உயர வைத்த தந்தையின் உழைப்பு

மிடில் ரோட்டில் ஒட்டுக்கடை நடத்திக்கொண்டிருந்த திரு அப்துல் கஃபூரிடம் நண்பர் ஒருவர் லோரோங் மலாயு, லோரோங் மர்ஸுக்கி பகுதியில் இருந்த நிலங்களை விற்றுத் தரச் சொல்லிவிட்டு, இந்தியா சென்றுவிட்டார். காடாக இருந்ததால் 15,000 சதுர அடி நிலத்தை ஒரு சதுர அடிக்கு 90 காசுக்கு விலை கேட்டனர். நிலத்தைச் சீர்படுத்தி சதுர அடி 1 வெள்ளி என்று விற்று நண்பருக்கு லாபம் கிடைக்க உதவினார் திரு அப்துல் கஃபூர். 1948ல் அந்த நில விற்பனையில் ஈடுபட்டபோது, எதிர்காலத்தில் தன் மகன்களில் ஒருவர் சிங்கப்பூரின் ஆகப் பெரிய சொத்து நிறுவனத்தை வழி நடத்துவார் என்று திரு அப்துல் கஃபூர் கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை.

‘புரோப்நெக்ஸ்’ சொத்து நிறுவன நிறுவனர்களில் ஒருவராகவும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சொத்துச் சந்தையில் புகழ்பெற்று விளங்கும் திரு இஸ்மாயில் கஃபூர், திரு அப்துல் கஃபூரின் மூன்றாவது மகன்.

சென்ற ஆண்டு சிங்கப்பூர் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள ‘புரோப்நெக்ஸ்’ நிறுவனத்தின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட $200 மில்லியன். சிங்கப்பூருடன், இந்தோனீசியா, மலேசியா, வியட்னாம் ஆகிய நாடுகளிலும் இவரது நிறுவனம் செயல்படுகிறது. திரு இஸ்மாயில் கஃபூரின் கீழ் 10,000க்கும் மேற்பட்ட சொத்து முகவர்கள் செயல்படுகிறார்கள்.

ஓரறை வாடகை வீட்டில் வளர்ந்த இவர் இன்று பல தனியார் வீடுகளுக்குச் சொந்தக்காரர்.

வாழ்வின் திருப்புமுனை

கடுமையான உழைப்பாளியின் மகனாக, சிரமமான சூழலில் வளர்ந்த திரு இஸ்மாயில் கஃபூர் 32வது வயதில் துணிந்து எடுத்த முடிவு அவர் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.

ராணுவ வேலையை விட்டுவிட்டு சொத்துச் சந்தையில் ஈடுபடக் காரணமாக இருந்தது 18 வயதில் அவர் நண்பர் யதார்த்தமாகக் கூறிய ஒரு சாதாரண தகவல்.

“நண்பன் நடராஜாவுடன் கேவனா சாலை வழியே பேருந்தில் போய்க்கொண்டிருந்தேன். அப்போது ஓரிடத்தைக் காட்டி, என் சொந்தக்காரர் ஒருத்தர் இங்கு ஒரு வீட்டை அண்மையில் விற்றார். அதில் அவருக்கு $250,000 லாபம் கிடைத்தது என்றான். கேட்கும்போதே எனக்கு நியாயமில்லாமல் இருந்தது.

“கருங்காலையில் எழுந்து விழுந்தடிச்சு ஓடி பத்திரிகை போடுகிறோம். ஒரு பத்திரிகைக்கு நாலு காசுதான் கிடைக்கிறது... அவர்கள் எப்படி ஒரு சொத்தை விற்று இரண்டரை லட்சம் சம்பாதித்து விடுகிறார்கள் என்று நினைத்தேன். அந்த 18 வயதில் மனதில் ஓர் ஆர்வம் ஏற்பட்டது. பிற்காலத்தில் நான்கு வீடுகள் வாங்க முடிவுசெய்தேன். ஒரு வீட்டுக்கு இரண்டரை லட்சம் என்றால் நான்கு வீடுகளுக்கு ஒரு மில்லியன் என்று கணக்குப்போட்டேன். அப்போது நான் மில்லியனர் ஆகிவிடலாம் என்று நினைத்தேன்,” என்றவர், எத்தனை 4 காசுகள் சேர்த்தால் இரண்டரை லட்சம் வரும் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை என்று சிரித்தார்.

