வாசிப்பு விழாவில் கதைகளோடு ஒரு பயணம்

உற்சாகமான வாசிப்புப் பயணத்தில் அனைத்து மக்களையும் அழைத்துச் செல்லும் வகையில் 140க்கும் மேற்பட்ட பல சுவாரஸ்யமான அங்கங்களுடன் வாசிப்பு விழா 2019ஐ தேசிய நூலக வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.

பயணம் என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டின் வாசிப்பு விழாவின் தமிழ் நிகழ்ச்சிகள் எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜின் சிறப்புரையோடு நேற்று தொடங்கியது.

"கதைகளோடு பயணித்தல்: இலக்கியத்தின் 1001 இரவுகள்" என்ற தலைப்பில் பேசிய திரு சித்துராஜ், ஆயிரத்தொரு இரவுகள் கதைகளின் மூலம் இலக்கிய வாசிப்பினால் ஏற்படக்கூடிய நல்ல அனுபவங்களைனயும் அனுகூலங்களையும் சுவைபட எடுத்துக்கூறினார்.

கதைகளுக்குள் கதைகள் இருக்கின்றன, கதைகள் மற்ற கதைகளை அர்த்தமுள்ளவை ஆக்குகின்றன, கதைகள் எவருக்கும் சொந்தமில்லை என்ற கருத்தினை முன்வைத்த அவர், ஆயிரத்தோரு இரவுகள், மகாபாரதம், கேண்டர்பெர்ரி கதைகள், டால்ஸ்டாயின் போரும் அமைதியும் போன்ற ஒரு நூல்கள் வாசிப்புப் பயணத்தை மிகச் சிறப்பானதாக்கும் எனக் கூறினார்.

வாசிப்பு என்பது ஒருவர் செய்யும் பயணம். அது அவரவர் தேர்வு. குழந்தைகள் தங்களது வாசிப்புப் பாதையைக் கண்டறியச் செய்வதே, அவர்களுக்கு செய்ய வேண்டிய உதவி. நாம் தேர்வுசெய்யும் வாசிப்பு அவர்களை வாசிக்கத்தூண்டாது என்றார் திரு சித்துராஜ்.

நல்ல நல்ல நூல்கள் ஒருவர் தமக்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் தொலைந்து போக வைக்கிறது. அதேநேரத்தில், கதைகள் புத்தகத்திலிருந்து மனிதர்களின் வாய்க்குள் புகுந்து வார்த்தைகளாகி மீண்டும் மீண்டும் சொல்லப்படும்போதுதான் அவற்றின் உண்மையான பயணம் தொடங்குகிறது என்றார் அவர்.

நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் ஆகச் சிறிய தமிழ் நூலான குறளொலி வெளியிடப்பட்டது.

தமிழின் ஆகச்சிறிய நூல்

140 பக்கங்கள் கொண்ட இந்த நூலுக்கு உரையாசிரியரான டாக்டர் நா.வெங்கட், 4 நூல்களுக்கு ஆசிரியர். நான்காவது நூலாக வரும் குறளொலி, அவரின் முதல் நூலான ‘குறளின் எளிய குரல்’ என்பதை மையமாக்கி தயாரிக்கப்பட்டுள்ளது.

“என் முதல் நூல், எல்லா 1,330 திருக்குறள்களையும் எளிய நடையில், இன்றைய காலகட்ட தமிழில் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதப்பட்டது. இந்நூலை மதிப்பிட்ட முனைவர் சுப.திண்ணப்பன் இதுவரை எவராலும் மேற்கொள்ளப்படாத முயற்சி என்றார். இந்நூல் 2015ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்டது. இந்திய அரசாங்கம் இதற்குப் பதிப்புரிமை வழங்கி, தற்போது இந்நூல் அவர்களின் மத்திய நூலகத்திலும் உள்ளது,” என்றார் டாக்டர் வெங்கட், 58.

அவரின் முதல் நூல் பல சிறப்புகளை பெற்றாலும், மேலும் பலருக்கு எளிய நடையில் தயாரிக்கப்பட்டுள்ள திருக்குறள்கள் போய்ச் சேர சட்டைப்பை அளவிற்கு ஒரு நூல் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது என்றும் குறிப்பாக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படுத்த வசதியான நூலாக இது அமையும் என்றும் உறுதியளித்தார் அவர்.

“வசதியாக இருப்பது ஒரு பக்கம் இருக்க, இந்நூல் சுற்றுச்சூழல் நலனையும் கருத்தில் கொண்டுள்ளது. இந்நூலின் அட்டை மறு பயன்பாடு தாட்களைக் கொண்டு அமைக்கபட்டது. அதுபோக இந்த நூலின் மின்னியல் வகையும் மக்களுக்குக் கிடைக்கும்” என்றார் டாக்டர் வெங்கட்.

டாக்டர் வெங்கட் வெளியிட்ட முதல் நூலான ‘குறளின் எளிய குரல்’ முற்றிலும் மறு பயன்பாடுத் தாட்களை வைத்து தயாரிக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட 8 மாத காலத்தில் தயாரிக்கப்பட்ட ‘குறளொலி’யின் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு நூல் இலவசமாக வழங்கப்பட்டது.

‘கியூஆர் கோட்’ (QR code) மூலம் மக்கள் மின்னியல் பதிப்பையும் பெற்றுக்கொண்டார்கள்.

இந்த நூல் சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள ‘ஆர்யா கிரியேஷன்ஸ், தமிழ் புத்தக நிலையம்’ கடையில் $5 விலையில் விற்கப்படும் என்று குறிப்பிட்டார் டாக்டர் வெங்கட்.

நாடெங்கிலும் உள்ள பல நூலகங்களிலும் நான்கு மொழிகளிலும் வாசிப்பு விழா நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. தமிழில் 30 நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நேற்றுத் தொடங்கிய வாசிப்பு விழா ஜூலை 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்று எழுத்தாளர் கிருத்திகா சிதம்பரம் வழிநடத்தும் பயணக் கட்டுரை விக்டோரியா ஸ்திரீட், தேசிய நூலகத்தில் பயிலரங்கு நடைபெறுகிறது. ஐந்தாவது மாடியில் பிற்பகல் 2.30 மணி நிகழ்ச்சி தொடங்கும்.

எழுத்தாளர் எம்.கே.குமார் தனது இலக்கியப் பயணம் குறித்து பேசுகிறார். அங் மோ கியோ பொது நூலகத்தின் முதல் தளத்தில் இன்று மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும்.

வாசிப்பு விழா குறித்த மேல் விவரங்களை http://www.nationalreadingmovement.sg/readfest/ என்ற இணையப் பக்கத்தில் காணலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!