தடுமாறிய வாழ்க்கையை உருமாற்றியவர்கள்

சிங்கப்பூர் சுதந்திரமடைந்த ஆரம்ப காலகட்டத்தில் பல சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியிருந்தது. அவற்றில் ஒன்று போதைப்பொருள் புழக்கம்.

போதைப்பொருள் தொடர்பிலான குற்றங்கள் அதிகளவில் இடம்பெற்ற காலம் அது. தங்களது போதைப்பொருள் புழக்கத்தை தொடர்வதற்காக திருட்டு போன்ற குற்றங்களில் போதைப்

புழங்கிகள் ஈடுபட்டனர். போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களும் பரவலாக நிகழ்ந்தன.

இதனைச் சமாளிக்க, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு 1971ல் தொடங்கப்பட்டது.

இதர அரசாங்க அமைப்புகள் இணைந்து ‘ஆப்பரேஷன் ஃபெரட் 1977’ (Operation Ferret 1977) எனும் தீவு முழுவதுமுள்ள போதைப் புழங்கிகளை கைது செய்து அவர்களை மறுவாழ்வுக்கு தயார் செய்யும் திட்டம் நடைமுறைப்­படுத்தப்பட்டது. அதன் விளைவாக 1978 பிப்ரவரி வரை 26,000 போதைப் புழங்கிகள் கைது செய்யப்பட்டனர்.

அச்சமயத்தில், சமூகத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கத்தில் தொண்டூழியராகச் சேவையாற்ற ஊடகத் துறையில் இருந்த திரு கோபாலகிருஷ்ணன் நாயர் முன்வந்தார்.

சிங்கப்பூர் போதைப்பொருள் ஒழிப்பு சங்கத்தில் (சானா) இந்து சமயம் சார்ந்த தொண்டூழியராகச் சேர்ந்து ஒவ்வொரு வாரமும் சிறைக் கைதிகளைச் சந்தித்து சமய, பண்புநெறி அம்சங்களை அவர்களுக்கு விளக்கினார்.

குற்றவாளிகளின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அதிக காலம் எடுத்தது என்று குறிப்பிட்ட 70 வயது திரு கோபாலகிருஷ்ணன், தொண்டூழியர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்ட பின்னரே இதர திட்டங்களில் சேர்ந்து குற்றவாளிகள் பயன்பெறத் தொடங்கியதாகத் தெரிவித்தார்.

பிறருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் சானாவில் தொண்டூழியராகச் சேர்ந்த மற்றொருவர் பொறியாளரான திரு க.ஜெயசீலன்.

ஆரம்பத்தில் அடித்தள அமைப்புகளில் தொண்டூழியம் புரிந்துவந்த திரு ஜெயசீலன், கடந்த 17 ஆண்டு காலமாக இந்த ஆலோசனைப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

"இது இந்து சமய போதனை அல்ல," என்று விளக்கிய 66 வயது திரு ஜெயசீலன், ஆன்மிக வழியில் குற்றவாளிகளை நல்

வழிப்படுத்துவதே இந்த ஆலோசனைத் திட்டத்தின் நோக்கம் என்றார்.

அத்துடன், தங்களைப் பற்றிய சுயஅறிதலுக்கும் குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தவும் ஆன்மிக ஈடுபாடு உதவுகிறது என்றார் அவர்.

"ஒருவரைக் குறிப்பிட்ட காலத்திற்குள் நல்வழிப்படுத்திவிடலாம் என்று சொல்ல முடியாது. அது அவரவரைப் பொறுத்தது. சில சமயங்களில் எங்களது முயற்சி

வெற்றியளிக்காமல் போகலாம். சொந்த வாழ்க்கையை நிர்வகிக்கும் பக்குவம் அனைவருக்கும் எளிதில் கைகூடி வராது. அதற்காக நாம் சோர்ந்துவிடக்கூடாது," என்று கூறினார் திரு கோபால

கிருஷ்ணன்.

