ஆயிரம் வாழையிலைகளில் பல்வேறு இனத்தவருக்கு விருந்து

- கி.ஜனார்த்தனன்

தமிழர்களின் பாரம்பரிய விருந்துக்கேற்ற விதத்தில் ஆயிரத்திற்கு அதிகமானோர் கலைநிகழ்ச்சி அங்கங்களைக் கண்டுகொண்டே வரிசையாக அமர்ந்து வாழையிலையில் ஒருசேர உண்டனர். ‘மங்கள தீபாவளி’ என்ற அந்த விருந்து நிகழ்ச்சி வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்றத்தில் நேற்று முன்தினம் ( நவம்பர் 23ஆம் தேதி) இரவு நடைபெற்றது. 

தீபாவளி நிகழ்ச்சி இங்கு  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டுதோறும் நடைபெற்று வந்தாலும் இந்நிகழ்ச்சியில் 1,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டது இதுவே முதல்முறை. “இத்தனை பேரைத் திரட்டுவதற்கு ஏற்பாட்டுக் குழுவினர் வாரயிறுதிகளில் பொது இடங்களில் காத்திருந்து வட்டாரக் குடியிருப்பாளர்களை அணுகினர். 

“ஈரச்சந்தை, உணவங்காடி நிலையம் போன்ற பொது இடங்களில் மக்களிடம் பேசி அவர்களுக்கு நுழைவுச்சீட்டுகளை விற்று வந்தோம். இந்த நுழைவுச்சீட்டுகள் வசதி குறைந்தோருக்கு இலவசமாகவே கொடுக்கப்பட்டன“ என்று வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்றத்தின் இந்திய நற்பணிச் செயல்குழுத் தலைவர் நசீர் கனி தெரிவித்தார்.

(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)
(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

இது தீபாவளி நிகழ்ச்சியாக இருந்தபோதும் சிங்கப்பூரின் பல இன கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் அம்சங்கள் இதில் இணைக்கப்பட்டிருந்தன. சீனத் தோட்டத்திலிருந்து சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விளக்கு பொம்மைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. அத்துடன் கலைநிகழ்ச்சிகளில் தமிழ்த் திரைப்படப்பாடல்கள் மட்டுமின்றி மலாய், சீன பாடல்களையும் இந்திய இனத்தவர்கள் பாடினர். மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட சில நடனங்களும் அரங்கேறின.

நிகழ்ச்சியின்போது வசதி குறைந்த சில குடும்பங்களுக்கு நன்கொடை அளிக்கப்பட்டது. ஜாமியா இல்லத்திலிருந்து இருபது பேரும் சுற்றுவட்டாரத்திலிருந்து 120க்கும் அதிகமான வசதி குறைந்தோரும் நிகழ்ச்சியின் மூலம் பலனடைந்தனர். 

அபிராமி, முஸ்தஃபா டிரேடிங், லீ பவுண்டேஷன், ஷல்லீஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நன்கொடைகளுக்கு ஆதரவளித்தன.

கொண்டாட்டச் சூழலில் அக்கம்பக்கத்தாருடன் பொழுதை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கு இந்நிகழ்ச்சி சிறந்த வாய்ப்பாக அமைந்திருந்ததாக சுய தொழில் செய்யும் திருமதி லோகேஸ்வரன் செண்பகம் தெரிவித்தார். 

“நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் எனக்குத் தெரிந்தவர்களே.  குடும்ப நிகழ்ச்சிக்குச் செல்வது போன்ற உணர்வு இருந்தது. இதனால் எங்களுக்கிடையே ஒற்றுமை வலுவாகிறது,” என்றார் 32 வயது திருமதி செண்பகம். 

“என் அம்மாவுக்காக நான் வந்தேன். இங்கு எனது குடும்பத்தினரையும் பள்ளி நண்பர்களையும் பார்க்க முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி,” என்றார் திருமதி செண்பகத்தின் ஏழு வயது மகன் பவேஷ் லோகேஸ்வரன்.

முதன்முறையாக தீபாவளி சமூக நிகழ்ச்சிக்கு வந்திருந்ததாகக் கூறும் சீன இனத்தவரான ரீனாவும் நிகழ்ச்சியின்போது பரிமாறப்பட்ட உணவை மிகவும் விரும்பியதாகக் கூறினார். 
“இந்திய உணவு என்றாலே எனக்கு அலாதி பிரியம். நான் மட்டுமின்றி எனது கணவரும் கடைசி மகளும் இந்நிகழ்ச்சியை விரும்புகின்றனர்,” என்று 39 வயது ரீனா கூறினார்.  

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொடர்பு, தகவல் அமைச்சரும் வெஸ் கோஸ்ட் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஈஸ்வரன் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்.  

இந்தியர் அல்லாதோரையும் உடன்சேர்க்க ஏற்பாட்டுக் குழுவினர் எடுத்திருந்த முயற்சிகளையும் கலைநிகழ்ச்சி அங்கத்தில் வேற்று மொழிப் பாடல்கள் சேர்க்கப்பட்டதையும் அவர் பாராட்டினார். 
இத்தகைய நிகழ்ச்சிகள் காலத்திற்கு ஏற்ற விதத்தில் தொடர்ந்து மாறவேண்டும் என்று திரு ஈஸ்வரன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

ஆடல் பாடல் அவசியம் என்றாலும் இளையர்கள் அதையும் தாண்டிய ஆழமான கலாசார அம்சங்களில் இணைந்து அதை நவீன சிங்கப்பூருக்கு ஏற்ற விதத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் திரு ஈஸ்வரன் கூறினார்.