கேம்பல் லேனில் மணம் வீசிய 200 குழம்பு வகைகள்

இந்தியா, வெனிசுவேலா, கொலம்பியா, தாய்லாந்து, இத்தாலி என பல்வேறு நாடுகளில் சமைக்கப்படும் கறிகளின் மணம், புகைமூட்டத்தினால் ஏற்பட்டு உள்ள புகை மணத்தையும் தாண்டி லிட்டில் இந்தியா எங்கும் கடந்த சனிக்கிழமை ( செப்டம்பர் 14ஆம் தேதி) கமகமத்தது.  சிங்கப்பூரின் 200ஆம் ஆண்டு நிறைவையும் தீபாவளியையும் முன்னிட்டு 200 வகையான கறிகளைச் சமைக்கும்  ‘கறி ஃபியேஸ்டா 2019’ எனும் குழம்பு விழாவை லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) பெண்கள் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.

சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் நோக்கத்தில் பல அமைப்புகள் காரம், புளிப்பு, காய்கறிகள் சேர்க்கப்பட்ட வகைவகையான குழம்பு வகைகளைச் சமைத்து, காலை முதலே எடுத்து வரத்தொடங்கின. கிட்டத்தட்ட 11 மணி அளவில் 200 வகைக் கறிகள் சுவைப்பதற்குத் தயாராகின. கிட்டத்தட்ட 2,500 பேர் திரண்ட இந்தச் சாதனை நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தொடர்பு தகவல்; கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், ஒவ்வொரு கலாசாரத்திலும் வெவ்வேறு வகையாகச் சமைக்கப்படும்  ‘கறி’ பலவிதமான சுவையும் தேவைக்கு ஏற்ப சமைக்க முடியும் என்றும் அனைவருடனும் பகிர்ந்துண்ணக்கூடிய ஓர் உணவு என்றும் கூறினார்.  

Property field_caption_text
சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதைக் குறிக்கும் சான்றிதழை மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், சாதனைப் புத்தக அதிகாரி, ஏற்பாட்டுக் குழுவினர் ஆகியோர் காட்டுகின்றனர்.(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

“பலதரப்பட்ட கலாசாரங்களின் சமைக்கப்பட்ட கறிகளைப் பார்த்தேன்.  பலவித உணவுப் பொருட் கள், சமையல் முறைகள் ஆகிய வற்றின் தாக்கத்தால் இந்த கறிகள் மாற்றம் பெற்றுள்ளன. காலத்துக்கேற்ப மாறும் தன்மையைக் குறிக்கும் கறியின் குணம் இது,” என்றார் அவர்,  சிங்கப்பூரின் பல இன, கலாசார சமுதாயத்தைப் பறைசாற்றும் வகையில் சைவ, அசைவ, இந்திய, அனைத்துலக கறி வகைகள் படைக்கப்பட்டன என்று குறிப்பிட்டார் லிஷா பெண்கள் பிரிவின் தலைவி ஜாய்ஸ் கிங்ஸ்லி.    

“சிங்கப்பூரின் மக்கள் கறியை விரும்பி சாப்பிடுகின்றனர். கறியை சார்ந்த கலாசாரத்தைப் பகிர, உலகமெங்கும் சேர்ந்த கறிகளை இங்கு வழங்க முனைந்துள்ளோம்,” என்றார் திருமதி ஜாய்ஸ். 

சிங்கப்பூர் சாதனைப் புத்தக விருது வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் பொதுமக்களுக்கு கறிகள் இலவசமாக வழங்கப்பட்டன. உடன் வழங்கப்பட்ட சோறு, ரொட்டி வகைகளுடன் மக்கள் கறிகளைச் சுவைத்தனர்.  

Property field_caption_text
(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

நிகழ்ச்சியில் இடம்பெற்ற சிறப்புக் கறிகளில் ஒன்று ‘டேஸ்ட் ஆஃப் கல்ட்’ (Taste of Kult) என்ற சைவ உணவகம் தயாரித்த தர்ப்பூசணி குழம்பு.  ராஜஸ்தானில் வெப்பமான பருவநிலையால் அங்குள்ள பல உணவுகளில் தர்ப்பூசணி பழம் சேர்க்கப்படுகின்றது என்றும் அதை மையமாக்கி குழம்பு தயாரிக்க விரும்பியதாகவும்  கூறினார் அந்த உணவகத்தின் நிறுவனர் ஃபார்ஹான் மத்தார்.

வீட்டிலிருந்து உணவு சமைத்து விநியோகிக்கும் ‘டிஎல்டி விஷ்ஃபுல் டிரீட்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வரும் 42 வயது திருமதி பல்லவி விஸ்வநாதன், ஜூரோங் கிரீன் சமூக மன்றத்தின் பெண்கள் செயற்குழுவின் சார்பாக ‘பலாக் பன்னீர்’ குழம்பு ஒன்றை இவ்விழாவிற்காகத் தயாரித்து படைத்திருந்தார்.