அதேநேரத்தில், ஆலோ

சனையைக் கேட்டு திருந்தி வாழ்வோரைப் பார்க்கும்போது உற்சாகம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அப்படி ஒரு சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

நீண்டகாலமாக தனிப்பட்ட முறையில் ஆலோசனை வழங்கி வந்த ஓர் இளையர் சிறையிலிருந்து விடுதலையானபோது அவரைச் சந்திக்க திரு கோபால­

கிருஷ்ணன் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

அங்கு அந்த இளையரை வரவேற்க அவரது குண்டர் கும்பல் உறுப்பினர்கள் மதுபானத்துடன் வந்திருந்தனர்.

இனிமேல் தம்மை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி அந்த இளையர் அவர்களை அனுப்பி வைத்ததைப் பார்த்தபோது திரு கோபாலகிருஷ்ணனுக்கு மனம் நெகிழ்ந்தது.

அந்த இளையர் தற்போது வேலைக்குச் செல்கிறார். அவர் வாழ்க்கை சீராக உள்ளது.

திரு ஜெயசீலன் ஆலோசனை வழங்கி வந்த ஒருவர் அடிக்கடி குற்றம் புரிந்து பலமுறை சிறைக்குச் சென்றார். அவர் ஒவ்வொருமுறையும் விடுதலையாகும்போது குடும்ப உறுப்பினர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு வேலையும் கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் மீண்டும் அவர் சிறைக்குச் சென்றார். ஒரு சுழற்சிக்குள் அவர் சிக்கிக்கொண்டதை உணர்ந்த திரு ஜெயசீலன், சொந்தத் தொழில் செய்ய அவருக்கு ஆலோசனை வழங்கினார்.

அவருக்கு சமையலில் நாட்டம் இருந்தது. அதனால், அவர் முதலில் நண்பரின் கடை ஒன்றில் சமையல் பணியில் ஈடுபட்டார். அதில் தன் திறமையை வளர்த்துக்கொண்டார். இன்று, அவர் உணவங்காடிக் கடையின் முதலாளியாக இருக்கிறார்.

சிறைக் கைதிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் தொண்டூழியம் புரிவோருக்கு அன்பு செலுத்தும் குணமும் பொறுமையும் அவசியம் என இவ்விரு நீண்ட காலத் தொண்டூழியர்களும் கூறினர். சானாவில் தற்போது இந்து சமயத் தொண்டூழியர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பதால் இன்னும் கூடுதலானோர் சேவையாற்ற முன்வர வேண்டும் என்று இவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அடியோடு மாற்றியது அன்பெனும் திறவுகோல்

