கவலையில் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள்

சிங்கப்பூரில் சுறுசுறுப்புக்கும் பரபரப்புக்கும் பெயர்போன இடங்களில் ஒன்று லிட்டில் இந்தியா. இந்தியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து இனத்தவரும், ஏன், பல நாடுகளையும் சேர்ந்தவர்கள் அதிகம் வந்துசெல்லும் இடமாக அந்த வட்டாரம் விளங்கி வருகிறது.

குடும்பத்தினருடன் உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுவது, நீண்டநாட்களுக்குப் பின்னர் உறவினர்களைச் சந்திப்பது, வெளிநாடுகளிலிருந்து வரும் நண்பர்களுக்குச் சிங்கப்பூரைச் சுற்றிக் காட்டுவது என பல காரணங்களுக்காக பல தரப்பினர் சங்கமிக்கும் இடமாகவும் லிட்டில் இந்தியா திகழ்கிறது.

பாரம்பரியத்தைப் பறைசாற்றி, அதைக் கட்டிக்காக்கும் இடமாகவும் விளங்கி வரும் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் கவலை ரேகைகள் படிந்த சில முகங்களை ஆங்காங்கே காண முடிகிறது.

பல்லாண்டு காலமாக அந்த வட்டாரத்தில் சில்லறை வர்த்தகம் செய்து வருவோர், அண்மைக்காலமாக வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதால் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

அதிவேக தொழில்நுட்பம் வளர்ச்சி காரணமாக எல்லாம் மின்னிலக்கமயமாகத் தொடங்கி விட்டன. இந்த இணைய உலகில், இருக்கும் இடத்தில் இருந்தவாறே எல்லா சேவைகளும் கிடைக்கும் என்ற நிலை வந்துவிட்டது.

ஒருபுறம் தொழில்நுட்பம், மறுபுறம் புதிது புதிதாய் முளைக்கும் கடைகள் எனப் போட்டி நிறைந்த உலகில், மாறிவரும் வாழ்க்கை முறையாலும் வர்த்தகம் தொடர்ந்து சரிந்து வருவது பல ஆண்டுகளாகத் தொழில் செய்துவரும் லிட்டில் இந்தியா சில்லறை மளிகை வர்த்தகர்களைப் பெரிதும் கலக்கம் அடையச் செய்துள்ளது.

வாடிக்கையாளர்கள் குறைந்தனர்

கடையில் நடக்கும் வியாபாரத்திற்கு அப்பாற்பட்டு சராசரியாக அன்றாடம் 20 வீடுகளுக்கு மளிகைப்பொருட்கள் விநியோகம் செய்து வந்த 'ஜி.அப்துல் ரஹீம் பிரதர்ஸ்' கடைக்கு இப்போது நாளுக்கு நான்கு விநியோகக் கோரிக்கைகள் வருவதே பெரிய விஷயமாக இருக்கிறது.

“முன்பெல்லாம் எங்களுக்கு வீட்டு விநியோக கோரிக்கைகள் எக்கச்சக்கமாக இருக்கும். அதனால் வட்டார வாரியாகப் பிரித்து விநியோகம் செய்வோம். இப்போது ஒரு நாளில் நான்கு விநியோகக் கோரிக்கைகள் வருவதே சிரமமாக இருக்கிறது. கடைக்கு வந்து வாங்குவோரின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்துவிட்டது,” என்று அதன் உரிமையாளர் அன்வர் பாஷா, 62, கூறினார்.

62 ஆண்டுகாலமாக அப்பர் டிக்சன் சாலையில் பலசரக்கு வியாபாரம் செய்துவரும் அப்துல் ரஹீம் நிறுவனத்திற்கு நீண்டகால வாடிக்கையாளர்கள் இருந்தபோதிலும் வர்த்தகம் இந்த ஆண்டு மிகவும் சரிந்திருக்கிறது.

“பல இடங்களில் மளிகைக் கடைகள் தொடங்கப்பட்டிருப்பது இதற்கு ஒரு காரணம். அதே நேரத்தில், பொருளியல் நிலைத்தன்மையின்மையும் மக்களை அச்சமுறுத்துவதாக உள்ளது. ஒருமுறைக்கு இருமுறை யோசித்தே எதற்கும் செலவுசெய்

கிறார்கள்,” என்றார் கடையை நிர்வகிக்கும் ஆ‌ஷிக் அஹமது, 30.

மூடுவிழா கண்டதால் அச்சம்

இதே கருத்தை முன்வைத்த ஸ்ரீ அம்பாள் மளிகைக் கடையின் உரிமையாளர் சரவணன் தாமோதரன், 45, "மளிகை வியாபாரம் கிட்டத்தட்ட படுத்துவிட்டது ," என்றார்.

“எவ்வளவு பொருளியல் சிக்கல் ஏற்பட்டாலும் பொதுவாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வாங்குவதை மக்கள் குறைக்கமாட்டார்கள். ஆடம்பர பொருட்களைத் தவிர்ப்பார்கள். இப்போது மளிகைப் பொருட்கள் வாங்குவது குறைந்துள்ளதற்குக் காரணம் என்னவென்றே தெரியவில்லை,” என்றார் திரு சரவணன்.

