மோட்டார்சைக்கிளில் ஒன்பது நாடுகள் 

பாலசந்திரனும் அவரது இரு நண்பர்களும் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்வதாகத் திட்டமிட்டபோது இந்தப் பயணம் சாத்தியமில்லை என்று பலரும் கூறினர்.

“எதிர்ப்பும் மாற்றுக் கருத்துகளும் வந்தன. சிலர் எங்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தனர், எங்களுக்குப் புத்தி மழுங்கிவிட்டது என்றனர். மோட்டார்சைக்கிள் உடைந்து, நொறுங்கித்தான் திரும்பி வரும்,” என்று கூறினார் ‘ஸ்ரீ கணே‌‌‌சா பொதுச் சேவை' தனியார் நிறுவனத்தை நடத்தி வரும் திரு பாலசந்திரன்.

ஆனால் மூவரும் சிறிதும் மனம் தளர வில்லை. ‘2019 சென்டேனியல் ரைடர்ஸ்’ (2019 Centennial Riders) என்ற அந்த மூவர் குழு 1,800 சிசி ‘ஹோண்டா கோல்ட் விங்’ மோட்டார் சைக்கிள்களில் உலகப் பயணத்துக்குத் தயாரானது.

"பல சோதனைகளைத் தாண்டி சிங்கப்பூர் இன்றைய நிலையை அடைந்துள்ளது. இந்தச் சாதனையை உலகத்திற்கு எடுத்துக்காட்டும் வகையில் அதற்கு ஈடான சாதனையைப் புரிய விரும்பினோம். சாதித்துக்காட்டினோம். ‘கோல்ட் விங்’ மோட்டார்சைக்கிளை இதுபோல் எவரும் பயன்­படுத்தியிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறோம்,” என்று பெருமையுடன் கூறினார் திரு பாலசந்திரன்.

56 வயது திரு பாலசந்திரன், 54 வயது ராணுவ வீரரான திரு ப.பன்னீர்செல்வம், 53 வயது கடற்படை வீரர் திரு ஆ.­அருணகிரி ஆகிய மூவரும் மார்ச் மாதம் 26ஆம் தேதி தங்களின் 43 நாள் பயணத்தைத் தொடங்கினர்.

ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 400 கிலோ மீட்டர் தூரம் என சிங்கப்பூரிலிருந்து மலேசியா, தாய்லாந்து, மியன்மார், பூட்டான், பங்களாதேஷ், நேப்பாளம், சீனா, இந்தியா என்று மொத்தம் ஒன்பது நாடுகளில் 13,458 கிலோ மீட்டர் தூரம் அவர்கள் பயணம் செய்தனர்.

காலை 5.30 மணிக்கு கிளம்பி விடுவார்கள். மாலை 5 மணி வரை சாலையில் பயணம் செய்வார்கள். இரவில் ஓய்வெடுப்பார்கள். 500 கிலோ கிராம் எடைகொண்ட சுற்றுலா மோட்டார் வாகனத்துடன் பயணித்த அவர்கள் ஒவ்வொருவரும் $10,000க்கு மேல் செலவு செய்தனர்.

“இவை நல்ல சாலைகளில் பயணம் செய்வதற்கு ஏற்ற சொகுசு மோட்டார் வாகனங்கள். கரடுமுரடான பாதைக்கு ஏற்றவை அல்ல. குறிப்பாக மலைப்பிரதேசங்களான நேப்பாளத்திலும் திபெத்திலும் பயணம் செய்வது சவாலாக அமைந்தது,” என்றார் திரு பாலசந்திரன்.

மழை வருமென்று பயந்துகொண்டே மூவரும் பயணத்தை மேற்கொண்டனர். ஆனால் எதிர்பாராத பருவநிலை மாற்றங்கள் பயணத்தில் பெரும் சவாலாயின.

"கோடை காலத்தில் (மார்ச் முதல் மே மாதம் வரை) இந்தியாவில் வெயில் உச்சநிலைகளை அடையும். சில பகுதிகளில், குறிப்பாக வடக்குப் பகுதிகளில், வெப்ப நிலை 50 டிகிரிக்கும் அதிகமாக இருந்தது. லக்னோவில் 51 டிகிரி இருந்தது. எவரெஸ்ட் பகுதியில் மைனஸ் 3 டிகிரியில் குளிர் இருந்தது," என்றார் திரு பாலசந்திரன்.

"வெப்பம் அதிகமாக இருந்தபோது சாப்பிடமுடியவில்லை. களைப்பாகவும் தாகமாகவும் இருந்ததால் நிறைய தண்ணீர் குடித்து, அடிக்கடி ஓய்வு எடுத்துக்கொண்டோம். "மோட்டார்சைக்கிள் சூடு ஆறுவதற்கு எங்கள் ஓய்வுநேரம் பயன்பட்டது. நீண்ட நேரம் ஓடினால் ரப்பரால் ஆன வண்டியின் சக்கரங்கள் எரிந்துபோக வாய்ப்புண்டு. சில இடங்களில் குளிர்சாதன வசதி இல்லை. மின்விசிறி மட்டுமே இருந்தது. அதில் வரும் காற்று சூடாக இருந்தது," என்று கோடை காலத்தில் தாங்கள் அனுபவித்த சிரமங்களை அவர் விவரித்தார்.