வார இறுதியில் கேளிக்கை கூடத்திற்கு குணா (கற்பனைப் பெயர்) செல்வதும் அங்கு சண்டை சச்சரவுகள் நடப்பதும் வழக்கம்.
ஒருமுறை, தமது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து குணா ஈடுபட்ட ஒரு சண்டையில் ஒருவர் உயிரிழந்தார். மூவரும் கைது செய்யப்பட்டனர். குணா குறைந்தது 10 ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்பட்டார். வாழ்க்கையே கேள்விக்குறியானது.
குழப்பமான நிலையில் இருந்தவருக்கு தெளிவான பாதையைக் காட்ட சானா இந்து சமய தொண்டூழியர் ஒருவர் முன்வந்தார். முதலில் பயனுள்ள வழிகளில் சிறையில் நேரத்தை செலவிடுவது குறித்து அவர் குணாவுக்கு ஆலோசனை வழங்கினார். சிறையில் ஏற்பாடு செய்யப்பட்ட தன்முனைப்பு பேச்சுகளிலும் குணா பங்கேற்றார்.
தைப்பூசம், தீமிதி போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்
படு­வதற்கான காரணங்களையும் இந்து சமயம் பற்றிய விளக்கங்களையும் தொண்டூழியர் மூலம் குணா அறிந்துகொண்டார். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆலோசனைத் திட்டத்தில் ஈடுபட்டு வந்த குணா, வழிபாட்டு முறைகளைக் கற்று இசைக் கருவிகளை வாசித்தபடி பஜனை செய்யத் தொடங்கினார்.
குணா இப்படி மாறுவதற்கு தொண்டூழியர்களின் அன்பே அடித்தளமாக அமைந்தது.
‘‘கோபத்தைக் கட்டுப்படுத்தவும் மற்றவர்களிடம் அன்பாகப் பேசவும் பழகினேன். குடும்பத்தினரோடு நல்லுறவை வளர்த்துக்கொள்வது பற்றியும் எதிர்கால வாழ்க்கை இலக்குகள் குறித்தும் சிந்திக்கத் தொடங்கினேன். தொண்டூழியர்களின் ஆலோசனைகள் சிறைவாசத்திற்குப் பிந்திய வாழ்க்கைக்கு என்னைத் தயார்ப்படுத்தியது,’’ என்று கூறினார் குணா.
சிறையிலிருந்து விடுதலை பெற்று வீடு திரும்பிய குணாவிடம் குடும்பத்தினர் மாற்றங்களைக் கண்டனர். இரு மாதங்களில் குணாவுக்கு தளவாடத் துறையில் வேலை கிடைத்தது. ஓராண்டுக்குப் பிறகு மேற்பார்வையாளர் பதவிக்கு உயர்ந்தார்.
புதிய திறன்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற துடிப்பு அவருக்கு விமானத் தளவாடத் துறையில் வேலை பெற்றுத் தந்தது. அங்கும் பணியில் சிறந்து பதவி உயர்வு பெற்றதால் அவரது பொருளாதார நிலை மேம்பட்டது.
வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பெற்றோரை நன்கு பராமரிக்க வேண்டும், அர்த்தமுள்ள வாழ்க்கை­யை வாழவேண்டும் என்பதில் குணா உறுதியாக உள்ளார்.

இளையர், இந்தியரிடையே கூடி வரும் கூடாப்பழக்கம் - ஒரு புள்ளிவிவரம்

சென்ற ஆண்டு போதைப் புழக்க குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டவர்களில் 40 விழுக்காட்டினர் முதல்முறையாகக் குற்றம் புரிந்தவர்கள்.

அவர்களில் கிட்டத்தட்ட மூவரில் இருவர் 30 வயதிற்கும் குறைந்தவர்கள். இந்தப் புள்ளிவிவரங்களை அண்மையில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தனது ஆண்டறிக்கையில் வெளியிட்டது.

2018ஆம் ஆண்டில் போதைப் புழக்கத்திற்காக 3,438 பேர் கைது செய்யப்பட்டனர். 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 11 விழுக்காடு அதிகம்.

இளையர்களிடம் அதிகரித்துள்ள போதைப் புழக்கம் கவலைக்குரிய அம்சமாக நீடிக்கிறது.

சென்ற ஆண்டு கைது செய்யப்பட்டவர்களில் 20 வயதிற்கும் 29 வயதிற்கும் உட்பட்ட வயதினரே ஆக அதிகமானவர்கள்.

அவர்களில் 1,010 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போதைப் புழக்கத்திற்காக கைது செய்யப்பட்டவர்களில் ஆக அதிகமானவர்கள் மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்தியர்களின் கைது விகிதமும் கணிசமாக அதிகரித்துள்ளது.

மொத்தம் 607 இந்தியர்கள் கடந்தாண்டு போதைப் புழக்கத்திற்காக கைது செய்யப்பட்டனர். 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது கிட்டத்தட்ட 31% அதிகம்.

மேலும், முதல் முறையாகப் போதைப் புழக்கத்திற்கு கைது செய்யப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கையும் கடந்தாண்டு 38% அதிகரித்திருப்பது கவனத்திற்குரியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!