“கடந்த மூன்று மாதங்களில் டன்லப் ஸ்திரீட்டின் மையப் பகுதியில் மட்டும் மூன்று கடைகள் மூடப்பட்டுவிட்டன. இந்த வட்டாரத்தில் 27 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறேன். இதுபோன்ற நிலையை நான் இதுவரை கண்டதே இல்லை,” என்று ஆதங்கப்பட்டார் அவர்.

டன்லப் ஸ்திரீட்டில் இருந்த தந்தையின் அனாக்கோனா டிரேடிங் நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கிய திரு சரவணன், கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ அம்பாள் மளிகைக் கடையைத் தொடங்கினார்.

கடந்த சில ஆண்டுகளாக வியாபாரம் சரியில்லை எனக் கூறிய அவர், இந்த ஆண்டில் மட்டும் 20 முதல் 40 விழுக்காடு வரை வியாபாரம் சரிந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

தீவெங்கும் இந்திய மளிகைப் பொருட்கள் விற்கும் மொத்த வியாபாரக் கடைகள் செயல்படுவதும் இணையம் மூலம் பொருட்களை வாங்குவது அதிகரித்திருப்பதும் போட்டித்தன்மை அதிகரிப்பதும் லிட்டில் இந்தியாவில் சில்லறை மளிகைக் கடைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக வர்த்தகர்கள் பலரும் கருத்துரைத்தனர்.

"இந்தியப் பாரம்பரிய பொருட்கள் கிடைக்கும் ஒரு மையமாக லிட்டில் இந்தியா விளங்கி வந்தது. இப்போது தீவின் எந்தப் பகுதியிலும் அப்பொருட்கள் கிடைக்கும் வசதி வந்துவிட்டதால் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் பொதுவாகவே வியாபாரம் குறைந்துவிட்டது.

"அடுத்து, இன்றைய காலகட்டத்தில் ‘ரெகுலர் கஸ்டமர்ஸ்‘ எனப்படும் அணுக்கமான வாடிக்கையாளர்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முன்பிருந்த அளவில் எவரும் இந்த ஓர் அணுக்கத்தைக் கையாளுவதில்லை. தங்கள் பெற்றோருக்கு வேண்டிய பொருட்களை இணையத்தின் வாயிலாக வாங்கித் தருகிறோம் என இன்றைய தலைமுறையினர் கூறுகின்றனர். 2019ல் மட்டும் 30%-40% வியாபாரம் குறைந்துள்ளது. போட்டித்தன்மை அதிகரித்துள்ள அதே நேரத்தில் ஆதாயம் என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் போய்விட்டது," என்றார் தலைமுறை தலைமுறையாக அங்கு தொழில் செய்து வரும் வர்த்தகர் ஒருவர்.

அத்துடன், மளிகைப் பொருட்கள் வாங்கி வீட்டில் சமைப்பது குறைந்துவிட்டதும் இந்திய வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதும் தங்கள் வர்த்தகச் சரிவுக்கு மேலும் சில காரணங்கள் என்று மளிகைக் கடைக்காரர்கள் குறைப்பட்டுக் கொண்டனர்.

கால்பதிக்கும் பிற தொழில்கள்

லிட்டில் இந்தியாவில் மூலைக்கு மூலை மளிகைக்கடையாக இருந்த நிலை மாறி பார்க்குமிடம் எங்கும் சாப்பாட்டுக் கடைகளாக ஆகிவிட்டன என்றார் திரு பன்னீர்செல்வம்.

அதேபோல் நகைக்கடைகள், அடகுக்கடைகள், கைபேசி விற்கும் கடைகள், கேளிக்கைக் கூடங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டதாகக் குறிப்பிட் டார் திரு ஸ்ரீராம் பிரகாஷ்.

இதுபோன்றே லிட்டில் இந்தியா வட்டாரத்துக்கே உரிய தனித்துவமான பாரம்பரிய வர்த்தகங்களான புத்தகக் கடைகள், வெற்றிலைக் கடைகள் போன்றவை பல காணாமல் போய்விட்டன.

சில்லறை வர்த்தகத்தில் கடந்த சில மாதங்களாக பலசரக்கு உட்பட பலவற்றின் விற்பனை சரிந்துவந்த போதிலும் நகைக் கடைகள் மட்டும் தாக்குப்பிடித்து நிற்கின்றன.

அட்சய திருதியை காலத்தில் தங்க விற்பனை ஆண்டு அடிப்ப டையில் கடந்த மே மாதத்தில் 4.1% அதிகரித்திருந்ததாக புள்ளி விவரத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

நசிந்து வரும் ஜவுளி வியாபாரம்

லிட்டில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக வியாபாரம் குறைந்திருப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது என்கிறார் 60 ஆண்டுகளாக அங்கு ஜவுளி வியாபாரம் செய்து வரும் ஸ்ரீ கணேஷ் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு ராஜேந்திரன்.

