சிங்கப்பூர் இலக்கியக் களத்தின் முன்னேற்றம் பாராட்டத்தக்கது: பெருமாள் முருகன்

சிங்கப்பூர் இலக்கியக் களத்தின் முன்னேற்றம் பாராட்டத்தக்கது: பெருமாள் முருகன்

2 mins read
38dff257-41f1-490e-8f64-f10652876493
சிங்கப்பூர் இலக்கியக் களம் குறித்த தமது பார்வையைத் தமிழ் முரசு சிறப்பு நேர்காணலில் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் பெருமாள் முருகன். - படம்: த கவி
Google News Preferred Icon

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களத்தைத் தொடர்ந்து கவனித்து வருவதாகவும் இங்குள்ள இலக்கியவாதிகளிடமிருந்து நல்ல படைப்புகள் வெளிவருவதாகவும் பாராட்டியுள்ளார் எழுத்தாளர் பெருமாள் முருகன்.

அதே நேரத்தில், இங்குத் தமிழ் மொழியைப் புழக்கத்தில் வைத்திருக்க, வீடுகளில் பெற்றோர் பிள்ளைகளிடம் தமிழில் உரையாடுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கல்வித்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் கொண்ட பெருமாள் முருகன், “சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் பலரையும் சந்தித்துள்ளேன். சிலர் தமிழில் சரளமாகப் பேச சிரமப்படுவதைக் கவனித்தேன். அவர்களுக்குத் தமிழ்ப்பேச்சுப் பயிற்சி குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது. அவர்களிடம் இலக்கிய வாசிப்பு குறைவு எனவும் நினைக்கிறேன்,” என்றார்.

“தமிழ் ஆசிரியர்களுக்குத் தங்கள் பணிக்காக வாசிப்புப் பழக்கம் இருப்பது அவசியம். இயல்பில் இலக்கியத்தின் மீது பேரார்வம் இல்லாவிட்டாலும், துறை சார்ந்து, மாணவர்களிடம் சில முக்கியமான அம்சங்களைக் கொண்டுசேர்க்க வேண்டுமென்றால் வாசிக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

“பழந்தமிழ் இலக்கியங்களைப் பயிலாவிட்டாலும், நவீன தமிழ் இலக்கியங்களைக் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். சிங்கப்பூரிலிருந்து எழுத்தப்படும் நூல்களை வாசிக்க வேண்டும். அப்பழக்கம் இருந்தால் மட்டுமே ஆசிரியர்களால் மாணவர்களுக்கு இன்னும் சிறப்பாக உதவ முடியும். தமிழையும் அவர்களிடம் செம்மையாகக் கொண்டுசேர்க்க முடியும்,” என்றார் அவர்.

“மேலும், சிங்கப்பூர்ச் சூழலை மையமாகக் கொண்ட கதைகள் வரத் தொடங்கியுள்ளன. இணைய, சமூக ஊடக வளர்ச்சியின் காரணமாக, அவற்றைப் பலர் வாசிக்கும் வாய்ப்பும் தற்போது இருக்கிறது,” என்று திரு பெருமாள் முருகன் கருத்துரைத்தார்.

மொழியையும் கலாசாரத்தையும் சிங்கப்பூர் இளையர்களிடம் கொண்டுசேர்க்கக் கூடுதல் முயற்சிகள் அவசியம் எனக் கூறிய அவர் முந்தைய தலைமுறையினர்க்கு அவை குறித்த புரிதல் இருந்தாலும், தற்காலத் தலைமுறையினருக்குக் குறைவாக இருப்பதைக் கோடிட்டுக் காட்டினார்.

“தமிழை வீட்டில் பேச்சு மொழியாக அமைப்பது முக்கியமான அம்சம். அது மொழியுடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும்,” என்ற அவர், “தமிழ் முரசு போன்ற இதழ்களை இளைய தலைமுறையினர் படிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்றோர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நமது பண்டிகைகள், சடங்குகள் போன்றவற்றில் எவை ஆரோக்கியமானவையோ அவற்றைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அவை குறித்த பின்னணிகளை அவர்களிடம் எடுத்துக்கூற வேண்டும்,” என்றும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்