மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முக்கியம்

கடந்த 26 ஆண்டுகளாக மூத்த தாதியாகப் பணிபுரியும் திருமதி சு.சுப்புத்தாய், 2012ஆம் ஆண்டில் தமக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதைக் கண்டுபிடித்தார். 

நோயாளிகளைப் பராமரித்துச் சேவை புரியும் தொழிலில் இருக்கும் தனக்கே இந்த நிலை வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. “ஏன் எனக்கு இந்தச் சோதனை என்ற கேள்வியை நானே என்னைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் இந்த நோய் வந்தபோதுதான் நோயாளிகளின் வேதனை என்ன என்று எனக்குப் புரிந்தது,” என்று கூறினார் திருமதி சுப்புத்தாய், 53.  

குடும்பம், உறவினர் ஆகியோரின் ஆதரவால் உடனடியாக சிகிச்சை மேற்கொண்டார் திருமதி சுப்புத்தாய். ‘கீமோதெரபி’ சிகிச்சையை மேற்கொண்ட அவர், குணமடையக் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் எடுத்தன. குணமடைவதற்குக் குடும்பத்தாரின் ஆதரவு முக்கியப் பங்கு வகித்தது என்று குறிப்பிட்டார் அவர். 

“இதுபோன்ற நெருக்கடிகளின்போதுதான் நெருக்கமான உறவு களின் ஆதரவு மிக முக்கியம்,” என்றார் திருமதி சுப்புத்தாய்.

மார்பில் கட்டி இருப்பதை உணர்ந்த திருமதி சுப்புத்தாய், மருத்துவர் ஆலோசனையை நாடினார்.  

“நோய் இருப்பது உறுதியானபோது எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. மருத்துவர் என்னிடம் சிகிச்சை பெறச் சொன்னார்.

“தொடக்கத்தில் முதல் கட்டப் புற்றுநோய் என்று கூறப்பட்டது. ஆனால் சிகிச்சைக்குப் பிறகு அது இரண்டாம் கட்ட புற்றுநோயாக உருவாகிவிட்டது என்று மருத்துவர் தெரிவித்தார். நல்ல வேளையாக ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சையை நாடிச் சென்றேன். தாமதித்திருந்தால் அது நிலை மூன்றாம், நான்காம் கட்டம் என்று மோசமாகியிருக்கலாம்,” என்று சொன்னார் திருமதி சு.சுப்புத்தாய். 

தமது ஓய்வுநேரத்தில் மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்கு ஆறுதலும் ஊக்கமும் அளித்து வருகிறார் இவர். 

“தொடக்கத்திலேயே பரிசோதனைகள் செய்துகொள்வது அவசியம். புற்றுநோய் இருந்தால் உடனடியாக சிகிச்சை நாடுவது முக்கியம். நம் உடல்நலத்தை நாம்தான் பராமரிக்கவேண்டும்,” என்றார் திருமதி சுப்புத்தாய்.

டான் டோக் செங் மருத்துவ மனையில் அமைந்துள்ள மார்பக மருந்தகத்தில், 1998ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார் திருமதி பத்மாவதி செல்லையா. அந்த மருந்தகத்தை அமைப் பதில் முக்கியப் பங்கு வகித்தவர் அவர். 

“மருத்துவர் முதன்முதலில் நோயாளியிடம் உறுதிசெய்யப்பட்ட நோயைப் பற்றி தெரிவிக்கும் வேளையில் தாதியர் பக்கத்தில் இருக்கவேண்டும். சிலர் அதிர்ச்சி அடைவார்கள், சிலர் அழுவார்கள். இப்படி நோயாளிகள் தங்களுக்கு நோய் இருக்கிறது என்ற தகவலை வெவ்வேறு விதமாக எடுத்துக்கொள்வார்கள். அவர்களுக்குத் தகுந்த ஆதரவு ஆளிக்கவேண்டும்,” என்றார் திருமதி பத்மாவதி. 

மனநிலை, உணர்வுகள் தொடர்பில் ஆறுதல் கூறி ஆதரவு வழங்குவது உட்பட மறுவாழ்வு பணிகளும் மார்பகப் புற்றுநோய் தாதியர்களின் முக்கியக் கடமைகளாகும். 