"ஏற்றுமதி வியாபாரம் நன்றாக உள்ளது. அதே நேரத்தில், வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்துவிட்டது. அணுக்கமான வாடிக்கையாளர்கள் இருப்பதால் இன்னும் வியாபாரம் செய்ய முடிகிறது," என்றார் அவர்.

"முன்பெல்லாம் சேலை விற்கும் கடைகள் நிறைய இருக்கும். இந்த வட்டாரத்திற்கே உரிய பொருளாக ஜவுளி இருக்கிறது. இன்று சேலை விற்பனை செய்யும் கடைகள் குறைந்து, நகைக்கடைகளும் கைபேசிக் கடைகளும் பெருகிவிட்டன," என்று அவர் சொன்னார்.

இணைய வர்த்தகம் இதற்கொரு காரணம் என்ற அவர், லிட்டில் இந்தியா வட்டாரத்தில் கடைகளுக்கான வாடகை தொடர்ந்து கூடிக்கொண்டே இருப்பது தொழில் செய்பவர்களுக்குப் பெரிய பாரமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் இருந்து முதலீடு கொண்டு வந்து சிங்கப்பூரில் தொழில் தொடங்குவோர் அதிகம் இருப்பது வாடகைத் தொகை அதிகரித்தவாறே இருக்க ஒரு காரணமாக உள்ளது என்றும் அவர் சுட்டினார்.

குறிப்பாக சிறிய அளவில் கடை நடத்தும் தேக்கா சந்தை மேல்மாடி கடைக்காரர்கள் போன்றவர்களுக்குப் பாதிப்பு அதிகமாக உள்ளது.

“இணைய வர்த்தகம் வசதியாக இருப்பதால் இன்று எங்கள் வாடிக்கையாளர்களும் வர்த்தகர்களாகிவிட்டார்கள். இணையத்தில் வாங்குவதும் விற்பதும் அதிகரித்துவிட்டது,” என்றார் தேக்கா சந்தைக் கடை ஒன்றில் பணிபுரியும் செல்வி கார்த்திகா ஜெயமோகன்.

இதற்கிடையே, அடிக்கு அடி முளைத்திருக்கும் பூக்கடைகள், தையல் கடைகள், முடி திருத்த

கங்கள், காய்கறிக் கடைகள், அழகுப் பராமரிப்பு நிலையங்கள், நாணய மாற்றுக் கடைகள் போன்ற வியாபாரங்களுக்கு போட்டி கடுமையாக இருந்தபோதும் சமாளித்து வருகின்றன.

தேவை இருப்பதாலும் சிறிய கடையாக இருப்பதால் செலவு கட்டுக்குள் இருப்பதாலும் வர்த்தகத்தை நடத்த முடிகிறது.

ஆனாலும் நீண்டகாலமாக இதில் தொடர்ந்து நிலைத்திருப்பவர்கள் மிகக் குறைவு. இவை எப்போதுமே கைமாறிக்கொண்டே இருக்கின்றன. பெரும்பாலும் ஒருவர் அல்லது இருவரை நம்பி செயல்படுவதால் இத்தகைய கடைகளுக்கு முழு நேர அர்ப்பணிப்பும் உழைப்பும் தேவை. இது எல்லாராலும் முடிவதில்லை.

"சிங்கப்பூரில் இன்று எல்லா இடத்திலும் எல்லா பொருட்களும் கிடைக்கின்றன. குறிப்பாக இந்தியப் பொருட்கள், இந்திய உணவுக்கு தேக்காவுக்குத்தான் வரவேண்டும் என்பதில்லை. இணையத்திலும் கிடைக்கிறது. வீட்டுக்கே சேவை வழங்குகிறார்கள். ஆனாலும் தீபாவளி, பொங்கல், திருமணம், வீட்டு விசேஷங்களுக்குக் கட்டாயம் தேக்காவுக்குத்தான் போவோம். நல்ல நாள், பெருநாளில் தேக்கா வந்தால்தான் மனநிறைவு கிட்டும்," என்றார் திருமதி ஜானகி.

பொருளியல் ஏற்ற இறக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி, கால மாற்றம் போன்றவற்றால் லிட்டில் இந்தியாவின் பாரம்பரிய வர்த்தகங்களின் செயல்பாடுகள் மாறலாம். சில இல்லாமல் போகலாம்; புதியவை தொடங்கப்படலாம்.

எனினும், இந்தியப் பண்டிகைகளும் விழாக்களும் சடங்குகளும் நீடித்திருக்கும் வரையிலும் நண்பர்களைச் சந்திக்கவும் உறவுகளைச் சந்திக்கவும் பொழுதைப் போக்கவும் தேக்காவுக்கு வரும் மூத்த தலைமுறையினர், வெளிநாட்டு ஊழியர்கள், இளையர்கள், குடும்பத்துடன் இந்திய உணவு சாப்பிட வருபவர்கள், சுற்றுப்பயணிகள் இருக்கும் வரையிலும் லிட்டில் இந்தியா வட்டாரமும் செழித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!