இந்தப் பயணத்தின் சிறப்பு அம்சம் எவரெஸ்ட் மலையின் அடித்தள முதல் முகாமுக்குச் சென்றது. இம்முகாம் 5,157 மீட்டர் உயரத்தில் உள்ளது.

நேப்பாளத் தலைநகரமான காட்மாண்டுவிலிருந்து ஏப்ரல் 14ஆம் தேதி கிளம்பி னார்கள். நான்கு நாட்கள் கிட்டத்தட்ட 714 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து எவரெஸ்ட் அடித்தள முகாமை அடைந்தனர். திரும்பி வர மூன்று நாட்கள் ஆயின.

இந்தப் பயணத்தின்போது, நேப்பாளத்­தில் (சீனா எல்லை) அமைந்துள்ள ‘கெருங்’ என்ற கிராமத்திற்கும் தென் திபெத்தில் இருக்கும் ‘டிங்கிரி’ என்ற அழகிய நகரத்திற்கும் அவர்கள் சென்றனர்.

மைனஸ் டிகிரில் குளிரையும் குறைந்த பிராணவாயு அளவையும் அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. குளிர் ஆடைகளை அணிந்து, பழக்கப்படாத நிலத்தில் துணிச்சலுடன் பயணம் செய்தனர்.

“எவரெஸ்ட் பகுதியில் பயணம் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. பிராணவாயு குறைவான அளவில் இருந்ததால் மூச்சு விடத் திண்டாடினோம். குளிரில் மோட்டார் சைக்கிள்களில் பனி உறைந்து விட்டது.

“விடாமுயற்சியுடன் எவரெஸ்ட் அடித்தள முகாமைச் சென்றடைந்தோம். இந்த உயரத்திற்குச் சென்ற முதல் மோட்டார்சைக்கிள் குழு எங்கள் குழுவாகத்தான் இருக்கும் என நம்புகிறோம்,” என்றார் திரு பன்னீர்செல்வம்.

பின்னர் அங்கிருந்து இரண்டு நாட்கள் பயணம் செய்து வாரணாசியை அடைந்தனர். அந்த 482 கிலோ மீட்டர் தூரப் பாதையில் சொனாலி, கொரக்பூர் ஆகிய நகரங்களை அவர்கள் கடந்து சென்றனர்.

பருவநிலை மாற்றங்கள் ஒருபுறம் இருக்க, கரடுமுரடான சாலைகளிலும் வண்­டியை ஓட்ட வேண்டியிருந்தது. கூளாங்­கற்களும் பள்ளங்களும் அவர்கள் பயணத்தை ஆபத்துக்குள்ளாக்கின.

“காட்மாண்டுவில் முறையான சாலை­கள் அதிகம் இல்லாததால், மணல் பாதைகளில் பயணம் செய்தோம். பலமுறை நான் கீழே விழுந்துவிட்டேன். ஒருமுறை விழுந்தபோது, என் மோட்டார் சைக்கிளின் கியர் உடைந்துவிட்டது.

"தெரியாத இடத்தில் மாட்டிக்கொண்டோம். நல்லவேளையாக ஒரு லாரி கிடைத்தது. அதில் என் மோட்டார் சைக்கிளை ஏற்றி பட்டறைக்கு எடுத்துச்சென்றோம். வேறு சிறிய மோட்டார் சைக்கிள் ஒன்றின் கியரைப் பொருத்தி எப்படியோ சரி செய்து, மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம்,” என்று தம் அனுபவத்தை விளக்கினார் திரு பன்னீர்செல்வம்.

மியன்மாரில் இக்குழுவினர் 57 பாலங்களைக் கடந்தனர். பெரும்பாலும் பலகைகளால் உருவாக்கப்பட்ட அந்தப் பாலங்கள் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்படவில்லையாம். அதனால், அப்பாலங்களில் அவர்கள் மோட்டார் சைக்கிளை மெதுவாகத் தள்ளிச்செல்ல வேண்டியிருந்து.

நீண்ட பயணத்தில் பல சிரமங்களை எதிர்கொ-ண்டாலும் இந்தியாவில் கிடைத்த நட்சத்திர வரவேற்பு குழுவினருக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது.

சென்ற இடங்களிலெல்லாம் அவர்களின் மோட்டார் சைக்கிளைப் பார்க்க பெரிய கூட்டம் கூடிவிடும். ஹோண்டா கோல்ட் விங் வாகனங்களை இந்திய சாலைகளில் பார்ப்பது அரிது.

