தீமிதி பக்தர்களுக்கு புதிய பதிவு முறை

இம்மாதம் 20ஆம் தேதி நடக்கவிருக்கும் தீமிதித் திருவிழாவை முன்னிட்டு நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களுக்குப் புதிய பதிவு முறை கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கியது.

கடந்த ஆண்டுகளைப் போல இல்லாமல், இவ்வாண்டின் தீமிதித் திருவிழாவில் நேர்த்திக் கடன்களைச் செலுத்தும் பக்தர்கள் நேரடியாக சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்குச் சென்று இம்மாதம் 18ஆம் தேதிக்குள் விவரங்களைப் பதிவு செய்துவிட வேண்டும் என்று கூறினார் ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிர்வாகக் குழுச் செயலாளர் ச.கதிரேசன்.

“இந்தப் பதிவு முறை பொதுமக்களுக்கு இல்லை. வழக்கம்போல பொதுமக்கள் பிரார்த்தனைகள் செய்து தீமிதித் திருவிழாவைக் கண்டுகளிக்கலாம். நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களுக்கு மட்டும்தான் இந்தப் புதிய பதிவு முறை பொருந்தும்,” என்றார் திரு கதிரேசன்.

காலை 8 முதல் நண்பகல் 12 மணி வரையிலும், பின்னர் மாலை 5.30 முதல் இரவு 9.30 மணி வரையிலும் பக்தர்கள் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பதிவு செய்துகொள்ளலாம். தீக்குழி சுற்றும் பெண் பக்தர்கள், தங்களுக்கு விருப்பப்பட்ட கால நேரத்தில் நேர்த்திக் கடன்களைச் செலுத்த பதிவு செய்யலாம்.

நள்ளிரவு 12 முதல் பின்னிரவு 1, பின்னிரவு 1 முதல் பின்னிரவு 2, பின்னிரவு 2 முதல் அதிகாலை 3 மணி என மூன்று கால நேரங்கள் உள்ளன. ஒவ்வொரு கால நேரத்திற்கும் 300 பெண் பக்தர்கள் வரை பதிவு செய்யலாம்.

ஆண் பக்தர்களுக்கு $20யும் பெண் பக்தர்களுக்கு $15யும் கட்டணம் வசூலிக்கப்படும்.

பதிவுசெய்யும்போது பக்தர்களிடமிருந்து சில அடிப்படை விவரங்கள் சேகரிக்கப்படும். பதிவு உறுதிப்படுத்தப்பட்டவுடன் ‘க்யூஆர்’ குறியீடு மற்றும் முக்கிய விவரங்கள் மின்னஞ்சல், குறுஞ்செய்தி, கடிதம் ஆகியவை மூலம் வழங்கப்படும்.

பக்தர்கள் மற்றவர்களின் விவரங்களை வைத்து தங்களுக்காக பதிவு செய்யமுடியாது. உதாரணத்திற்கு, ஒரு கைபேசி எண்ணை வைத்து இரண்டு பேருக்கோ அதற்கு மேற்பட்டவர்களுக்கோ பதிவு செய்யமுடியாது. விவரங்கள் தமக்குரியதாக இருக்கவேண்டும் என்று ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் சீ.லட்சுமணன் வலியுறுத்தினார்.

“சிங்கப்பூரின் தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்துக்கு உட்பட்டு இந்த விவரங்கள் சேகரிக்கப்படும். ஆபத்து விளைவிக்கும் சம்பவங்கள் நிகழும்போது உடனடி நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான தகவல்களும் சம்பந்தப்பட்ட உற்றார் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கவும் இவ்விவரங்கள் பயனளிக்கும்,” என்றார் திரு லட்சுமணன்.

எதிர்காலத்தில் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் இணையம் மூலம் பதிவு செய்வதற்கான இலக்கு இருப்பதாகவும் இந்த புதிய பதிவு முறை அந்த இலக்கை அடைவதற்கான முதல் படி என்றும் தெரிவித்தார் திரு லட்சுமணன்.

“திருவிழா நாளான்று மூன்று இடங்களில் கோயில் நிர்வாகம் பக்தர்களைப் பரிசோதிக்கும். இருப்பினும், பக்தர்கள் தங்கள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி ஆரோக்கியமான நிலையில் தமது நேர்த்திக் கடனைச் செலுத்தவேண்டும். விதிமுறைகளை மீறி தீமிதியில் கலந்துகொள்வது தவறு,” என்றார் திரு கதிரேசன்.

ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 4,000 ஆண் பக்தர்களும் 1,000 பெண் பக்தர்களும் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்த தீமிதித் திருவிழாவில் பங்கேற்கின்றனர்.

இவ்வாண்டு ஏறத்தாழ 500 பக்தர்கள் பதிவுசெய்துள்ள நிலையில், இந்த புதிய முயற்சி, திருவிழா நாளன்று கூட்ட நெரிசலை சிறப்பாக நிர்வகிக்க வழிவகுக்கும் என கோயில் நிர்வாகம் நம்புகிறது.

இவ்வாண்டின் பதிவு முறை தாட்களின் பயன்பாட்டைக் குறைத்தல், பாதுகாப்பில் முன்னேற்றம் ஆகிய அம்சங்களில் முன்னேற்றம் கண்டாலும், பதிவு செய்யும் நேரத்தைக் குறைக்கவேண்டும் என்று கூறினார் கிட்டத்தட்ட 35 ஆண்டு களாக தீமிதித் திருவிழாவில் ஈடுபட்டு வரும் திரு ராஜராஜன் ஆதிமூலம், 56.

“கூட்டம் இல்லாத நேரத்தில் பதிவு செய்ய எனக்கு 15 நிமிடங்கள் எடுத்தன. கூட்டம் அதிகமாக இருந்தால் இன்னும் அதிக நேரமாகலாம். பட்டைக் குறியீட்டு வருடி (Barcode scanner) போன்ற நவீன தொழில்நுட்பம் கொண்டு பதிவு முறையை வேகப்படுத்தலாம்,”

“தொடக்கத்தில் இந்தப் புதிய பதிவு முறையை இணையத்திலேயே செய்துவிடலாம் எனத் தவறாக நினைத்தேன். வருங்காலத்தில் பதிவு முறை முழுதாக இணையத்தில் கொண்டு வந்தால் பக்தர்கள் எளிமையாக பதிவு செய்ய வழிவகுக்கும்,” என்றார் திரு ராஜராஜன்.

“பெருமாள் கோயிலிலிருந்து மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையில் கள்ளத்தனமாக புகுந்து வருவோரைப் பார்த்துள்ளேன். கட்டணம் செலுத்தி பதிவு செய்வதை எதிர்த்து அவ்வாறு செய்வதுண்டு. ஆனால் ஏற்பாடுகளுக்கு ஆகும் செலவைப் பற்றி அவர்கள் யோசிப்பதில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க இந்தப் புதிய பதிவு முறை உதவும்,” என்றார் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தீமிதித் திருவிழாவில் பங்கெடுத்து வரும் திரு சண்முகம் ஆறுமுகம், 50.

தீமிதிக்கும் ஆண் பக்தர்கள் தீக்குழி சுற்றும் பெண் பக்தர்கள் ஆகியோர் பதிவுசெய்ய கூடுதல் வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் இன்றும் அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் (அக்டோபர் 13) லிட்டில் இந்தியா ஆர்கேட்டில் ஒரு கூடத்தை அமைத்திருக்கும்.

அங்கு பக்தர்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை பதிவு செய்துகொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!