சுடச் சுடச் செய்திகள்

சாகசம் புரியும் மாறுபட்ட நடனமணிகள்

நடனத்தில் சிறந்து விளங்க நடனத்தின் அரசர் எனப்படும் பிரபல நடனக் கலைஞர் பிரபு தேவா போல பிறக்க வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் உடல் குறைபாட்டையும் தடையாக கருதாமல் நடனத்தில் சாகசம் புரியும் கலைஞர்கள் நம்மில் உள்ளனர். 

அந்த வரிசையில் உள்ளூரில் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் நடனப் படைப்புகளை மேடையேற்றி அசத்தியுள்ளனர் ‘டான்சர்ஸ் வித் டைவெர்ஸ் எபிலிடிஸ்’ (Dancers with Diverse abilities) என்ற நடனக் குழு. மாயா நடன அரங்க அமைப்பின் ஒரு பிரிவு இக்குழு. 

மொத்தம் 10 கலைஞர்களை உள்ளடக்கிய இக்குழு, கடந்த மாதம் 9ஆம் தேதியன்று சென்னையில் அமைந்திருக்கும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி), ஏறத்தாழ 350 பார்வையாளர்கள் மத்தியில் தங்களது நடனப் படைப்பை வழங்கினர். ‘சாராங் 20’ என்ற வருடாந்திர கலாசார விழாவின் ஒர் அங்கமாக இந்த நிகழ்ச்சி அரங்கேறியது. 

சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் உதவி தலைமைத் தூதரக அதிகாரி திரு ஐவன் டான், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 

“இளையர்களும் பெரியவர்களும் தங்களின் உடல் குறைப்பாட்டைப் பொருட்படுத்தாமல் கலைத் துறையில் பங்களிப்பதற்கு வாய்ப்புகள் வழங்கும் நோக்கத்துடன் ‘டான்சர்ஸ் வித் டைவர்ஸ் ஏபிலிடிஸ்’ நடனக் குழுவை 2018ஆம் ஆண்டில் தொடங்கினோம். 

தொடங்கிய நாள் முதல் இன்று வரை பல மடங்கு வளர்ந்துள்ளதற்கு, உற்சாகத்துடன் பங்கேற்கும் அதன் உறுப்பினர்களே காரணம்,” என்றார் மாயா நடன அரங்க அமைப்பின் இணை நிறுவனரும் கலை இயக்குநருமான கவிதா கிருஷ்ணன். 

கிட்டத்தட்ட 75 நிமிடங்கள் நீடித்த படைப்பு “Speaking with Hands & Dancing Anklets” என்று அழைக்கப்பட்டது. இந்தப் படைப்பில் கவிதா இயக்கிய “கொன்ஃபுளுவன்ஸ்” (Confluence), ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடன இயக்குநரும் கலைஞருமான லிஸ் லியே இயக்கிய “மூன் ஷெடோ” (Moon Shadow) போன்ற நடன அங்கங்கள் இடம்பெற்றன. 

வயலின் இசைக்கருவி கலைஞர் திரு கய்லின் யோங்கும் (Kailin Yong) அவரின் 18 மாதக் குழந்தையும் மூன்று நடனக் கலைஞர்களும் சேர்ந்து ஒரு படைப்பை வழங்கினார்கள். 

அத்துடன் தமிழ் நாட்டுப்புறம் மற்றும் பாலிவுட் கருப்பொருட்களைக் கொண்ட ஒரு படைப்பும் பரதநாட்டியத்தை மையமாக்கி படைக்கப்பட்ட நவீன நடனப் படைப்பு ஒன்றும் மேடையேற்றப்பட்டன. 

“தமிழ் நாட்டுப்புறம், பாலிவுட் நடன அங்கம் எனக்கு மிகவும் பிடித்தது. அதில் இடம்பெற்ற வெற்றி வேலா, சங்கமம் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தன.

“மற்றவர்களிடம் என் திறனைக் காட்டவேண்டும் என்ற உத்வேகத்துடன் ‘டான்சர்ஸ் வித் டைவெர்ஸ் எபிலிடிஸ்’ குழுவில் சேர்ந்தேன். என் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. என் உடல் எடை குறைந்துள்ளதுடன் என் ஆரோக்கியமும் கூடியுள்ளது,” என்றார்  ‘டான்சர்ஸ் வித் டைவெர்ஸ் எபிலிடிஸ்’ குழு உறுப்பினரான ஜெஸ்பிரீட் கோர் (Jaspreet Kaur), 39. 

மறுநாளான ஜனவரி 10ஆம் தேதியன்று இந்தியாவின் ‘டவுன் சிண்ட்ரம்’ சம்மேளனத்தோடு நடன கலைப் பரிமாற்ற நிகழ்ச்சி ஒன்றையும் மாயா நடன அரங்க அமைப்பு நடத்தியது. 

நடனப் படைப்புகள் உட்பட யோகா போன்ற இதர நடவடிக்கைகளும் நடந்தேறின.

பாத்லைட் பள்ளியில் ‘ஆட்டிசம்’ குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இணை பயிற்றுவிப்பாளராகவும் இருக்கும் ஜெஸ்பிரீட், அவர் எழுதிய கவிதை ஒன்றையும் இந்த நிகழ்ச்சியில் வாசித்துக் காட்டினார். 

“ஜெஸ்பிரீட் சிங்கப்பூர் டவுன் சிண்ட்ரம் சங்கத்தில் நீண்டகால உறுப்பினராக இருந்து வருகிறார். மற்றவர்களுக்கு உதவும் நல்ல குணத்துடன் நடனக் கலை மூலம் மேம்பட்டவர். அவர் போல மேலும் பலரை நடனத்தின் மூலம் ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்வோம்,” என்றார் மாயா நடன அரங்க அமைப்பின் கவிதா கிருஷ்ணன்.   

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon