தீவெங்கும் வீசும் டுரியான் வாசம்

தமிழில் முள்நாரி என அழைக்கப்படும் டுரியான் பழம் விளையும் பருவமான ஜூன்-ஆகஸ்ட் கால கட்டத்தில் அதன் மணத்தால் ஈர்க்கப்பட்டு தீவிலுள்ள பல பழக்கடைகளில் கூட்டம் குவிகின்றன.

டுரியான் ஓட்டில் கூரிய முட்கள் நிறைந்திருந்தாலும் உள்ளிருக்கும் சதைப்பகுதியின் இனிப்பை சுவைத்து மகிழ்கின்றனர் அதன் பிரியர்கள்.

சீனர், இந்தியர் எனப் பல்வேறு இனத்தவர் கும்பலாக வந்து மூசாங் கிங், டி24, டி88 போன்ற பல்வேறு டுரியான் வகைகளை குடும்பத்தினருக்காக வாங்குவதை நாம் பார்த்திருப்போம்.

ஆடைகள், பாரம்பரிய உணவு, மளிகைப் பொருட்கள், முகப் பராமரிப்புச் சேவை என அனைத்துப் பொருட்களும் சேவைகளும் கிடைக்கக்கூடிய லிட்டில் இந்தி

யாவில் டுரியான் பழத்தை விற்கும் கடைகளைப் பார்ப்பது அரிதாக இருந்தது.

தேக்கா சந்தையில் இருந்து முஸ்தஃபா சென்டர் வரையிலும் அமைந்துள்ள பல பழக்கடைகளுக்கும் சென்று பார்த்ததில் தேக்கா ஈரச் சந்தையில் மட்டும் டுரியான் விற்கப்படுவது தெரிய வந்தது.

ஆனாலும் அதை விற்பது ஒரு சீனர் என்றும் கேலாங், சைனாடவுன் வட்டாரங்களைப் போல அக்கடையில் விற்கப்படும் டுரியான் பழங்கள் மக்களின் வரவேற்பை அவ்வளவாகப் பெறவில்லை என்றும் அதன் வாடிக்கையாளர்கள் கூறினர்.

லிட்டில் இந்தியாவில் உள்ள மற்ற பழக்கடைகளில் ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் போன்ற பழங்

களை விற்கும் இந்திய விற்பனையாளர்கள் டுரியான் பழத்தை மட்டும் விற்காதது ஏன் என்பதை அறிந்துவர தமிழ் முரசு அங்கு சென்றது.

வாடிக்கையாளர்கள் பலரும் டுரியான் பழத்தைக் கேட்டு வந்தாலும் அதனுடைய தரத்தைச் சரியாகப் பார்த்து இறக்குமதி செய்யவேண்டிய காரணத்தால் டுரியான் பழத்தை இதுவரையிலும் விற்றதில்லை என்றார் சையத் ஆல்வி சாலையில் அமைந்துள்ள ‘ஸ்ரீ முருகன் டிரேடிங்‘ நிர்வாகி

திரு சே.மோகன்.

ஆப்பிள், வாழை, பலா போன்ற பழங்களைக் காட்டிலும் டுரியான் பழத்தைக் கேட்டு வருவோரின் எண்ணிக்கை குறைவு என்பதால் அதனை விற்பனை செய்வதில்லை என்றார் ‘ஸ்ரீ முல்லை டிரேடிங்‘கில் காசாளராக பணிபுரியும் திருமதி ரம்யா, 32.

டுரியான் பழத்தை எவ்வளவு நாட்களுக்கு வைத்திருப்பது, அவற்றை எவ்வாறு விற்பது போன்ற நுணுக்கங்கள் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ளவேண்டியுள்ளதால் அவற்றை தற்போது விற்கவில்லை என்று சாமி’ஸ் பூக்கடையில் பணிபுரியும் திரு பாபு, 48, கூறினார்.

டுரியான் பழத்தை விற்காததற்கு வேலையாள் பற்றாக்குறையும் ஒரு காரணம் என்று கூறினார் ‘பாலவீரா டிரேடிங்‘ நிர்வாகி திரு விஜய

சேகரன்.

