சிரமங்களைத் தாண்டி சிகரம் தொட்டார்

எவரெஸ்ட் சிகரத்திற்கு இட்டுச் செல்லும் ‘ஹில்லரி ஸ்டெப்’ எனும் செங்குத்துப் பாறையில் நூற்றுக் கணக்கான மலையேறிகள் மணிக் கணக்கில் வரிசைபிடித்துக் காத் திருந்த புகைப்படம் சில நாட் களுக்குமுன் காட்டுத்தீ போல் பரவியது. உலகின் ஆக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொட்டுவிட பலருக்கும் ஆர்வமும் ஆசையும் இருக்கும். அந்த மகத் தான சாதனையைப் புரிந்துவிடும் நோக்கத்துடன் கோடைக்காலமான கடந்த மே, ஜூன் மாதங்களில் ஏராளமானோர் அச்சிகரத்தில் ஏறத் தொடங்கினர். இந்த முயற்சி யின்போது குறைந்தது 11 பேர் உயிரிழக்க, இவ்வாண்டின் மலை யேற்றப் பருவம் மோசமானதாக அமைந்துவிட்டது.

அந்த வகையில், தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தில் உதவி அரசாங்க வழக்கறிஞராகப் பணியாற்றும் திரு ஆனந்தன் பாலாவும் 8,848 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிய தமது மலையேற்ற முயற்சியில் மறைந்துள்ள அபாயங்களை நன்கு அறிந்திருந்தார். மே 22ஆம் தேதி இரவு 9 மணிக்கு, தரையிலிருந்து 7,906 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நான்காவது முகாமில் உலகெங்கும் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக் கான மலையேறிகளுடன் இணைந் தார் 50 வயதான திரு பாலா.

அனைவரும் தங்களின் தலை யில் முன்விளக்கை அணிந்தபடி, நூல் பிடித்தவாறு ஒரே நேர்க் கோட்டில் சென்றதைக் கண்ட போது ‘மின்மினிப்பூச்சிகளின் தடம்’போல் தோன்றியதாக வரு ணித்தார் இவர். இப்படி ஏராளமா னோர் திரண்டதால் மெதுவாகவே மலையேற முடிந்தது.

ஆனாலும், 2008ஆம் ஆண்டு முதல் மலையேறி வரும் இவர் 6,000 மீட்டர் முதல் 7,000 மீட்டர் உயரத்திற்குள் அமைந்துள்ள பல சிகரங்களை அடைந்துள்ளவர் என்பதால் எதைப் பற்றியும் கவ லைப்படாமல் அடிமேல் அடியாக எடுத்து வைத்து, இலக்கை நோக்கி முன்னேறினார்.

வழியில் பல சடலங்களையும் மரணத்தை நெருங்கும் அல்லது கடுமையாக உடல்நலம் குன்றி கீழே எடுத்துச் செல்லப்பட்டோ ரையும் கண்டபோது இவருக்கும் கவலை ஏற்படத்தான் செய்தது. “மாண்டவர்களுள் ஒருவர் அமெரிக்கர். தொடக்க முகாமில் இருந்தபோது அவருடன் நான் உரையாடி இருக்கிறேன். வருத்த மாக இருந்தாலும் கவனமாக இல்லையெனில் அடுத்த உயிரிழப்பு நானாகவும் இருக்கலாம் என்று சரியான நேரத்தில் நினைவுறுத்து வதாகவும் அமைந்தது,” என்றார் திரு ஆனந்தன்.

“இருப்பினும், சரியான, முறை யான பயிற்சியைப் பெற்றிருந்ததா லும் நல்ல வழிகாட்டியுடன் கூடிய நல்ல பயணத்தைத் தேர்வு செய் திருந்ததாலும் நான் அதிகம் கவலைப்படவில்லை. ஏதேனும் தவறாக நடந்தால் அவர்கள் அதிக அக்கறை எடுத்துக்கொள்வர் என்று எனக்குத் தெரியும்,” என்று இவர் சொன்னார். அவ்வப்போது மனத்திற்குள் பயம் எட்டிப் பார்த்தாலும் மலை யேற்றப் பயணம் நிற்கவில்லை.