வழியில் சென்ற பல கார்களும் மோட்டார் சைக்கிள்களும் படம் எடுப்பதற்காக வேகத்தைக் குறைத்துச் சென்றதும், ஓய்வு எடுக்க நிறுத்திய இடங்களில் கூட்டம் சேர்ந்ததும் ‘2019 சென்டேனியல் ரைடர்ஸ்’ குழுவுக்கு உற்சாகமூட்டிய தருணங்கள்.

“சில நேரங்களில் நகர முடியாத அளவுக்குக் கூட்டம் கூடிவிடும். கூட்டத்தை விலக்கிக்கொண்டு செல்லவேண்டும். ஒருமுறை ஒருவர் படம் எடுப்பதற்காக, தமது மோட்டார் சைக்கிள் மேலே ஏறினார். எங்கள் எச்சரிக்கைகளை அவர் பொருட்­படுத்தவில்லை. அப்படியே கீழே விழுந்துவிட்டார். நல்லவேளையாக காயம் ஏதும் ஏற்படவில்லை,” என்றார் திரு பாலசந்திரன். குறுகலான இந்திய சாலைகளில் மாடுகள், நாய்கள் என்று பல விலங்குகளோடு போட்டிபோட்டு வண்டியை ஓட்ட வேண்டியிருந்தது. மோட்டார் சைக்கிள்கள் பெரிதாக இருந்ததால் விலங்குகளைக் கடந்துசெல்வது கடினமாக இருந்தது.

பாதுகாப்புக்காக ஒரு மணி நேரத்திற்கு ஏறத்தாழ 50 கி.மீ. வேகத்திலேயே பயணம் செய்ததால், பயண நேரம் அதிகமானது. கர்நாடக நகரமான மங்களூரில், ‘பெட்டிலியோன்’ என்ற தங்கும் விடுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்த இடத்தில் கூட்டம் கூடியிருந்தது.

தற்செயலாக ‘கன்னட' மொழி நாளிதழான ‘ஹோஸா டீகாந்தா’ அந்த விடுதிக்கு அருகே இருந்தது. அந்தப் பத்திரிகை செய்தியாளர் ஒருவர் எங்கள் மோட்டார் சைக்கிளைப் பற்றி அறிந்து விசாரித்தார். மே மாதம் 2ஆம் தேதி, எங்கள் கதை அந்நாளிதழின் தலைப்புச் செய்தியாக வந்தது. மே 5ஆம் தேதி, தமிழ் நாட்டின் தஞ்சாவூரை அடைந்தபோது தமிழ்நாட்டு ஊடகங்களும் பெரிய அளவில் செய்தி வெளியிட்டு ஆதரவளித்தன. விகடன், ‘டெக்கான் குரோனிக்கல்’ போன்ற பிரபல ஊடகங்கள் இவர்களைப் பற்றி செய்தி வெளியிட்டன.

சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவு உணர்வைப் பகிர பல விடுதிகளில் தாங்கள் தயாரித்த ஒட்டுவில்லைகளை அவர்கள் வைத்தனர்.

ஓராண்டுக்கு முன்பு தொடங்கிய திட்டம்

கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தப் பயணத்தை இவர்கள் திட்டமிடத் தொடங்கினார்கள்.

முதலில் பாதையைத் திட்டமிட்டனர். பின் பயண முகவர்களைத் தொடர்புகொண்டு, தங்கும் இடங்களையும் ஏற்பாடு செய்தனர்.

திபெத் வரை தங்குவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்து, இந்தியாவில் அவர்களின் பயணத்திற்கு ஏற்ப விடுதிகளைத் தேர்வு செய்தனர்.

"ஆரம்பத்தில் பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன," என்றார் திரு பாலசந்திரன்.

“பயணத்திற்கான எண்ணம் தோன்றியபோது, பன்னீர்செல்வத்தை அணுகினேன். வாகனம் பழுதடைந்தால் என்ன செய்வோம்? சாலைகள் இல்லாத சூழ்நிலைகளில் என்ன செய்வோம்? ஒருவர் நோய்வாய்பட்டாலோ, விபத்தில் சிக்கிக்கொண்டாலோ, நம் பயணத்தைத் தொடருவோமா?” என்று பல கேள்விகளைக் கேட்டார்.

தம் நண்பர்களின் நம்பிக்கையைப் பெற திரு பாலசந்திரன் பல தகவல்களைத் திரட்ட வேண்டியிருந்தது.

“இந்தப் பயணத்தை மேற்கொள்வது ஒரு பெரும் சாதனை என்று என் நண்பர்களுக்கு உறுதியளித்தேன். ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வுண்டு. அத்தீர்வைக் கண்டறிந்து, இந்தப் பயணத்தை மேற்கொள்ள உறுதியுடன் இருந்தேன்,” என்று கூறினார் அவர்.

இம்மூவரும் இலங்கைக்கும் செல்லத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இலங்கையின் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து அந்நாட்டில் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, அந்தத் திட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

சென்னையில் பயணத்தை நிறைவுசெய்து மே 8ஆம் தேதி சிங்கப்பூர் ­திரும்பினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!