திரு அப்துல் கஃபூர் பத்திரிகை விநியோகஸ்தராக இருந்ததால் அவரது ஐந்து மகன்களும் அவருக்கு பத்திரிகை போட உதவினர். அப்போது அவர்கள் லெங்கோக் பாருவில் குடியிருந்தனர்.

திரு இஸ்மாயில் தினமும் காலையில் 4 மணிக்கு எழுந்து புக்கிட் மேராவில் நான்கு அடுக்குமாடிகளில் 100 வீடுகளுக்கு பத்திரிகை போடுவார். அதன்பின் பள்ளிக்குச் செல்வார். பள்ளி முடிந்ததும் தந்தையின் மளிகைக் கடையில் உதவிசெய்வார்.

“நாங்கள் எல்லாரும் குறைந்தது இரண்டு மணி நேரம் கடையில் உதவ வேண்டும். 18 வயது வரை எங்களுக்கு வீடு, பள்ளி, கடைதான் தெரியும்,” என்றார் அவர்.

ஏழு வயதில் தொடங்கிய இந்த கடின உழைப்பு 18 வயதில் தேசிய சேவையில் சேர்ந்தபோது இஸ்மாயிலுக்கு பலன் அளித்தது.

ராணுவத்தில் உயர் பதவி

தேசிய சேவையில் எல்லாமே அவருக்கு எளிதாக இருந்தது. வீட்டில் நான்கு மணிக்கு எழுந்து பழகியதால், அங்கு 5 மணிக்கு எழுவது அவருக்கு சலுகையாக இருந்தது. எதுவுமே கடினமாக இருக்கவில்லை.

“எங்கள் எல்லாருக்கும் ராணுவம் என்பது சுதந்திரத்திற்கான பாஸ்போர்ட்,” என்றார் இஸ்மாயில்.

அதன் காரணமாக ‘ஓ’ நிலை கல்வித் தேர்ச்சி மட்டுமே பெற்றிருந்த இஸ்மாயில் ராணுவ அதிகாரி பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் உச்ச தேர்ச்சி அடைந்தார். “அக்கம்பக்கப் பள்ளியான தியோங் பாரு உயர்நிலைப் பள்ளியில் படித்த நான் அதிகாரி பயிற்சியில் இடம்பெற்றது பெரிய விஷயம்,” என்றார்.

“அத்தா பட்ட கஷ்டத்தைப் பார்த்துவிட்டு, அந்த மாதிரி தொழிலே நாம் செய்யக்கூடாது” என்ற முடிவில் முழு நேர ராணுவ வீரராக முடிவெடுத்தார். அந்த முடிவைத் தனது தந்தையிடம் கூறவேயில்லை.

அப்துல் கஃபூரின் ஒவ்வொரு மகனுக்கும் இடைவெளி ஈராண்டுகள். சரியாக ஒருவர் தேசிய சேவையைத் தொடங்கும்போது, அடுத்தவர் தேசிய சேவையை முடித்திருப்பார். அதனால் தந்தையின் தொழிலுக்குப் பாதிப்பில்லாமல் இருந்தது.

வீட்டின் நடுப்பிள்ளை இஸ்மாயில். இவரது முடிவு தமது சகோதரர்களுக்கும் தந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அறிந்தே அந்த முடிவை எடுத்தார்.

தலைமைத்துவப் பயிற்சியில் முதல் ஒரு விழுக்காட்டு சிறந்த வீரர்களில் ஒருவராகத் தேர்ச்சி பெற்று, அதிகாரி பயிற்சியில் இடம்பெற்றார். தேசிய சேவையை விரும்பிச் செய்ததாகக் கூறிய அவர், “அந்த சமயத்தில் அதிகாரி பயிற்சியில் இடம்பெற்ற ஒரே முஸ்லிம் நான்தான்,” என்றார். ராணுவத்தில் பணியாற்றிய போது ஏ நிலையும் படிப்பையும் முடித்தார்.

தேர்ச்சி பெற்று ராணுவத்தில் விரைந்து வளர்ச்சியை அடைந்தார். இருந்தபோதிலும், 32வது வயதில் $1 மில்லியன் ஓய்வூதியத்தையும் பொருட்படுத்தாமல், ராணுவத்திலிருந்து வெளியேறினார்.