கேம்பல் லேன் சாலையில் உள்ள ‘சதீஷ் டிரேடிங்‘கில் ஆறு ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் திரு ரமேஷ், டுரியான் பழத்தை விற்கும் உரிமத்தைப் பெறும் சிரமத்தை தவிர்க்க அதை விற்பதில்லை என்று பகிர்ந்துகொண்டார்.

“திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள் கடைக்கு வெளியே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு பலரும் டுரியான் பழத்தைக் கேட்டு வருகின்றனர். ஆனால், அப்பழத்தை விற்பதற்கு உரிமம் பெறவேண்டும். அதுமட்டுமின்றி, அதைச் சரியான முறையில் வெட்டி விற்பதற்கான திறனையும் வளர்த்துகொள்ள வேண்டும். அதற்கு நேரமும் எடுக்கும்,” என்றார் திரு ரமேஷ், 40.

தற்போது தமது கடையில் வாழைப்பழங்களை அதிகம் விற்கும் மதுகை ட்ரேடிங்கின் உரிமையாளர் திரு சிவா, ஒரு பழம் விளையும் பருவத்தை மட்டும் கணக்கில்கொண்டு அவற்றை விற்கக்கூடாது என்கிறார்.

“டுரியான் பருவமாக இருப்பி

னும்் இந்தப் பகுதியில் அப்பழத்தை கேட்டு வாடிக்கையாளர்கள் வரு

வார்களா என்பது கேள்விக்குறி. அது தெரியாமல், டுரியான் பழங்

களை அதிகம் இறக்குமதி செய்தால் அது இலாபத்தைப் பாதிக்கும். வாடிக்கையாளர்கள் டுரியான் பழம் கேட்டு வருகின்ற பட்சத்தில் அப்பழத்தை விற்பது பற்றி நான் யோசிப்பேன்,” என்றார் திரு சிவா.

இந்திய விற்பனையாளர்கள் இல்லாத பட்சத்திலும், இந்தியர்கள் டுரியான் பழத்தைத் தொடர்ந்து வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

வீராசாமி சாலையில் வசிக்கும் தீவிர டுரியான் பிரியரான குமாரி திவ்யபாரதி, லிட்டில் இந்தியாவில் பல வகையான டுரியான் பழம் கிடைக்காததால் அதை வாங்குவதற்கு தூரமும் சிரமமும் பாராமல் தம் தாயாருடன் பூகிஸ், சிலிகி ரோடு ஆகிய இடங்களுக்குச் செல்வாராம்.

“டி24 டுரியான் வகை எனக்கு மிகவும் பிடிக்கும். மாதம் இருமுறை நான் கிட்டத்தட்ட எட்டு டுரியான் பழங்களை வாங்கி வந்து எனது குடும்பத்தினருடன் சாப்பிடுவேன். அவற்றை வாங்கி குளிர்பதனப் பெட்டியில் சிறிது நேரம் வைத்து, பின் உண்ணும்போது அதன் ருசியே தனி,” என்று சொன்னார் 21 வயது திவ்யபாரதி.

தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் திருவாட்டி சரோஜா நாயர், 66, சிங்கப்பூருக்கு வரும்போதெல்லாம் தவறாமல் டுரியான் பழத்தை வாங்கி சாப்பிடுவேன் என்று கூறினார்.

“டுரியான் பழம் மிகவும் இனிப்பாக உள்ளதால் நான் அதை விரும்பி உண்பேன். ஆஸ்திரேலியாவில் இப்பழம் கிடைத்தாலும் அது உறைய வைக்கப்பட்ட நிலையில்தான் (frozen) கிடைக்கும். ஆனால், சிங்கப்பூரின் கேலாங், சைனா டவுன் போன்ற இடங்களில் விற்கப்படும் டுரியான் புதிதாகவும் சுவைமிக்கதாகவும் இருக்கும்,” என்றார் சரோஜா.

தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கு பணிபுரியும் திரு அருண், 28, டுரியான் பழத்தை தமது நண்பர்களுடன் ருசித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் டுரியான் பழத்தைக் காண்பது அரிது. ஒரு சில இடங்களில் மட்டுமே அது கிடைக்கும். மாம்பழம், பலாப்பழம் போன்ற பழங்களைத் தின்று பழகியதால் டுரியான் பழம் என்னை அவ்வளவாகக் கவரவில்லை,” என்றார் திரு அருண்.