“சிகிச்சைக்குப் பிறகு உடற்பயிற்சி, அடிப்படை உடல் அசைவுகள் போன்றவற்றில் ஈடுபடப் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவோம். அவர்களை மீண்டும் தங்களின் அன்றாட வாழ்க்கைமுறைக்குக் கொண்டுவருவதே எங்களின் நோக்கம்,” என்று சொன்னார் திருமதி பத்மாவதி. 

நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது ‘மெமோகிராம்’ பரிசோதனைக்குச் செல்லவேண்டும் என்றும் 20 முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் தமது மாதவிலக்கு முடிந்ததும் புற்றுநோய்க்கான அறிகுறிகளை அறிய சுய பரிசோதனையைச் செய்துகொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருமதி பத்மாவதி. 

“சிலர் மெமோகிராம் வலிக்கும் என அஞ்சி சோதனை செய்துகொள்ளாமல் இருப்பதுண்டு. ஆனால் தற்கால மருத்துவச் சாதனங்கள் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டவை. வலி அதிகம் இருக்காது. வலியைவிட நம் வாழ்க்கைதான் முக்கியம்,” என்று நம்பிக்கையளித்தார் அவர். 

புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை நாடவேண்டும் என்றும் பலதுறை மருந்தகத்திக்குச் சென்று பரிசோதனைகள் செய்துகொள்வது எளிது என்றும் கூறினார் தாதி பத்மாவதி. 

“மார்பில் எந்த வலியும் இல்லை என்று நினைத்து பரிசோதிக்காமல் இருந்துவிடக்கூடாது. 

“மார்பகத்தில் கட்டி இருந்தால் அது புற்றுநோய்க்கான மூன்றாம், நான்காம் கட்ட திலைக்குச் செல்ல வாய்ப்புகள் உண்டு. நோய்க் கடுமையாகி மற்ற உடல் உறுப்புகளையும் பாதிக்கலாம்,” என்றார் திருமதி பத்மாவதி.

 

லிஷா பெண்கள் பிரிவின் ‘பிங்க் ஆஃப் ஹெல்த்’

லிஷா பெண்கள் பிரிவு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துரையாடல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு குழு. 
படம்: லிஷா பெண்கள் பிரிவு
லிஷா பெண்கள் பிரிவு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துரையாடல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு குழு. படம்: லிஷா பெண்கள் பிரிவு

மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய ‘பிங்க் ஆஃப் ஹெல்த்’ (Pink of health) நிகழ்ச்சியை லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) பெண்கள் பிரிவு இம்மாதம் 3ஆம் தேதியன்று ஏற்பாடு செய்திருந்தது. 

ரேஸ் கோர்ஸ் ரோட்டில் அமைந்திருக்கும் ‘பனானா லீஃப் அப்போலோ’ உணவகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 60 பெண்கள் கலந்துகொண்டனர். 

‘இன்ஜீனியஸ் பியூட்டி எஸ்ஜி’ என்ற நிறுவனத்தைச் சேர்ந்த சுகாதார, உடல்நலன் பயிற்றுவிப்பாளர் திரு சிம் சு ஹொங், சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டார். 

இயற்கை முறைகளைக்கொண்டு பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தைப் பேணும் வழிகள், மார்பகப் புற்றுநோயைத் தடுத்து குணப்படுத்துவதற்கான உத்திகள், ஆரோக்கிய உணவுவகைகள் போன்றவற்றின் தொடர்பில் கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. 

பெண்களின் மேம்பாட்டிற்காக லிஷா பெண்கள் பிரிவு பல நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்து வருகிறது. 

இதன் தொடர்பில் பெண்கள் எவ்வாறு தங்களுக்கென ஓர் தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளலாம் என்பது குறித்த நிகழ்வு ஒன்றை வரும் டிசம்பர் மாதம் 2ஆம் தேதியன்று நடத்தவிருப்பதாகவும் கூறினார் லிஷா பெண்கள் பிரிவின் செயலாளர் திருமதி அனு ஜீன் சுகமல், 43.

Loading...
Load next