தனிநாயக அடிகளார் நினைவைப் போற்றிய விழா

திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம் சார்பில் தனிநாயக அடிகளார் நினைவைப் போற்றிய விழா, செப்டம்பர் 28ஆம் தேதியன்று உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெற்றது.

‘பிரபஞ்ச ஆற்றல் குடில்’  கலைக் குழு படைத்த கிராமிய பாடல்கள், சிறார்களின் கோலாட்டம், சிலம்பம் அனைத்தும் கவர்ந்தன. செல்வன் ரோஷன் பரத்தின் தமிழ் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் ஏற்பாட்டுக் குழு தலைவர் திரு தமிழ்மறையான் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து செல்வி உமாதேவியின் பரதநாட்டிய அங்கம் இடம்பெற்றது. 

சங்க கால படைப்புகள் சாமானிய மக்களுக்குக் கிடைக்க உதவியதோடு உலக தமிழாராய்ச்சி மாநாடுகளுக்கு அடித்தளமிட்டவர் தமிழ் தூதர் தனிநாயக அடிகளார் என்று அவரது சிறப்புகளை எடுத்துக் கூறினார் சிறப்பு விருந்தினரான தமிழர் பேரவை தலைவர் திரு வே. பாண்டியன்.

திருக்குறளின் பெருமைகளைப் பற்றி பேசியதுடன் நமது தமிழ் மொழியைப் பேணி பாதுகாக்க, குழந்தைகளைத் தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஊக்கப்படுத்தவேண்டும் என்றார் அவர். 

தனிநாயக அடிகளாரைப் பற்றி உரையாற்றிய செல்வி மோனாலிசா இளமாறன், அடிகளார் உலகுக்கு ஆற்றிய தமிழ் பணிகளை வரிசைப்படுத்தினார். 

ஒய்வுபெற்ற தமிழாசிரியர் திரு பி. சிவசாமிக்கு ‘தனிநாயக அடிகளார் இயற்றமிழ் விருது’ வழங்கப்பட்டது நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்தது. ‘தமிழ் தூது’ என்ற தலைப்பில் சிங்கை இலக்கிய கழக தலைவர் இரத்தின வேங்கடேசன் சிறப்புரையாற்றினார். 

தனிநாயக அடிகளாரின் வரலாற்றையும் அவர் தமிழுக்கு ஆற்றிய பணிகளையும் பேசியதோடு தமிழை உலகெங்கும்  கொண்டு செல்ல உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கியதன் வரலாற்றையும் குறிப்பிட்டார். 

தனிநாயக அடிகளாரின் கணிப்பான “தமிழின் வரலாறு சுமார் 3500 ஆண்டுகளுக்கு மேல்”  என்பதை தமிழகத்தின் கீழடி ஆய்வு நிரூபிக்க போகும் காலம் இது என்றார் அவர். கழகத்தின் பொருளாளர் திரு உத்திராபதியின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி முற்றுபெற்றது.