மக்களிடையே நற்பண்புகளை விதைத்துவரும் சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம்

சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம்

மக்களிடையே நற்பண்புகளை விதைத்துவரும் சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம்

3 mins read
0f6122e7-3a4f-48df-9532-5853a3369fe1
கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோவுடன் கனிவன்பு இயக்கத்தின்கீழ் சமூக ஆதரவுத் திட்டங்களை மேற்கொள்ளும் உறுப்பினர்கள். - படம்: சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம் 

லெங்கோக் பாரு வட்டாரத்தில் மூன்று ஆண்டுகளாக அண்டைவீட்டாருக்கு இலவச உணவை வழங்கும் திட்டத்தின்மூலம் உதவி வருகிறார் 48 வயது மர்லினா யாசித்.

தமது திட்டத்திற்குத் திருவாட்டி மர்லினா வைத்த பெயர் ‘ஹெல்த்தி யு அண்ட் மீ’. 

“அவசரமாக உணவு தேவைப்படும் மக்கள் இங்கிருந்து உணவு எடுத்துக்கொள்ளலாம். எங்களிடம் ஏழு பேர் கொண்ட குழு உள்ளது. சலவைத் தூள் போன்ற பொருள்களைச் சிலரால்  வாங்க முடியாமல் இருக்கலாம். அது போன்ற பொருள்களை வாங்கவும் உதவ விரும்புகிறேன்,” என்று சொன்னார் மர்லினா.

சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்தின்கீழ் செயல்படும் 24 இயக்கங்களில் மர்லினாவின் ‘ஹெல்த்தி யு அண்ட் மீ’ திட்டமும் ஒன்று. 

மர்லினா போலவே சமூகத்திற்கு உதவும் திட்டங்களைத் தொடங்கிய ஏறத்தாழ 280 பேர் கெளரவிக்கப்பட்டனர். 

‘நாம் ஒன்றிணைந்து சிறந்து விளங்குவோம்’ என்ற கருப்பொருளில் 14வது ‘சிங்கப்பூர் கனிவன்பு தினம்’ வெள்ளிக்கிழமை (மே 29) கொண்டாடப்பட்டது.

சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம், நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து தன்னார்வத் தொண்டுகளில் மக்களை ஈடுபடுத்த ‘ஒன்மேப்’ செயலியில் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

மக்கள் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்துகொள்ளும்போது அவர்களுக்கிடையே ஒருவிதப் பிணைப்பு ஏற்படுகிறது. அந்தப் பிணைப்புதான் சமூகத்திற்குப் பங்களிக்க அனைவரையும் தூண்டுகிறது என்று நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ கூறினார். 

“மக்கள் நற்பண்புகளுடன் நடந்துகொள்ள முயன்றாலும் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தங்கள் காரணமாக அவர்கள் கனிவாக நடந்துகொள்வது சவாலாக இருக்கக்கூடும். இருப்பினும் நாம் அனைவரும் அதற்கு முயல வேண்டும்,” என்றார் சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்தின் நிர்வாக இயக்குநர் மி‌‌ஷெல் டே.

சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்தின்கீழ் செயல்படும் மற்றோரு திட்டம், ‘கிட்ஸ் பிளே சேஃபர்’. 

அந்தத் திட்டம், இணையப் பயன்பாட்டின் சிக்கல்களைக் கையாள்வதற்குத் தேவையான திறன்களைக் குடும்பங்களுக்கு வழங்கும் ஒரு முயற்சி.

இணையப் பாதுகாப்பை மையமாகக் கொண்டு செயல்படும் ‘கிட்ஸ் பிளே சேஃபர்’ திட்டத்தைத் திருவாட்டி சாண்ட்ரா தொடங்கினார். 

திருவாட்டி சாண்ட்ரா, விளையாட்டின்மூலம் மின்னியல் வளங்களைப் பாதுகாப்பானதாகவும் பரிவுமிக்கதாகவும் மாற்ற முயல்கிறார். 

“கனிவாக இருப்பது என்பது நல்லவற்றைப் பேசுவது மட்டுமன்று. அது புண்படுத்தும் தகவலைப் பரப்புவதற்குமுன் நிதானித்து யோசித்துச் செயல்படுவதையும் குறிக்கும்,” என்றார் சாண்ட்ரா.

“நாங்கள் உருவாக்கிய ‘கிட்ஸ் பிளே சேஃபர்’ விளையாட்டு, முழுதும் உண்மையான சூழல்களை அடிப்படையாகக் கொண்டது. அதனை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று நாங்கள் மாணவர்களிடமும் கலந்துரையாடினோம்,” என அவர் மேலும் கூறினார்.

சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்தில் பெரியோர் மட்டுமல்ல பதின்ம வயதினரும் பங்களிக்க முன்வருவதைக் காண முடிகிறது.

திருவாட்டி மர்லினாவின் 12 வயது மகன் ரஃபீக், தமது நண்பர்களுடன் அவசரகாலச் சிறப்புக் காவல்படையைப் போலவே ஒரு குழுவை அமைத்துள்ளார். தங்களது வட்டாரத்தை அன்றாடம் ஒரு மணிநேரம் சுற்றிவந்து ஏதேனும் ஆபத்தான அல்லது சந்தேகத்திற்குரிய நடவடிக்கை தென்பட்டால் அதுபற்றி அம்மாவிடம் அவர் கூறுவார்.

மர்லினா அதனைத் தகுந்த அமைப்புகளிடமோ அதிகாரிகளிடமோ தெரிவிப்பார்.

“ஒரு முறை நான் என் நண்பர்களுடன் வட்டாரத்தைச் சுற்றிவந்தபோது, எரிவாயுக் கலன் ஒன்று அடுக்குமாடி புளோக்கின் கீழ்த்தளத்தில் கிடப்பதைப் பார்த்தேன். அது வெடிக்கக்கூடிய ஓர் அபாயகரமான பொருள் என்பதால் உடனடியாக அம்மாவிடம் தெரிவித்தேன்,” என்றார் ரஃபீக்.

கனிவன்பு தினத்தன்று, இயக்கத்தின்கீழ் செயல்படும் 24 திட்டங்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்