கல்விப் பயணத்தில் கலைகள்

வெடிப்புகள் நிறைந்த சென்னையின் அந்த அரசாங்க உயர்நிலைப் பள்ளிக் கட்டடத்தின் வண்ணமிழந்திருந்த சுவர்கள் பல வண்ண ஓவியங்களால் புதிய ஒளி பெற்று மிளிர்ந்தன. கடிகாரமும் இல்லாதிருந்த எளிமையான அப்பள்ளி மாணவர்களின் கரங்கள், நடன அசைவுகளால் பேரெழில் பெற்றன. இனிய இசை அந்தச் சூழலுக்கு இனிமைகூட்டி எல்லாருக்கும் ஆனந்தமளித்தது. வகுப்பறைகளில் பாடம் படிப்பதை மட்டுமே அறிந்திருந்த அந்த மாணவர்களுக்கு, பாட்டும் இசையும் ஓவியமும் அளவற்ற உற்சாகத்தைக் கொண்டு வந்தன. கலைகளின் ஆற்றல் மூலம் ஆக்ககரமான முறையில் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் பல நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் ஒன்றிணைந்து நடத்திய நான்கு நாள் கலை அறிமுக நிகழ்வுகள் அந்த மாணவர்களின் வாழ்வில் புதிய அனுபவத்தைக் கொண்டுவந்தது.

 

சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனம் (எஸ்ஐஎஃப்) இந்தியாவின் லாபநோக்கமற்ற சமூக அமைப்பான நளந்தாவே அமைப்புடன் இணைந்து இதனை வழிநடத்தியது.

பல நாடுகளைச் சேர்ந்த 32 கலைஞர்கள், வெவ்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஏறக்குறைய 100 வசதி குறைந்த மாணவர்கள் இனிமையான கலை அனுபவம் பெற வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தனர்.

இந்த மாணவர்களின் வாழ்க்கைச் சூழலில், இசையோ, நடனமோ, சித்திரமோ கற்க வாய்ப்புக் கிடைப்பது மிக அரிது. எனினும், கலை என்பது எல்லாத் தரப்பினருக்கும் உரிய ஒன்று. 

அது தரும் அனுபவத்தையும் உன்னத உணர்வுகளையும் அதன் மூலமான சிந்தனை மாற்றங்களையும்  வசதியில்லாதவர்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்தத் திட்டத்தின் இலக்கு.

பிப்ரவரி மாதம் 19 முதல் 22ஆம் தேதி வரை சென்னையில் நடைடெற்ற ‘ஆர்ட்ஸ் ஃபார் குட் ஃபெலோ‌ஷிப்’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்துலகக் கலைஞர்களில் சிங்கப்பூரின் முகம்மது நோராமினும் ஒருவர். கலைப் பங்களிப்புக்காக சிங்கப்பூர் இளையர் விருதை 2017ஆம் ஆண்டு பெற்றவர் இவர். 

அந்த சென்னை மேல்நிலைப் பள்ளியின் 12 மாணவர்களைக் கொண்ட இசைக்குழுவுக்கு திரு நோராமின் மலாய் நடனம் கற்றுத் தந்தார். நளந்தாவே அறநிறுவன ஆசிரியர்களில் ஒருவரான 37 வயது மஞ்சுளா பொன்னாபலி இசை கற்றுத்தந்தார். 

மலாய் நடனப் பாரம்பரியத்துக்கு ஏதுவாக மாணவர்களுக்கு கடல், மீனவர்கள், மீன் பிடிப்பது போன்ற வற்றை மையமாகக்கொண்ட பாடலைச் சொல்லிக் கொடுத்தார் அவர். இவை மலாய் கலாசாரத் திலும் இடம்பெற்றுள்ள அம்சங்கள். 