தமிழகத்தில் ஊட்டி, மேட்டுப்பாளையம் போன்ற இடங்களில் அதிகம் கிடைக்கும் டுரியானை சென்னையிலும் காணலாம் என்றார் திரு தனபால்.

“சென்னையில் ஒரு சில இடங்களில் டுரியான் விற்கப்படுவதை காணலாம். ஆனாலும் அதன் விலை அதிகமாக இருக்கும் என்பதால், அதை நாங்கள் பணக்காரர்களுக்கான பழம் என்போம். இந்தியாவில் பலாப்பழத்தை அதிகம் பார்க்கலாம். அது டுரியான் பழத்தைவிட ருசியானது,” என்றார் புதுக்கோட்டையில் இருந்து வந்து இங்கு கட்டுமானத் துறையில் பணிபுரியும் திரு தனபால், 27.

டுரியானின் மணம் இலங்கை

யிலும் வீசியுள்ளது என்பதற்கு கட்டுகாஸ்தோத்தா, பிளிமதலவா போன்ற இடங்களே சான்று.

தற்போது அங் மோ கியோவில் வசித்துவரும் இலங்கையரான திருமதி நவதர்‌ஷினி, தமது நாட்டிலும் டுரியான் பழங்களை வாங்கிச் சாப்பிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

“சிறுவயதிலிருந்தே அந்த வாசனை மூக்கைத் துளைக்கும். நான் பிறந்த இடமான சபராகாமுவாவில் (sabaragamuwa) கிடைக்கும் டுரியானைக் காட்டிலும் இங்குள்ளவை புதிதாகவும் அதிக சதைப்பற்றுள்ளதாகவும் உள்ளன,” என்றார் அவர்.

டுரியான் பழம் திருமதி விஜய குமாரி லசாரஸின் குடும்பத்தை இணைக்கும் பாலமாக விளங்கியது. உட்லண்ட்சில் வசிக்கும் அவர், அங்குள்ள பழக்கடைகளில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை டுரியான் பழத்தை வாங்குவேன் என்று சொன்னார்.

“என் கணவர் முழு டுரியான் பழத்தை வாங்கி வந்து, வெட்டி, குடும்பத்தினருக்குப் பகிர்ந்து கொடுப்பது வழக்கம். அவர் வெட்டும்போது குடும்பத்தினர் அனைவரும் சுற்றி அமர்ந்து அதை வேடிக்கை பார்ப்போம். அதை ஒன்றாகச் சேர்ந்து சாப்பி

டுவதற்கு நானும் என் குழந்தைகள் மட்டுமல்லாமல் மற்ற உறவினர்களும் வருவர் என்பதால் டுரியான் எங்களுக்குள் இருந்த பிணைப்பை அதிகப்படுத்தியது,” என்று 43 வயதான திருமதி விஜயகுமாரி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்தியர்களில் டுரியான் பழத்தை விரும்புபவர்களைப் போல, அதை அறவே வெறுப்பவர்களும் இங்கு உள்ளனர்.

டுரியான் பழத்தின் வாசம் மற்றவர்களைச் சுண்டி இழுத்தாலும் தமக்கு அது நாற்றமாக உணர்வதாக குறிப்பிட்டார் திரு தர்மேந்திரன், 37.

“பழங்கள் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும். ஆனால் சிறுவயதில் டுரியான் பழத்தைச் சாப்பிட்டபோது உடலில் சூடு அதிகமாகி காய்ச்சல் வந்துவிடும்.மேலும் அதன் மணம் என்னை மயக்கமடையச் செய்வதால் அப்பழத்தைச் சாப்பிடுவதை அறவே தவிர்த்துவிட்டேன்,” என்று தர்மேந்திரன் கூறினார்.

டுரியான் பழத்தை விரும்புவோரும் வெறுப்போரும் இருந்தாலும் அதன் வாசம் சிங்கப்பூர் முழுவதும் பரவியுள்ளது என்பதே உண்மை.2019-07-14 06:10:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!