தூக்கம் பற்றி துடிப்போடு பேசும் ‘துயில்’

நாள் ஒன்றுக்கு சராசரியாக எட்டு மணி நேரம் உறங்கும் நாம், ஒருநாளில் மூன்றில் ஒரு பகுதியை  அதாவது, வாழ்க்கை யில் மூன்றில் ஒரு பகுதியைத் தூக்கத்தில் கழிக்கிறோம். 

இந்தத் தூக்கம் அவசியம் தானா என்ற சிந்தனையைத் தட்டி எழுப்பியது ‘எஸ்ஐடிஈஎஃப்’ படைத்த ‘துயில்’ நாடகம்.

ஒன்பது வயது குழந்தை முதல் 67 வயது ஆடவர் வரையிலான ஆறு நடிகர்களைக் கொண்டு பல காட்சிகளை சுவாரசியத்துடன் இயக்கி யிருந்தார் சலீம் ஹாடி. 

உலக நடப்புகளையும் சிங்கப்பூரின் சமூக சூழ்நிலை யையும் கோர்வையாக எடுத்துக்காட்டியது இந்த 100 நிமிடப் படைப்பு.  

வாழ்வின் பெரும் பகுதியை தூக்கத்தில் கழிக்கும் நாம், அதை முக்கிய அம்சமாகக் கருதுவதில்லை என்ற கருத்தை முன்வைப்பதாக அமைந்தது இந்த நாடகம். 

சிங்கப்பூரர்களில் சிலர் கூடு தலான வாழ்க்கைச் செலவினங் களால் ஜோகூர் பாருவில் தங்குகிறார்கள். 

சிங்கப்பூருக்குத் தினமும் வேலைக்காகவும் பள்ளிக் காகவும் வந்துசெல்வதை கதை ஓட்டத்தில் பதிவிட்டுள்ளார் கதாசிரியர் சலீம். 

சிங்கப்பூரர்களின் அன்றாட வாழ்வில் இடம்பெறும் சம்பவங்கள், கற்பனைகள், வாழ்வியல் யதார்த்தங்கள், நடப்பு விவகாரங்கள், சிந்திக்கத் தூண்டும் கருத்துகள் போன்ற பலவற்றையும் எளிய மேடை அமைப்பில், காட்சிகளை மாற்றிப் படைத்த பாங்கும் காட்சிகளுக்கேற்ற ஒளியமைப்பு, ஒலியமைப்பும் சிறப்பாக அமைந்திருந்தன.

வயிறு குலுங்கவைக்கும் நகைச்சுவை, மனதை உருக்கும் சோகம், நாற்காலியிலிருந்து எழுந்து அடிக்கச் செய்யும் வெறுப்பு என நடிகர்களின் திறமையான நடிப்பால் பார்வையாளர்கள் நாடகத்துடன் ஒன்றியிருந்தனர்.

“தூக்கம் நம் வாழ்வின் அத்தியாவசியமான ஓர் அங்கம். அதை மேடை நாடகமாகப் படைப்பது எளிதானதல்ல. 

“நல்ல கருத்துகளை முன்வைத்த இந்த நாடகம் நம் வாழ்வில் இடம்பெறும் சம்பவங் களைக் கண்முன் கொண்டு வந்துள்ளது,” என்றார் 27 வயது ரிஸ்வானா ஃபைரோஸ்.

“ஆழமான சிந்தனையைத் தூண்டும் கருப்பொருளை கவனமாகக் கையாண்டதுடன், எளிய நடையில்  படைத்தது சிறப்பு. அதனால் பார்வையாளர்கள் நாடகம் முழுவதையும் ஆர்வத் துடன் பார்த்தனர்.” என்றார் ஜெயஸ்ரீ நகரராஜா.  

“நிம்மதியாகத் துயில் கொள்வது என்பது ஒரு வரம்​. எல்லோருக்கும் அது வாய்த்துவிடுவதில்லை. 

“சிங்கப்பூர் போன்ற பரபரப்பான சூழலில், நாம் உறக்கத்தை மறக்கும் போது நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஏற்படும் விளைவுகளை அழகாக எடுத்துக் கூறியது ‘துயில்’ நாடகம்,” என்றார் திரு அழகிய பாண்டியன்.

“இயற்கையான நடிப்பு, வசனம் என அற்புதமாக அமைந்திருந்தது. ஒன்பது வயது ஜனனியின் நடிப்பைப் பாராட்டியே ஆக வேண் டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெரும்பாலும் தமிழில் வசனங்கள் இருந்தாலும் மற்ற மொழி பேசுவோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் திரையில் ஆங்கில மொழிபெயர்ப்பு இடம் பெற்றன.

வியாழக்கிழமை இரவு முதல் முறையாக மேடையேறிய இந்த நாடகம் இன்று வரை நடைபெறுகிறது. 

இறுதிக்காட்சி இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும். நுழைவுச் சீட்டுகளை thuyil.peatix.com இணையப்பக்கம் மூலம் பெறலாம். நாடகத்தைக் காணத் தவறாதீர்கள்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

லிட்டில் இந்தியாவில் உள்ள பழக்கடைகளில் டுரியான் பழத்தைக் காண்பதென்பது அரிதினும் அரிது. ஆனாலும், இந்தப் பழத்தை விரும்பிச் சாப்பிடும் இந்தியர்களில் பலர் சிரமமும் தூரமும் பாராது கேலாங், சைனாடவுன் பகுதிகளுக்குச் சென்று டுரியானை வாங்கி சுவைத்துக்கொண்டுதான் உள்ளனர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Jul 2019

தீவெங்கும் வீசும் டுரியான் வாசம்

அமைச்சர் ஈஸ்வடன் உரையாடும் திருமதி லலிதா வைத்தியநாதன். வலது, அவரது இசை அமைப்புக் குறிப்பு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Jul 2019

ஆவணத் திரட்டுக்கு ஆதரவு