“மலாய் நடனத்தின் அசைவுகளையும் பரதநாட்டிய அசைவுகளையும் இணைத்து சில அசைவுகளை உருவாக்கினேன். மீன் நீந்துவது, கடல் அலை போன்றவற்றை உருவகப்படுத்தும் வகையில் அசைவுகளை உருவாக்க முனைந்தேன்,” என்று உற்சாகத்து டன் கூறினார் திரு நோராமின். 

கடந்த மூன்று ஆண்டுகளாக வசதிகுறைந்த சிறார்களைக் கொண்ட கிட்டத்தட்ட 16 வகுப்பு களுக்கு இசை சொல்லித்தரும் மஞ்சுளா, அவர்களிடம் கர்நாடக இசையையும் கிராமிய இசையையும் கொண்டு சேர்க்கிறார். 

“இசை சிறார்களின் வாழ்வில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். இசையின் மூலம் நற்பண்புகளையும் சிறார்கள் மனதில் பதியவைக்கலாம்,” என்றார் மஞ்சுளா.  

வசதி குறைந்த சிறார்கள் இசை கற்கும் வாய்ப்பை மஞ்சுளா ஏற்படுத்தித் தருவதைப்போல், திரு நோராமின் சிங்கப்பூரில் அனைவரும் மலாய் நடனம் கற்க வாய்ப்பளிக்கிறார்.  அனைத்து இனத்தவருக்கும் மலாய் நடனம் கற்றுத்தரும் ‘டியான் டான்சர்ஸ்’ என்ற மலாய் நடன அமைப்பின் துணை நிறுவனரான இவர், தென்கிழக்காசியக் கலைகளுக்கு பிரிட்டனில் அறிமுகம் தேடித்தரும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ‘பூமி கலெக்டிவ்’ என்ற கலை நிறுவனத்தையும் நிறுவினார். 

இந்த இரண்டு உலகங்களும் கூடி வருவதைப் பார்த்த அனை வரும் பூரித்துப் போனார்கள். 

‘ஏலேலோ ஐலசா’ என்ற பாடலுடன் மலாய் நடன அசைவுகளும் சேர்ந்து சிறார்களின் முகங்களில் புன்னகையை வரைந்தது.

இசை, நடனத்துடன் சுவரோவியங்களை வரையும் அனுபவத்தையும் மாணவர்கள் பெற்றனர். ஜிக்யாசா லபுரூ, 26, ஸ்டேஃபனி டர்னர், 29, காமியா ராமச்சந்திரன், 42 ஆகியோரின் ஏற்பாட்டில் கிட்டத்தட்ட 100 மாணவர்கள் நிற மிழந்து, கறைபடிந்திருந்த பள்ளிக் கட்டடத்தின் சுவர்களுக்கு ஓவியங்களால் உயிரூட்டினர். 

வெவ்வேறு உணர்வுகளுக்கு கவிதைகளும் கதைகளும் எழுதி, அதற்கேற்ப வண்ணங்களும் எழுத்துகளும் சுவர்களில் ஓவியங்களாகத் தீட்டப்பட்டன. 

வண்ணங்களால் உயர்பெற்றெழுந்த பள்ளியும், கலைகளால் உற்சாகம் பெற்ற மாணவர்களும் வறண்டிருந்த அந்த சூழலுக்குப் புத்துணர்ச்சி ஊட்டியதை நேரில் பார்த்த அனுபவம் அலாதியானது. 

கலைகள் அனைத்து மனிதர்களுக்கும் அவசியமானது என்பதை இந்த அனுபவம் உறுதிப்படுத்தியது. 

 

கவிதை வழி மாற்றுக் கல்வி

 

கவிதை வழி மாற்றுக் கல்வியை அறிமுகப்படுத்தி வரும் 26 வயது ஜிக்யாசா லபுரூ, மாணவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், பல நல்ல விஷயங்களையும் பண்புகளையும் தெரிந்துகொள்ளவும் கவிதைகள் சிறந்த வழி என்றார்.

ஆசிரியராகப் பணியாற்றிய அவர், இறுக்கமான பாடத்திட்டக் கோட்பாடுகளை மாற்ற விரும்பினார். மாற்றுக் கல்வியில் ஆர்வம் கொண்டிருந்த அவர், கலைகளைக் கல்வியுடன் இணைத்தார்.