“அந்த 13 மணி நேர மலை யேற்றத்தின்போது குளிரில் கால் விரல்கள் நடுக்கம் கண்டு, வலி எடுத்ததால் திரும்பச் சென்றுவிட லாமா என்ற எண்ணம் பலமுறை எட்டிப் பார்த்தது. ஆயினும், அடுத்த மூன்று மணி நேரத்தில் சிகரத்தை அடைந்துவிடலாம் என்பதால் என்னால் முடிந்தளவு முன்னேறிச் செல்ல விரும்பினேன்,” என்றார் இவர். மலையேற்றத்தின்போது பல இடங்களிலும் திரு ஆனந்தன் அசௌகரியமாக உணர்ந்தார். எடுத்துக்காட்டாக, ‘கும்பு’ பனிவீழ்ச்சி நாளொன்றுக்கு பல அடி தூரம் நகர்ந்தபடி இருந்தது. அத்துடன், பெரிய பனிப்பாறைகள் திடீரென உடைந்து விழலாம் என் பதால் திடீர் திடீரென பெருமளவில் பனி உடைந்தும் உருகியும் ஓடக் கூடிய அபாயமும் காணப்பட்டது. தரையிலிருந்து 5,270 மீட்டர் உயரத்தில் இருந்த தொடக்க முகாமில் இருந்து நேப்பாளத்தின் தென்கணவாய் வழியாக 1வது முகாமுக்கு (5,943 மீ.) போகும் போது மலையேறிகள் கும்பு பனி வீழ்ச்சியைக் கடந்தாகவேண்டும்.

உயரமான மலைப் பகுதிகளில் நிலவும் சூழலுக்குப் பழகிக்கொள் ளும் பொருட்டு ஒரு மாதத்திற்கு முன்னரே தொடக்க முகாமைச் சென்றடைந்தார் திரு ஆனந்தன். 50வது பிறந்தநாளை ‘கேக்’ வெட்டிக் கொண்டாடிய ஐந்து நாட்களுக்குப் பிறகு மே 18ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு கும்பு பனிவீழ்ச்சி நோக்கி பயணத் தைத் தொடங்கினார்.

சூரியோதயத்திற்குமுன் பனிச் சரிவு ஏற்பட வாய்ப்புக் குறைவு என்பதால் திரு ஆனந்தனும் வழி காட்டி ஜம்லிங்கும் அவரது 22 வயது மகள் ஷெர்பா வழிகாட்டி நிஷாவும் அதிகாலையிலேயே பய ணத்தைத் தொடங்கினர். ஆனால், பனிப்பாறைப் பிளவு களைத் தாண்டிச் செல்ல செங்குத் தான, கிடைமட்டமான ஏணிகளைப் பயன்படுத்த வேண்டியிருந்ததால் திரு ஆனந்தன் சிரமமாக உணர்ந் தார். இம்முயற்சியிபோது குறைந் தது பத்து முறையேனும் இவர் அத்தகைய ஏணிகளைப் பயன் படுத்த நேரிட்டது.

“பனிப்பாறைப் பிளவுகள் மிக ஆழமாக இருந்தன. அவற்றைக் கண்டபோது, ‘கரணம் தப்பினால் மரணம்தான்’ எனத் தோன்றியது. ஏணிப்படிகளில் காலணிகள் மாட் டிக்கொள்ளுமோ என்று நான் பெரிதும் அச்சப்பட்டேன். அதுவும் நடந்தது. ஆனாலும், பதற்றமின்றி அமைதியாக இருந்து, அதிலிருந்து விடுவித்துக்கொண்டு, முன்னேறி னேன்,” என விவரித்தார். வெயில் கொளுத்தியதால் 1வது முகாமில் இருந்து 2வது முகா மிற்குச் செல்வது பெரும்பாடாக இருந்தது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெருஞ்சோதனையாக இருந்தபோதும் திரு ஆனந்தன் தமது விடாமுயற்சியுடன் உறுதி யாக இருந்து அதைக் கடந்தார்.

இவ்வாறு சவால்கள் வந்து கொண்டே இருக்க, வீட்டு ஞாபகம் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தது. மனைவி, மகள், சிங்கப்பூரின் வெப்பமண்டலக் காலநிலை, உணவு, தமிழ்மொழி என எல்லா வற்றையும் இழந்ததுபோல உணரத் தொடங்கினார்.