இன்னும் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தால், ஓய்வூதியத் திட்டத்தில் இருந்த அவருக்கு விருப்ப முன்கூட்டியே பெறும் ஓய்வுத் தொகை கிடைத்திருக்கும்.

எனினும் துணிந்து சுய தொழில் தொடங்க முடிவு செய்தார். தொழிலில் ஈடுபட 17 வயதில் அப்பாவின் கடையை ஓராண்டு பார்த்துக்கொண்ட அனுபவம் உதவியது என்றார் திரு இஸ்மாயில்.

ராணுவத்தில் அறிமுகமான பெண் அதிகாரி நுரைனியை மணமுடித்த இஸ்மாயில் மனைவியுடன் சேர்ந்து 1996ல் ‘நூரிஸ்’ எனும் தமது முதல் சொத்து நிறுவனத்தைத் தொடங்கினார்.

ராணுவத்தில் இருந்தபோதே வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டையும் ராணுவ அதிகாரிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நார்மென்டன் பார்க்கில் தனியார் வீடு ஒன்றையும் தம்பதியினர் வாங்கியிருந்தனர்.

“முன்னாள் அமைச்சர் லிம் சுவீ சேயிடம் $90,000 வாங்கிய வீட்டை $135,000க்கு விற்றேன். நான் வாங்கி விற்ற முதல் வீடு அதுதான்.

சொத்து விற்பனையில் ஈடுபடுவதற்கு முன்னரே வார இறுதி நாட்களில் மனைவியுடன் மாதிரி வீடுகளைப் பார்க்கச் செல்வார்.

முதல் நிறுவனம் தொடங்கிய மூன்றே ஆண்டுகளில் மலாய்/முஸ்லிம் சமூகத்தின் பெயர்பெற்ற சொத்து முகவர் நிறுவனமாக ‘நூரிஸ்’ வளர்ச்சி கண்டது.

250 முகவர்கள் இருந்தபோதிலும் நிறுவனத்தைப் பெரிதாக்க வேண்டும் என்ற இலக்கோடு களத்தில் இறங்கினார் இஸ்மாயில்.

முகவர்கள் சிறப்பாகச் செயல்பட அவர்களுக்குப் பயிற்சி தேவை. அதே நேரத்தில் பயிற்சியை பெரிய அளவில் செய்தால் செலவைக் குறைக்கலாம் என்ற கணக்கைப் போட்டார். அதன் அடிப்படையில் பல நிறுவனங்களை ஒன்றிணைக்க முற்பட்டார்.

அந்த முயற்சியில் பல இடர்ப்பாடுகள். விடாமுயற்சியால் ஐந்து நிறுவனங்கள் இணைந்து ‘புரோப்நெக்ஸ்’ கூட்டுநிறுவனம் 2000 ஆம் ஆண்டு உதயமானது. எனினும் இரண்டாண்டுகளில் ஆகப் பெரிய பங்காளி நிறுவனம் அந்த இணைத் திட்டத்திலிருந்து வெளியேறியது.

அடுத்த ஈராண்டில் அடுத்த சவால். நான்கு தனித்தனி நிறுவனங்கள் ஒரே கூரையின் கீழ் செயல்படும் முறை அவ்வளவு சிறப்பாக இருக்காது என்ற நிலையில் ஒரே நிறுவனமாக இணைய வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்தபோது, அதற்கு அனைவரும் ஒத்துக்கொள்ளவில்லை. என்றாலும், இரண்டு பங்காளித்துவ நிறுவனங்களை வாங்கினார். அன்றிலிருந்து ஒரே இலக்கை நோக்கிய பயணத்தைத் தொடங்கியது ‘புரோப்நெக்ஸ்’.

ராணுவத்திலிருந்து விலகிய பின்னரும் தொடர்ந்து தயார்நிலை ராணுவ வீரராக இருந்து, கர்னல் பதவிக்கு உயர்ந்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் ஓய்வு பெற்றபோது படைப்பிரிவு ஒன்றின் தலைமைத் தளபதியாக இருந்தார்.

“வாழ்க்கையில் எனது கொள்கை ஒன்றுதான். எதைச் செய்தாலும் விரும்பி செய்ய வேண்டும்,” என்றார் நிலப் பொருளியல் துறை பட்டதாரியான திரு இஸ்மாயில் கஃபூர்.

ஏழு வயதில் செங்கல் சுமந்தவர்

தமிழ்நாட்டின் அடமங்குடி எனும் கிராமத்தில் பிறந்த மூன்று பிள்ளைகளில் மூத்தவரான திரு அப்துல் கஃபூர், ஏழு வயதில் குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டிய கட்டாயம்.

கடனை அடைக்கமுடியாமல், அப்பா ஊர் விட்டு ஓடிவிட சிறுபிள்ளைகளுடன் அவர் அம்மா தடுமாறி நின்றார். மாமாமார்களிடையே ஏற்பட்ட பிரச்சினையில், வீடு எரிந்துபோக, வாழ்வை முடித்துக்கொள்ளும் நோக்கத்தில் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு ஆற்றில் விழப்போனார் அவரின் அம்மா. சிறுவன் கஃபூர் அலறவும், மீனவர் ஒருவர் அவர்களைத் தடுத்தார். அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி, ஏழு வயதில் செங்கல் தூக்கும் வேலைக்குச் சென்றார். அங்கு அவருக்கு ஒரு நாளைக்கு முக்கால் அணா சம்பளம்.

பிறகு குடவாசலுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்த கஃபூர், அங்கு பல்பொருள் கடை ஒன்றில் மாதம் மூன்று ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

பிறகு கிராமத்தில் அரசாங்க பட்டாமணியராகப் பணிபுரிந்தார். அப்போது சிங்கப்பூர், ஜூ சியாட் பகுதியில் கடை நடத்திவந்த ஒருவர் கூப்பிட, 34 ரூபாய் கொடுத்து ‘கொசுரா’ எண்ணெய்க் கப்பலில் 13 நாள் பயணம் செய்து நாகப்பட்டினத்திலிருந்து 1945ஆம் ஆண்டு 17வது வயதில் சிங்கப்பூர் வந்தார் கஃபூர்.

அது ஜப்பானியர் ஆட்சி செய்த காலம். வாழ்க்கை போராட்டம் மிக்கதாக இருந்தது. மளிகைக் கடையில் வேலையில் சேர்ந்த அவர், பின் ஒட்டுக் கடையை நடத்தினார்.

1960ல் சிங்கப்பூரில் திருமணம் செய்து குழந்தைகளும் பிறந்தனர். 1967ல் பிரிட்டிஷார் சிங்கப்பூரை விட்டுக்கிளம்பியபோது, திரு கஃபூர் சிங்கப்பூரின் எதிர்காலத்தை நினைத்துப் பயந்தார். குடும்பத்துடன் ரஜூலா கப்பலில் ஊருக்குக் கிளம்பிவிட்டார். சில நாட்கள் சிங்கப்பூர் குறித்து நம்பிக்கையாக நண்பர்கள் சொல்லவும் மனைவி, கடைசி மகனுடன் சிங்கப்பூர் திரும்பினார். இங்கு வந்த பின்னர் மனைவிக்கு பிள்ளைகள் குறித்த ஏக்கம் ஏற்படவும், பிறகு எல்லாரையும் இங்கு வரவழைத்தார்.

“என் பிள்ளைகள் உற்சாகத்துடன் என்னுடன் வேலை செய்யத் தொடங்கிய பின்னர்தான் நான் முன்னேற்றம் அடைந்தேன். என் கடையில் ஐந்து வேலையாட்கள் இருந்தார்கள். ஆனாலும் கண்காணிப்பு, வசூல் வேலைகளில் என் பிள்ளைகளைப் பழக்கினேன். ஐந்து வயது பையன் கூட ஓடி ஓடி வசூல் செய்வான். பிள்ளைகளுக்கு ஓய்வில்லாத உழைப்பு,” என்றார் அவர்.

ஒட்டுக் கடை, மளிகைக் கடை, செய்தித்தாள் விநியோகம் என கிட்டதட்ட 75 வயது வரை ஓய்வில்லாமல் உழைத்த திரு அப்துல் கஃபூர், இன்று 93 வயதில் ஐந்து மகன்கள், மகள், பேரப்பிள்ளைகளுடன் ஓய்வாக இருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!