‘ஸ்லேம் அவுட் லவுட்’ என்ற லாபநோக்கமற்ற நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜிக்யாசாவின் மாற்றுக் கல்வியை வழங்கும் பள்ளிகள், அமைப்புகளில் கவிதைப் பயிலரங்குகளை நடத்தி வருகிறார்.  நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பே கிட்டத்தட்ட 3,500 சிறார்களுக்கு பயிலரங்குகள் நடத்தியுள்ளார்.

“சிக்கிம் போன்ற இடங்களில் உணர்வுசார்ந்த பயிலரங்குகளை நடத்தும்போது ஆர்வம், பூரிப்பு, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை பெற்றதாக சிறார்கள் தெரிவித்தார்கள். காஷ்மீரிலுள்ள ஒரு பள்ளியில் பயிலரங்கை நடத்தியபோது நான் மட்டும்தான் மகிழ்ச்சி சார்ந்த உணர்வை எழுதியிருந்தேன்.  மாணவர்கள் எல்லாரும் கோபம், பயம், பதற்றம், கவலை போன்ற உணர்வுகளையே வெளிப் படுத்தினர். அப்போதுதான், இது எவ்வளவு அவசியமான பணி என உணர்ந்தேன்,” என்றார் ஜிக்யாசா.   
அவரது கவிதைப் பயிலரங்கு மாணவர்களின் சிந்தனைகளைத் தூண்டுவதாக அமைந்தது.

சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனமும் நளந்தாவே அறநிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த நான்கு நாள் கலைப் பயணத்தில் சென்னையின் பல கலைஞர்களையும் சமூகத் தொழில்முனைவர்களையும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.           
வரலாற்று அறிஞரும் எழுத்தாள ருமான திரு ஸ்ரீராம் வெங்கடகிருஷ்ணன் சென்னையை நகைச்சுவையோடு அறிமுகப்படுத்தினார். ‘தட்சிணசித்ரா’ அரும்பொருளகத்தில், போட்டித்தன்மைமிக்க சூழலில் நிலைத்தன்மையோடு இருப்பதை விளக்கும் பயிலரங்கையும் திரு ஸ்ரீராம் நடத்தினார். 

தென்னிந்தியாவின் மரபுடமை வீடுகளைப் பாதுகாப்பதில் கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது இந்த அரும்பொருளகம்.

“கைவிடப்பட்ட வீடுகளை வாங்கி அல்லது மீட்டு  இங்கு கொண்டு வந்து, நிபுணர்களின் உதவியுடன் பராமரிக்கிறோம். இங்குள்ள வீடுகள் 100 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை பழமையானவை,” என்றார் அரும்பொருளகத்தின் துணை இயக்குநர் திரு சரத் நம்பியார், 58.  விழாக்காலங்களில் இங்கு நிகழ்ச்சிகளும் கண்காட்சிகளும்  நடைபெறுகின்றன. 

சிங்கப்பூரர்களுக்கும் உலக சமூகங்களுக்குமிடையே  புரிந்துணர்வை அதிகரிக்கும் நோக்கத்தைக் கொண்டது சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனம். கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரப் பரமரிப்பு, வர்த்தகம் போன்ற துறைகளில் உலகெங்கும் பணியாற்றி வரும் இந்த அமைப்பு,  பல சமூகங்களை இணைப்பதற்கு கலையையும் ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது. 

நளந்தாவே அறநிறுவனம் இந்தியாவில் கலைகள் சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இசை, நடனம், வானொலி, திரைப்படம் முதலிய கலை வடிவங்களின் மூலம் வசதிகுறைந்த சூழலிலிருந்து வரும் குழுந்தை களின் குரலாக அமைகிறது.  13 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் இந்நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 50,000 குழந்தைகளுக்குப் பயனளித்து வருகிறது என்றார் அறநிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு ஸ்ரீராம். 