இந்த நிலையில், ‘ஸ்பாட்டிஃபை’ செயலி இவருக்குத் துணையாக இருந்தது. அதன் வழியாக தமிழ் பாடல்களைக் கேட்டும் தொலை பேசி வழியாக நண்பர்களுடன் தமிழில் பேசியதும் இவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இவரும் குமாரி நிஷாவும் 4வது முகாமுக்குச் செல்ல ஐந்து நாட் களாயின. தொடர்ந்து சிகரத்தை நோக்கிய பயணம். மே 23ஆம் தேதி காலை 10 மணி அளவில் அம்மூவரும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர். அந்தத் தருணத்தை, அப்போது எழுந்த உணர்ச்சிகளை வார்த்தை களால் விவரிக்க முடியவில்லை என்கிறார் திரு ஆனந்தன்.

“கனவுலகில் இருப்பதுபோல் உணர்ந்தேன். எல்லாம் அழகாகவும் அற்புதமாகவும் காட்சியளித்தாலும் உயரத்தில் ஆக்சிஜன் குறைவாக இருந்ததால் எப்போது வேண்டுமா னாலும் மயங்கிவிழும் அபாயமும் இருந்தது,” என்றார் இவர். “அங்கு சிறிது நேரம் அமர்ந்து, ஓய்வெடுக்கலாம் என நம்பினேன். ஆனால், காற்று பலமாக வீசியதால் கால் மணி நேரத்திலேயே மலை உச்சியைவிட்டு விரைவாக கீழே இறங்க வேண்டியதாகிவிட்டது,” என்று சொன்னார். குமாரி நிஷா எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததும் இதுவே முதல்முறை என்பது வியப்புக்குரிய செய்தி. ஆனால், தேர்ந்த நிபு ணரைப் போல குழுவை அவர் வழிநடத்திச் சென்றதாக திரு ஆனந்தன் குறிப்பிட்டார். பனியின் அடர்த்தி அதிகமாக இருந்ததால் சில மீட்டர் தூரத்திற்கு மேல் எதுவும் தெரியவில்லை. இதனால் கீழே இறங்குவது இன்னும் சிரமமாக இருந்தது.

“காலடித் தடங்களைப் பனி மூடிவிட்டதால் சரியாகக் கால் ஊன்றி நடக்கவில்லை எனில் பல மீட்டருக்குக் கீழே விழ வேண்டி யதுதான். களைப்பாகவும் பசியுட னும் காணப்பட்டதோடு, இப்படி பனியும் சிரமப்படுத்தியதால் துயர மான, அசௌகரியமான உணர்வை அளித்தது,” என்றார்.

“சிகரத்தை எட்டியபின் திரும்பியபோது மலையேறிகள் மரணம் அடைந்த கதைகளைக் கேட்டிருக்கலாம். அது உண்மை யாக நடந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. பனிப்புயல் நெருங் கியதாலும் எதையும் பார்க்க முடி யாத சூழல் நிலவியதாலும் உயி ரோடு 4வது முகாமுக்குத் திரும்ப முடியுமா என நானே வியந்தேன்,” என அவர் கூறினார். ஒருவழியாக ஒன்பது மணி நேரத்திற்குப் பின் 4வது முகாமை அடைந்த பிறகும் துன்பம் தொடர்ந்தது. உடல்சூடு குறைந்த தற்கான அறிகுறிகள் தென்படுவது போல் அவர் உணர்ந்தார்.

தமது வாழ்நாளிலேயே அது தான் மோசமான இரவு எனக் குறிப்பிட்டவர், தூங்கும்போது உடல் நடுங்கியதாகவும் ஒரு நாள் முழுக்க நடந்தபிறகு ஒரே ஒரு குவளை வெந்நீரை மட்டுமே அருந் தியதாகவும் சொன்னார்.

மலையேறியபோது எதிர் கொண்ட சோதனைகளையும் இன் னல்களையும் மறக்கவே முடியாது என்கிறார் திரு ஆனந்தன். இருந் தாலும், திபெத் வழியாக இன் னொரு முறை எவரெஸ்ட்டில் ஏற முயல்வதற்கான சாத்தியத்தையும் அவர் ஒதுக்கிவிடவில்லை. எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குமரன் ராசப்பன் 2012ல் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். அதன்பிறகு, அதைத் தொட்ட 2வது சிங்கப்பூர் இந்தியர் திரு ஆனந்தன் என நம்பப் படுகிறது. “எவரெஸ்ட்டுக்குச் செல்ல வேண்டும் என முடிவுசெய்ததும் நான் சந்தித்த முதல் மனிதர் டாக்டர் குமரன். அவர் தமது அனு பவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டு, ஊக்கமளித்து, நல்ல ஆலோசனைகளை வழங்கினார்,” என்றார் திரு ஆனந்தன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!