ஜாலான் காயு, சிலேத்தார்வாசிகளை ஒன்றிணைத்த கலை நிகழ்ச்சி

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள்   உருவாவதற்கு முன்னர் ஜாலான் காயூ, ஆர்.ஏ.எஃப். சிலேத்தார் ஆகிய பகுதிகளில் வசித்த மக்களின் அந்தநாள் நினைவுகளை எழுப்பியது ஜாலான் காயு, ஆர்.ஏ.எஃப். சிலேத்தார் சிறப்பு நிகழ்ச்சி.

தரை வீடுகளிலும், கம்பத்து வீடுகளிலும் வசித்து வந்த இவர்கள் கஷ்ட நஷ்டங்களை பகிர்ந்துகொண்டு  சகோதர பாசத்துடன் பழகி வந்தனர்.  இந்திய சமூகத்தினரிடையே அசைக்க முடியாத பிணைப்பு இருந்ததைப் போல் சீன, மலாய்  இனத்தவர்களிடையேயும்  அவர்களது பிணைப்பு வலுப்பட்டிருந்தது. 

வாகன ஓட்டுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அலுவலகர், தையல்காரர், பெட்டிக் கடைக்காரர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த அவர்கள் இன்று அங் மோ கியோ, சிராங்கூன் போன்ற இடங்களில் குடியேறியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஆக முதியவரான 90 வயது திருவாட்டி மாரியம்மா சிலேத்தாரில் பிறந்து வளர்ந்தவர்.

சிலேத்தாரில் வசித்தபோதும், அருகே உள்ள ஜாலான் காயு மக்களிடமும் நீண்டகால நட்பை வளர்த்துகொண்டதாக கூறிய அவர்  கடந்த 40 ஆண்டுகளாக அங் மோ கியோவில் வசித்து வருகிறார். 

அந்தக் கால நினைவுகள்  அவரது மனதில் ஆழமாக பதிந்துள்ளதாகவும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பல ஆண்டுகளாக சந்திக்காத நண்பர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளதா கவும் அவர் கருத்து பகிர்ந்துகொண்டார்.

“நான் அங்கு வாழ்ந்த காலகட்டத்தில்  குழந்தைகளாக இருந்த எனது நண்பர்களின் பிள்ளைகளை இப்போது பெரியவர்களாக காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது நண்பர்களில் பெரும்பாலானோர்  இறந்துவிட்டாலும் இந்நிகழ்ச்சியின் மூலம் ் அவர்களுடன் இருந்த நாட்களை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார் திருவாட்டி மாரியம்மா.

ஜாலான் காயுவில் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த திருநெல்வேலி சங்கத்தில் ஏற்பாடு் செய்யப்பட்ட தமிழ்க் கலை நிகழ்ச்சிகளும், பொங்கல், தீபாவளி   கொண்டாட்டங்களும் திருக்குறள் விழாக்களும் இன்றைக்கும் தங்களது மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளன என்றார் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு ஸ்டீவன் ஆசிர்வாதம்.

“13 ஆண்டுகள் நான் சிலேத்தாரில் வசித்தேன். இருப்பினும், ஜாலான் காயு மக்களோடு  நல்ல நட்புறவு இருந்ததால் அங்கு நடந்த பல கொண்டாட்டங்களில் சிலேத்தாரில் வசித்தோரும் கலந்துகொள்வர்.

"சிலேத்தாரில் அமைக்கப்பட்டிருந்த வளர்மதி இசைக் குழுவை எனக்கு மிகவும் பிடிக்கும். அன்றைக்குப் பிரபலமாக இருந்த பாடல்களைப் பாடி  இவ்விரண்டு பகுதிகளில் வாழ்ந்த இந்தியர்களை இக்குழு இசை மழையில் நனையச் செய்தது. அதுமட்டுமல்லாமல் லோரோங் தங்கம் பகுதியில் இருந்த 'எங் வா' திரையரங்கில் அடிக்கடி தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படும்.  நண்பர்களோடு ஆரவாரத்துடன் கண்டுகளிக்கும் அரிய அனுபவத்தை இப்போது பெற முடியாது,” என்றார் 53 வயது திரு ஆசிர்வாதம்.

சிங்கப்பூர்,  மலேசியா, இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்கள்  நிகழ்ச்சி படைத்தனர். அவர்கள் 1950, 60களில் பிரபலமான பாடல்களையும் கலைஞர்கள் பாடியதுடன் எம்.ஜி.ஆர் மற்றும் அன்றைய முன்னணி  நடிகர்கள்  போன்று வேடமிட்டும்  ஆடி  பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.

முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த ஒன்றுகூடல் தங்களை அந்தகாலத்துக்கு  அழைத்து சென்றதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலர் கூறினர்.

ஆடல், பாடல் என பழைய நினைவுகளை தூண்டிய இந்நிகழ்ச்சி  நல்ல வரவேற்பு பெற்றதாக  சிலேத்தாரில் 20 ஆண்டுகளுக்கு மேல் வசித்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு ராஜவர்மன் குறிப்பிட்டார்.

முதன்முறையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி இவ்விரண்டு பகுதிகளில் வாழ்ந்த மக்களை ஒன்றிணைக்கும் தளமாக  அமைந்தது. 

வரும் ஆண்–டு–க–ளி–லும் இது போன்ற நிகழ்ச்–சி–களை நடத்த முயற்சி எடுக்–கப்–படும் என்று அவர் தெரி–வித்–தார்.