தலைத் தீபாவளி குதூகலம்

திரு வேலப்பன் - திருமதி சாவித்ரி தம்பதிக்கு இந்த ஆண்டு மிகவும் மகிழ்ச்சியான, வித்தியாசமான தலைத் தீபாவளி.

கடந்த பத்து ஆண்டுகளாக ஒற்றை பெற்றோராக தமது மகன், மருமகள், பேரக்குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடி வந்த 72 வயது திருமதி சாவித்ரி இவ்வாண்டு தமது கணவருடன் தலைத்தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடினார்.

இவ்வாண்டு ஏப்ரல் 12ஆம் தேதியன்று சமூகத்தின் வாழ்த்துகளோடு ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் மணமுடித்த இந்தத் தம்பதியர், பரிவையும் அன்பையும் பகிர்ந்துகொள்ள வயது முக்கியமல்ல என்பதை தங்கள் வாழ்க்கை மூலம் நிரூபித்து வருகின்றனர்.

கம்போங் சீலாட் பகுதியில் வசித்த இருவரும் சிறு வயது நண்பர்கள். திருமணம், இடமாற்றம் என இடையில் தொடர்பற்றுப்போன இவர்கள் 2004ல் எதிர்பாராதவிதமாக ஒரு வேலைப் பயிற்சியின்போது மீண்டும் சந்தித்தனர்.

இந்தியாவில் பிறந்து 21வது வயதில் சிங்கப்பூர் வந்த திரு வேலப்பன் கடைகளில் உதவியாளராகவும் பின் துப்புரவாளராகவும் பணிபுரிந்தார். 1974ல் அவருக்கு நடந்த முதல் திருமணம் 23 ஆண்டுகளுக்குப் பின் முறிந்ததைத் தொடர்ந்து தமது தந்தையுடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். தந்தை காலமான பிறகு சிங்கப்பூரில் சொந்தம் என்று ஒருவரும் இல்லை.

தனிமையில் வாடி உடல் நலமில்லாமல் போன வேலப்பனுக்கு கைகொடுத்தார் திருமதி சாவித்ரி.

முன்னாள் கணவர் பத்து ஆண்டுகளுக்கு முன் இறந்ததை அடுத்து கரடுமுரடான வாழ்க்கைப் பயணத்தில் போராடி வந்த திருமதி சாவித்ரி, தமது முதுமை பருவத்தை திரு வேலப்பனுக்கு உதவி செய்வதன் மூலம் அர்த்தமுள்ளதாக்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக கால் பிரச்சினைகளால் நடப்பதில் சிரமங்களை எதிர்நோக்கிய திரு வேலப்பன் ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் சேர்க்கப்பட்டபோது அவருக்கு உற்றதுணையாக இருந்தார் சாவித்ரி.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, இல்லத்திற்கு அடிக்கடி சென்று அவரைக் காண்பது என பல வழிகளில் திரு வேலப்பனுக்கு ஆதரவாகத் திகழ்ந்தார் அவர்.

திரு வேலப்பன் நடக்க தொடங்கிய பிறகு இருவரும் இவ்வாண்டு பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். புக்கிட் மேரா வாடகை வீட்டில் வசிக்கும் இத்தம்பதியர் இவ்வாண்டு தீபாவளியை புத்தாடை, பலகாரங்களோடு திருமதி சாவித்ரியின் மகனான திரு மகேசன், 43, குடும்பத்தோடு கொண்டாடினர். மறுநாள் ஸ்ரீ நாராயண மிஷன் நண்பர்களோடு தீபாவளியைக் கொண்டாடினர்.

“தீபாவளிக்குத் தவறாமல் நாங்கள் எங்களது இரு குழந்தைகளுடன் இங்கு வந்துவிடுவோம். இவ்வாண்டு எங்களது குடும்பத்தில் இணைந்த திரு வேலப்பனுடன் தீபாவளி கொண்டாடுவதில் கூடுதல் மகிழ்ச்சி,” என்றார் 42 வயது திருமதி நித்யா.

“தீபாவளி போன்ற திருநாளைக் குடும்பத்தினரோடு கொண்டாடுவதால் குடும்பப் பிணைப்பு கூடும். குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து புத்தாடை வாங்குவது, உணவு தயாரிப்பது, வீட்டை அலங்கரிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாம்,” என்றார் அவர்.

தீபாவளியை மனநிறைவுடன் இன்பமாகக் கழித்ததாக திருமதி சாவித்ரி கூறினார்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து உறவுகளோடு தீபாவளி கொண்டாடிய மகிழ்ச்சயைப் பகிர்ந்துகொண்டார் திரு வேலப்பன். “சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு ஆளில்லாமல் பல நாட்கள் தவித்திருக்கிறேன். இப்போது எனக்கு மகன், மருமகள், பேரக்குழந்தைகள் என புதிய உறவுகள் கிடைத்துள்ளன. நான் என் வாழ்நாளில் கொண்டாடிய தீபாவளிகளில் இதுவே சிறந்தது. இவர்களே எனது உலகம். இவர்களோடு இருக்கும் ஒவ்வொருநாளும் தீபாவளிதான்,” என்றார் திரு வேலப்பன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!