 

கலைகள், மாற்றுக்கல்வி வழி சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் தொண்டூழிய அமைப்புகள்

 

சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனமும் நளந்தாவே அறநிறுவனமும் இணைந்து ‘ஆர்ட்ஸ் ஃபார் குட்’ என்ற கருந்தரங்கு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்தன. 

வசதி குறைந்த சமூகப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான கல்வி, திறன் கற்றல், சமூக விழிப்புணர்வு, மனநோய் போன்ற தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற்றது. 

“சாதி, சமய வேறுபாடுகளால் இசைக் கல்வி பெறும் வாய்ப்புகளை இழந்தவர்களை நான் சந்தித்திருக்கிறேன்.  வெவ்வேறு  பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் ஒன்றிணைத்து, பிரச்சினைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த ஒரு தளமாக ‘தி காஸ்ட்லஸ் கலெக்டிவ்’ இசைக் குழு  விளங்குகிறது,” என்றார் குழுவின் இசை அமைப்பாளர் திரு டன்மா, 30. 

“நமது முயற்சிகளின் மூலம் சமுதாயத்தில் மாற்றத்தை உரு வாக்க விரும்புகிறோம்,” என்றார் பா.ரஞ்சித்தின் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற படத்தின் இசையமைப்பாளருமான திரு டன்மா.     

‘டீச் ஃபார் இந்தியா’ எனும் அமைப்பு இந்தியாவில் வசதி குறைந்த குழந்தைகளுக்கு வழங்கும் கற்றல் முறைகள் பற்றி விளக்கினார் அர்ச்சனா ராமசந்திரன். விரிவுரைகள், அரங்க படைப்புகளின் மூலமும் குடும்ப வன்முறை, மதுப்பழக்கம் போன்றவற்றின் தீய தாக்கங்கள் பற்றி மாணவர்களுக்கு கற்றுத் தருகிறோம் என்றார் அர்ச்சனா. 

வசதிகுறைந்த சமுதாயங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் அதிகமாக உள்ளதால், அச்சமூகங்களைச் சேர்ந்த சிறார்களுக்கு சிறு வயதிலிருந்தே நல்ல சிந்தனை முறையை வளர்ப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டார் அர்ச்சனா.

இவர்களுடன் ‘கிரியா சக்தி’ அரங்க அமைப்பின் தொழில் முனைவர் திரு டுஷ்யாந்த குணசேகர், ‘டிரிம் ஆ டிரிம்’ என்ற லாபநோக்கமற்ற நிறுவனத்தின் நிர்வாகி திரு ரெவானா மாரிலிங்கா ஆகியோரும் சென்னை ‘ஸ்டெல்லா மேரீஸ்’ கல்லூரியில் நடந்த இக்கருத்தரங்கில் பேசினர். 

இளம் வயதினரிடையே மன நோய் வளர்ந்து வரும் பிரச்சினை என்றும் கலைகள் இதைப் போக்க உதவும் சிறந்த ஊடகம் என்றும் பேச்சாளர்கள் கூறினர்.

 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

லிட்டில் இந்தியாவில் உள்ள பழக்கடைகளில் டுரியான் பழத்தைக் காண்பதென்பது அரிதினும் அரிது. ஆனாலும், இந்தப் பழத்தை விரும்பிச் சாப்பிடும் இந்தியர்களில் பலர் சிரமமும் தூரமும் பாராது கேலாங், சைனாடவுன் பகுதிகளுக்குச் சென்று டுரியானை வாங்கி சுவைத்துக்கொண்டுதான் உள்ளனர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Jul 2019

தீவெங்கும் வீசும் டுரியான் வாசம்

அமைச்சர் ஈஸ்வடன் உரையாடும் திருமதி லலிதா வைத்தியநாதன். வலது, அவரது இசை அமைப்புக் குறிப்பு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Jul 2019

ஆவணத் திரட்டுக்கு ஆதரவு