத் தொண்டூழிய சேவையாளர்கள். தொண்டூழியர்களாகப் பல்வேறு நிலைகளில் இவர்கள் சமூகத்தினருடன் இணைவதால் நீதிக்கொடியை எவரும் நித்தம் ஏந்திச்செல்ல வழிவகைசெய்கின்றனர்.
நீதிமன்ற தொண்டூழியர்களாக இணைய விரும்பினால் https://www.judiciary.gov.sg/join-us/be-state-courts-volunteer இணையப் பக்கத்தைப் பார்வையிடலாம்.

