எழுத்துலக ஈடுபாட்டை வளர்க்க முற்படும் ‘மற்றும் குழுவினர்’

எழுத்துலக ஈடுபாட்டை வளர்க்க முற்படும் ‘மற்றும் குழுவினர்’

1 mins read
98836810-e6b7-4b98-815b-414e35f0e7da
தேசிய நூலக வாரியத்தில் மற்றும் வாசகர்க் குழு, இலக்கியப் படைப்புகளையொட்டி கலந்துரையாடல் நடத்துகின்றனர். - படம்: மற்றும் குழுவினர்
Google News Preferred Icon

எழுத்தாளர்களின் பலதரப்பட்ட படைப்புகளை ஆராயும் வாசகர் குழுவான ‘மற்றும் குழுவினர்’, ஒவ்வொரு மாதக் கடைசி ஞாயிறன்று சந்திப்புகளை நடத்தி வருகிறது.

விக்டோரியா ஸ்ட்ரீட் தேசிய நூலகத்தில் இந்தக் குழுவினர் ஞாயிறுதோறும் மாலை 4 மணியளவில் மாதாந்திரச் சந்திப்பை நடத்துகின்றனர்.

மார்ச் 29ல் நிகழ்ந்த பத்தாவது ஒன்றுகூடலின்போது எழுத்தாளர் ரம்யா அருண் ராயன் எழுதிய ‘வெள்ளாப்பு’ சிறுகதையின் கதைக்களம், மொழி, கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்துப் பங்கேற்பாளர்கள் கலந்துரையாடினர்.

‘த நியூ பாய்’ (The New Boy) என்ற குறும்படம் ஒன்றைத் திரையிட்டு, அது குறித்தும் விரிவாக உரையாடலை முன்னெடுத்தனர்.

பின்னர், மனுஷ்ய புத்திரனின் ‘ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு’ கவிதை, நிலாக்கண்ணன் எழுதிய ‘எறும்பின் வழித்தடம்’ கவிதை, கவிஞர் ஜாக் ப்ரெவெர் எழுதி, தமிழில் வெ. ஸ்ரீராம் மொழிபெயர்த்த ‘குடும்ப வாழ்க்கை’ எனும் கவிதை குறித்தும் கலந்துரையாடல்கள் நிகழ்ந்தன.

வாசிப்புடன் மட்டும் நின்றுவிடாமல், புதிய கவிஞர்களையும் சிறுகதை எழுத்தாளர்களையும் உருவாக்குவதே இக்குழுவின் முக்கிய நோக்கமாகும் என்று இந்த அமைப்பைச் சேர்ந்த மோகனப்ரியா சந்திரசேகரன் தெரிவித்தார்.

“ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட சிறுகதை, கவிதை அல்லது குறும்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அது குறித்த போஸ்டர் முன்கூட்டியே வெளியிடப்படும். வாசகர்கள் அந்தப் படைப்பைப் படித்துவிட்டு வந்து, அது குறித்து ஆழமான விவாதங்களை மேற்கொள்வார்கள்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்