முறையான தமிழ்க் கல்விக்காக நூல்கள் எழுதும் தாயார் 

குழந்தையின் கற்கும் ஆற்றல் உச்சத்தில் இருக்கும் 3 முதல் 6 வயது வரையிலான பருவத்தில் அவர்களுக்குத் தமிழை முறையாக கற்றுக்கொடுத்தால் அதன்பின் அவர்களுக்கு தமிழ் படிப்பது எளி தாகிவிடும் என்பதை உறுதியுடன் நம்பும் மூன்று குழந்தைகளுக்குத் தாயான திருமதி கலா, 53, அதைச் செயல்முறைப்படுத்தி வருகிறார்.
பாலர் பள்ளியில் முழுநேர ஆசிரியராக இருந்தபோது மாண வர்களுக்கு ஆங்கிலம், கணிதப் பாடங்களை திருமதி கலா கற்றுக்கொடுத்தார். அப்போது ஆங்கிலம்போல் தமிழ் மொழியும் எழுத்து அடிப்படையில் முறையாகச் சொல்லித் தர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
சிங்கப்பூர் சூழலுக்கு ஏற்ப தமிழ் எழுத்துகளை இங்குள்ள குழந்தைகளுக்குச் சொல்லித் தர தரமான நூல்கள் இல்லாததால் தாமே அவற்றை எழுத நினைத்தார். 
அந்த நேரத்தில் அவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்ததால், முழு நேரமாக பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள பத்தாண்டு காலமாக செய்து வந்த பாலர் பள்ளி பணியிலிருந்து விலகினார். 
2000ஆம் ஆண்டில் ‘செயின்ட் வின்சன்ட் டி பால்’ பாலர் பள்ளியில் பகுதிநேரமாக தமிழ் கற்பித்தல் பணியை இவர் தொடங் கினார். அத்துடன் பாலர் பள்ளி முதல் தொடக்கப்பள்ளி வரை பயிலும் சிறார்களுக்கு வீட்டில் பாடம் சொல்லித் தந்தார்.
தமிழ் சொல்லித் தரத் தொடங் கியபோது தமிழ் நூல்களை எழுதும் எண்ணம் அவருக்கு தோன்றியது.  ஆனால் நூல்களை எழுதி வெளியிடுவது என்பது அவ்வளவு எளிதானதாக அமைய வில்லை. நூல்களை அச்சிட நிதியாதரவும் கிடைக்காதது மற்றொரு தடங்கல். 
எனவே, மின்னிலக்க முறையில் தாமே மழலையருக்கான நூல் ஒன்றை 2014ஆம் ஆண்டில் எழுதினார். உயிர் எழுத்துகளை அறிமுகப்படுத்தும் இந்த 12 பக்க நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் ஓர் எழுத்து இடம்பெற்றிருக்கும். பாலர் பள்ளி மாணவர்களிடம் அந்நூலை படிக்கச் சொல்லி ஆய்வு செய்தார். தமிழ் கற்பதில் மாணவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்ததோடு அவர்களிட மிருந்து கருத்துகளையும் கலா சேகரித்தார்.